காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) எனும் பாதணி தொழிற்சாலையின் உரிமையாளரே நேற்று இரவு 7.30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இதுபற்றி அவரது மனைவி பாத்திமா நஸ்லியா இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று நேற்று இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியவரே இரவு 7.30 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
அவர் கடைசியாக அந்த உணவகத்திலிருந்து வெளியேறியபோது பதிவான சிசிரிவி காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த வர்த்தகர் மாயமாய் மறைந்த சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.