Breaking
Sun. Nov 24th, 2024

கழிவுநீரை சுத்திகரித்து வீட்டுத் தேவைகளுக்கும், தோட்டங்களுக்கும் உபயோகப்படுத்துவதைத் தாண்டி அதை குடிநீராக மாற்றிப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை இன்ஜினியரிங் மாணவி கிரிட்டா.

மதுரை சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் கிரிட்டா, தனது கல்லூரி ஆய்வுக்காக பெயருக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்து முடிப்பதில் விருப்பமின்றி சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டு அதுதொடர்பான ஒரு கண்டுபிடிப்பினையும் நிகழ்த்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனது கண்டுபிடிப்பு கருவிக்கான ‘ பேட்டென்ட் ரைட்ஸ்’ வாங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள மாணவி கிரிட்டாவை சந்தித்தோம்.

“வெறும் மதிப்பெண்களுக்காக அல்லாமல் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் என்னுடைய ப்ராஜெக்ட் இருக்கணும் என்பது என் ஆசை. அந்த சிந்தனையால்தான் இப்போது ஒரு கருவியையே கண்டுபிடிக்க முடிஞ்சது.

இன்றைக்கு தண்ணீர் பஞ்சம்தான் கிராம, நகர வித்தியாசமின்றி இருக்கக்கூடிய பிரச்சினை. இன்றைய எல்லா சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் காரணம் நாம் இயற்கையை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்ததுதான். ஆனால் மறுபடியும் இயற்கையை தேடிப்போனால் நிச்சயம் எல்லா சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்னு நம்பி ஆய்வைத் தொடங்கினேன்.

இப்போ கண்டுபிடித்திருக்கும் கருவியில் கழிவுநீரை குடிநீரா மாற்ற மூன்று நிலைகள் இருக்கு. இதற்கான சாம்பிள் வாட்டராக நான் மருத்துவமனை கழிவுநீரை எடுத்துக்கொண்டேன். மருத்துவக் கழிவுகள் அனைத்தும் கலந்து வந்த நீரை எடுத்து வந்து எரிமலைக் கற்கள் என்று கூறப்படும் ‘பயோ ரியாக்டர்’ கற்கள் நிறைந்த பாத்திரத்தில் ஊற்றினேன். இப்படி நான்கு நாட்கள் அசைவற்ற நிலையில் வைத்திருந்தால், எரிமலைக் கற்களில் உள்ள பாக்டீரியாக்கள் கழிவுநீரிலுள்ள கிருமிகளுடன் எதிர்வினையாற்றி நீரின் நிறத்தையும், துர்நாற்றத்தையும் முழுமையாக நீக்கிவிடும்.ST2

இதற்கடுத்து அந்நீரை நிலக்கரி, ஜல்லி, ஆற்றுமணல் நிறைந்த பாத்திரத்தில் ஊற்றிவைப்பதால் அதிலுள்ள கழிவுத்துகள்கள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த நீரினை தோட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் குடிநீராக்க வேண்டுமெனில் ‘ஓசோனேஷன்’ என்னும் மூன்றாம் நிலையை செயல்படுத்தணும். இதற்கான பிரத்யேகக் கருவியை தண்ணீருக்குள் செலுத்தும்போது கிருமிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு குடிப்பதற்கு ஏற்ற நன்னீராக மாறுகிறது.

இந்த கருவியை சிறிய அளவில் செய்திருப்பதால் ஒரு குடும்பத்தின் வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு உதவியா இருக்கும். ஆனால் இதையே பள்ளி, கல்லூரி, பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பெரிய அளவிலும் செய்யலாம். வீட்டளவில் செய்துள்ள இந்த கருவியை உருவாக்குவதற்கான செலவு 15,000 ரூபாய். எதிர்காலத்தில் பெரிய அளவில் இந்தக் கருவியை செய்து செயல்படுத்திக் காட்டவேண்டும்  என்பதே என் கனவு” என்றார்.

கிரிட்டாவின் இந்த கண்டுபிடிப்புக்கு பல அமைப்புகளிலிருந்தும், தனிமனிதர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *