வட மாகாணத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் என காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹால் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்களினதும் ஒவ்வொரு பிரச்சினைகளும் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இதன்போது ஏனைய அரச திணைக்களங்களுடனான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி, வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் வசம் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் என்பனவற்றை ஆளுநர் ஊடாக விடுவிக்கக் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் என காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து மணல் அகழ்வுக்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது எனவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணியை குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ள வேறு திணைக்களங்களும் அதனை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளை புதிதாக வழங்குவது மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் முன்னெடுக்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் பணித்தார்.
மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவான சிக்கல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணியை தனி ஒரு நபர் மன்னாரில் பயன்படுத்துவதும் இந்தக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்டது.
அது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு ஊடாக அணுகுவதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் – காணி, பிரதேச செயலாளர்கள், தென்னை அபிவிருத்திச் சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.