Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை)

இனவாதம் தான் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ள மிகப் பெரிய சாபக் கேடு.சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ கொழும்பைப் போல் சிங்கப்பூரை மாற்ற நினைத்தார்.இன்று சிங்கப்பூரைப் போல் கொழும்பை மாற்ற வேண்டிய நிலையில் இலங்கை நாடுள்ளது.இலங்கை வளங்கள் மிகைத்துக் காணப்படும் ஒரு நாடாகும்.இதனுடைய வளங்களை சிறந்த முறையில் கையாண்டிருந்தால் எப்போதே இலங்கை வளர்ச்சி கண்டிருக்கும்.

இதன் அத்தனை வளங்களையும் யுத்த அரக்கன் குடித்துவிட்டான்.இன்று இனவாதத்தால் கருக்கொண்ட யுத்தம் கலைந்துவிட்டது.யுத்தம் ஓய்ந்துவிட்ட பிறகு இனவாதிகளின் கை மேலோங்க ஆரம்பித்துள்ளது.இது மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சியில் தான் நடைபெறுகிறதென நினைத்தால் மைத்திரியின் ஆட்சியிலும் நின்றபாடில்லை.இனவாதம் பார்த்திருந்தால் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நாடு ஒரு தங்கம்,வெங்கலப் பதக்கத்தை இழந்திருக்கும்.இதையெல்லாம் உணர்ந்து செயற்படுவதே சிறந்தது மக்களுக்கும் சிறந்தது.

 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடிக்க வந்த கதையாட்டம் அங்கே இங்கே கை வைத்து வந்த இனவாதிகள் இன்று முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் கல்முனையில் தங்களது இனவாத முகங்களை கழுவிக் கொள்ள வந்துள்ளார்கள்.கல்முனையில் 19 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற இளைஞர் மத்திய நிலையம் மற்றும் கல்முனையில் இயங்கி வரும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஆகியவற்றையும் இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அறிய முடிகிறது.இதற்கு முன்பு நிந்தவூர் தொழிற் பயிற்சி மாவட்ட காரியாலயத்தையும் இடமாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கல்முனையில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நகர காரியாலயம் (NHDA CITY OFFICE) சில வருடங்கள் முன்பு அம்பாறையுடன் இணைக்கப்பட்டு கல்முனையில் காணப்பட்ட வளங்கள் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டுமிருந்தது.இது வரை அம்பாறையில் இருந்த ஒரு அலுவலகம் கூட அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு இடமாற்றப்பட்டதை நான் செவியுற்றதில்லை.இவைகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் குவித்து  சிந்திக்கும் போது அன்றும் இன்றும் இனவாதம் தலைவிரித்தாடுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

 

சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலையம் மற்றும் கல்முனை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபைகளின் இடமாற்ற முயற்சிகள் முஸ்லிம் அரசியல் வாதிகளின் தலையீட்டினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மீண்டும் எப்போது இப் பிரச்சினைகள் மீள் எழும் என நாட்களை எண்ணிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.கல்முனையில் 19 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுவிட்டது.இக் காரியாலயமானது  1996ம் ஆண்டளவில் மர்ஹூம் அஷ்ரபின் பெரு முயற்சியினால் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

2000ம் ஆண்டு தோற்றம் பெற்ற ஐ.தே.க ஆட்சியில் இவ் அலுவலகம் கல்முனையில் இருந்து பிறிதொரு இடத்திற்கு இடமாற்றப்பட்டிருந்தது.இதனை அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மயோன் முஸ்தபா அப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்கயுடன் பேசி மீண்டும் கல்முனைக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு மயோன் முஸ்தபா போன்ற அரசியல் வாதி ஒருவரின் தேவை உணரப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இவ் அலுவலகத்துடன் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய இருவரின் நாமங்கள் பேசப்படக்கூடியவர்கள் அ.இ.ம.காவில் வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இவ் அலுவலகங்கள் இடமாற்றப்படுவதற்கு முன் வைக்கப்படும் பிரதான காரணம் போதியளவு இடவசதி இல்லாமையாகும்.உயர் அதிகாரிகள் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தப் போல் இக் காரணிகளை கூறுகிறார்களாம்.கல்முனையில் போதியளவு இடவசதி இல்லை என்றால் அது அம்பாறைக்குத் தான் செல்ல வேண்டியதில்லை.அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் ஒன்றிற்கும் அதனைக் கொண்டு சென்றிருக்கலாம்.கல்முனையில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு அதனை அம்பாறைக்கு இடமாற்றி இருந்தாலும் சிறிது ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு பிரதேசத்தில் ஒரு அலுவலகத்தை தொடர்வதற்கு ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனை அப் பிரதேசத்திற்குரிய பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டு மாற்றுத் தீர்வுகளை சிந்திப்பதுவே நடை முறையில் கையாளப்படும் ஒரு வழி முறை.அத்தகைய வழி முறைகள் எதுவும் இவ்விடயத்தில் கையாளப்படாமையைப் பார்க்கும் போது அங்கே இன வாதம் தலைவிரித்தாடுவதை புரிந்துகொள்ள முடிகிறது.மேலும்,ஏற்கனவே அம்பாறையில் ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உள்ள போது மீண்டும் அங்கு இவ் அலுவலகத்தையும் கொண்டு சென்றுள்ளமை இனவாதிகள் வேண்டுமென்றே முஸ்லிம்களை குறி வைப்பதை தெளிவு படுத்துக்கிறது.

 

இவ் இடமாற்றம் தொடர்பில் இவ் இடமாற்றம் இடம்பெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே குறித்த இடத்தின் உரிமையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த சிலர் மு.கா,அ.இ.ம.கா பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் 22.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது,கல்முனை ஜும்மா பள்ளிவாயல்களில் ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு முன் கூட்டியே பல வழிகளில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த போதும் இவ் விடயத்தில் இக் குறித்த இடமாற்றம் இடம்பெறுவதற்கு ஒரு வாரம் முன்பு தான் மு.கா பிரதிநிதிகள் கவனம் செலுத்திருந்ததாக கூறப்படுகிறது.இவ் விடயத்தில் அனைத்து முஸ்லிம் தலைமைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டிய கடமை உள்ள போதும் மு.காவிற்கு ஏனையவர்களை விட ஒரு படி மேல் கல்முனை விடயத்தில் அக்கரை காட்ட வேண்டிய கடப்பாடு உள்ளது.இது தொடர்பில் அ.இ.ம.கா எதுவித சிறு கவனமும்,முயற்சியுமின்றி  இருந்தமை இங்கு கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

இவ் விடயத்தில் மு.கா பிரதிநிதிகள் மூக்கை நுழைத்திருப்பதால் தங்கள் மூக்கை நுழைக்க விரும்பவில்லையென அ.இ.ம.காவினர் சிலர் நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்.பிறர் செய்த ஒரு வேலையைக் கூட  தானே செய்தேன் என உரிமை கொண்டாடி அரசியல் இலாபம் காண முயற்சிக்கும் இன்றைய அரசியல் உலகில் அ.இ.ம.காவினர் இக் குறித்த காரணத்தால் தான் விலகியதாக குறிப்பிடுவதை ஏற்பது கடினமாகத்தான் உள்ளது.இந்த வகையில் அ.இ.ம.கா ஒதுங்குவதாக இருந்தால் கூட மு.கா இவ் விடயத்தில் எந்தளவு கரிசனை கொண்டுள்ளது,திறம்படக் கையாளுமா என்பதை இவர்கள் அவதானித்திருக்க வேண்டும்.இவ் விடயத்தை மு.காவால் செய்ய முடியாதென்றால் தாங்கள் முயற்சித்தாலும் செய்ய முடியாது என அ.இ.ம.கா விலகிக்கொண்டதோ தெரியவில்லை.

 

இவ் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பிரதி அமைச்சர் ஹரீஸ் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனக் கூறி இருந்தார்.இவ் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முதல் நாள் மு.கா பிரதிநிதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொறலையை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போது இவ் இடமாற்றம் இடம்பெறாது என அவர் உறுதியளித்ததாகவும்  குறிப்பிட்டிருந்தனர்.இறுதியில் செல்பி பிடித்து முக நூலில் லைக் பெற்றதைத் தவிர எஞ்சியது வேறு எதுவுமல்ல.இவ்வாறு உறுதிமொழி அளித்த மறுநாளே இவ் அலுவலகம் இடமாற்றப்பட்டமை பல சந்தேகங்களை கிளறி விடுகிறது.குறித்த மு.கா பிரதிநிதிகள் பொய் சொன்னார்களா அல்லது அமைச்சர் தலதா அத்துக்கொறள இவர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாரா?

இவ் விடயங்களை நன்கு சிந்திக்கும் போது மு.கா பிரதிநிதிகளிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொறல்ல ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்துவிட்டு தங்களது ஆட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர் போன்றே தோன்றுகிறது.அதாவது மு.கா பிரதிநிதிகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதும் இதில் பொதிந்துள்ள மற்றுமொரு விடயமாகும்.இவ் விடயம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமும் பேச்சு நடாத்தியாக ஊடகங்களில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் விடயம் தொடர்பில் மு.காவினர் கரிசனை கொண்டிருப்பின் இத்தனை நாள் காலம் தாழ்த்தி இவ் விடயத்தை கையாண்டிருக்க மாட்டார்கள்.

அத்தோடு இவ் விடயம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து மாத்திரம் முடிக்கும் ஒன்றுமல்ல.இவ் அலுவலகத்தை முறைப்படி இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் முஸ்லிம் அரசியல் வாதிகள் முறைப்படி இவ் விடயத்தை அணுகிருக்க வேண்டும்.

 

இவர்களின் இட வசதி போதாது என்ற கோரிக்கைக்கு அமைச்சர் ஹக்கீம் பொருத்தமானதொரு இடம் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்ததாக ஊடகங்களில் வெளி வந்திருந்தன.இதன் பிற்பாடு போதியளவு இடவசதி இல்லாமையால் தான் இக் குறித்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் பைசால் காசீமும் கூறி இருந்தார்.இவ் இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் போது மு.காவால் தகுந்த இடவசதியுள்ள ஒரு இடத்தை அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமை உறுதியாகிறது.

என்ன தான் இனவாதம் தாக்கம் செலுத்தினாலும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் இயலாமையை குறித்த இனவாதிகள் சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.கல்முனையில் குறித்த அலுவலகம் செயற்படுவதற்கு பொருத்தமான இடமில்லை என்பதை மு.கா பிரதிநிதிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் அல்லது தங்களது பொடுபோக்குத் தனங்களை ஏற்றுகொள்ள வேண்டும்.இச் சாதாரண விடயத்தைக் கூட திறம்பட கையாள முடியாதவர்கள் நாட்டின் அமைச்சுக்களை எவ்வாறு கையாளுவார்கள் என்பதை சொல்லத் தேவை இல்லை.

ஆரம்பத்தில் இது ஒரு தற்காலிக இடமாற்றம் என்றே மு.காவினரால் கூறப்பட்டிருந்தது.தற்போது இவ் அலுவலகம் மீள கல்முனைக்கு வரும் என்பதற்கான சிறு சமிஞ்சைகள் கூட இல்லை.முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு குறித்த விடயத்தை திறம்படச் செய்கிறார்களோ இல்லையோ மக்களை ஏமாற்றுவதற்கான அத்தனை வழி முறைகளையும் நன்கு அறிந்துவைத்துள்ளார்கள்.

 

இவ் அலுவலகம் இடமாற்றப்பட்டதன் பிற்பாடு அ.இ.ம.கா இவ் விடயத்தை கையாள முயற்சித்தது.இன்னுமொரு புறம் மு.காவும் முயற்சி செய்து கொண்டிருந்தது.அ.இ.ம.கா இவ் விடயத்தை வெற்றி கொண்டிருந்தால் அது மு.காவிற்கு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திருக்கும்.இதுவும் அ.இ.ம.காவிற்கு நன்றாகவே தெரியும்.இருவரும் முயற்சி எடுத்ததால் இவ் விடயத்தில் வெற்றி கிடைக்கும் என முஸ்லிம்களும் எண்ணினர்.இறுதியில் எல்லோருடைய முயற்சிகளும் வீணாய் போய்விட்டது.இச் சிறிய இனவாதத்தைக் கூட எதிர்கொள்ள முடியாதவர்களால் எங்கனம் இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதத்தை திறம்பட எதிர்கொள்ள முடியும்.இதனைக் கூட சாதிக்க முடியாதவர்களால் நிச்சயமாக எதனையும் சாதிக்க முடியாது.இப்படியான நிலையில் உடன்பாட்டு அரசியல் ஒரு போதும் பொருத்தமானதல்ல.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தும் முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க முடியவில்லை.அமைச்சர் றிஷாத் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்தும் முஸ்லிம்களை மீள் குடியேற்ற முடியவில்லை.அவ்வாறானால் ஏன் இவர்கள் இவ் அமைச்சுக்களை அலங்கரித்தார்கள்? இவ்வாறான ஒரு நிலைமை தான் மீண்டும் தோன்றம் பெறுகிறது.முஸ்லிம் அரசியல் வாதிகளால் இவ் ஆட்சியில் எதையும் செய்ய முடியவில்லை என்றால் இவ் ஆட்சியில் நிலைத்திருப்பதை விட எதிர்த்து பயணிப்பது சிறப்பானது.

 

இவ் இடமாற்றத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயாகமகே உள்ளதாக கூறப்படுகிறது.வெளி நாட்டு வேலை வாய்ப்புக்களில் பேரின மக்களை விட முஸ்லிம்,தமிழ் மக்களே அதிகம் நாட்டம் கொண்டுள்ளார்கள்.இதன் காரணமாக பேரின மக்கள் செறிந்து வாழும் அம்பாறையை விட தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இடமொன்றில் இவ் அலுவலகம் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது.கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரமே வெளி நாட்டு வேலை வாய்ப்புகளில் தான் தங்கியுள்ளது.இதன் காரணமாக அதிகமான மக்கள் புழங்கக்கூடிய ஒரு அலுவலகமாகவும் இவ் அலுவலகம் உள்ளது.இலங்கையில் உள்ள வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகங்களில் கல்முனையில் இயங்கிய இவ் அலுவலகம்  அதிக இலாபத்தை ஈட்டிக் கொடுத்திருந்தது.

அம்பாறையில் இயங்கிய அலுவலகம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் ஒரு கதை உள்ளது.இவ் அலுவலகத்தை அம்பாறைக்கு இடமாற்றம் போது நஷ்டத்தில் இயங்கும் குறித்த நிறுவனத்தை மீள கட்டியெழுப்பலாம்.அத்தோடு அம்பாறையில் மக்கள் புழங்கத்தையும் அதிகரிக்காலாம்.அம்பாறை மாவட்டத்தின் தலைநகர் கல்முனையா? அம்பாறையா? என்ற போட்டி மறைமுகமாக அரசியல் அரங்கில் சென்றுகொண்டிருக்கின்றது.மக்கள் புழக்கமே குறித்த ஊரில் மதிப்பை நிலை நிறுத்தும்.இதற்கு இவ்வாறான நிறுவனங்களை அக் குறித்த பிரதேசங்களுக்கு இடமாற்றுவதும் பொருத்தமானது.

 

தயா கமகேயிற்கும் மு.காவிற்குமிடையிலான மோதல் தயா கமகே அரசியலில் கால் வைத்த நாளிருந்தே ஆரம்பித்துவிட்டது.கடந்த பாராளுமன்றத் தேர்தலில தயா கமகே மு.காவை வீழ்த்த தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.மு.காவும் தயா கமகேயை வீழ்த்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இதன் முயற்சிகளில் ஒன்றாகத் தான் சம்மாந்துறையில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கான ஏற்பாடுகளையும் குறிப்பிடலாம்.கல்முனை யாராலும் அசைக்க முடியாத மு.காவின் பலமிக்க கோட்டையாகும்.இதில் இப்படியான சம்பவங்கள் அரங்கேறுவது மு.காவிற்கு அதிக சவாலை ஏற்படுத்துவதோடு மக்களை மு.கா மீது அதிருப்தியடையைச் செய்யும்.இவ்வாறானவற்றை மையப்படுத்தியும் இச் சம்பவங்கள் அரங்கேறலாம்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மு.காவினை வீட்டிற்கு அனுப்ப திரைமறைவில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்,அ.இ.ம.காவினால் அம்பாறை மாவட்டத்தில் கைத் தொழில் பேட்டை ஒன்றிற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அம்பாறையில் அ.இ.ம.காவும் வேரூன்றி இருப்பதால் தயா கமகேவிற்கு முஸ்லிம் வாக்குகள் செல்லும் வழிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக தயா கமகே அம்பாறை பேரின மக்களைக் தன் பக்கம் முற்றாக ஈர்த்து தனது இராஜ்ஜியத்தை பலப்படுத்திக் கொள்வது பொருத்தமானது.இதனை அறிந்தும் தயா கமகே இத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளலாம்.

 

தயா கமகே இன்றைய அரசில் முக்கிய கதா பாத்திரம் வகிப்பவர்களில் ஒருவர்.அவரை ஏனையோர்களைப் போன்று சாதாரணமாக எடை போட முடியாது.எனினும்,முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகிய இரண்டும் மோதியும் முடியாமல் போகுமளவு பலமிக்கவராக குறிப்பிட முடியாது.அவ்வாறு இதில் அரசியல் அழுத்தங்கள் இருப்பின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.இவ் இடமாற்றமானது முஸ்லிம் தலைமைகளின் இயலாமையையும்,பொடுபோக்கையும் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது இயலாமையை இனவாத சாயம் பூசி மறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்களா? என்ற வினாவும் எழாமலில்லை.

குறித்த அலுவலகம் வாடகை இடமொன்றிலேயே கல்முனையில் இயங்கி வந்தது.இதனை ஒரு அரச இடமொன்றிற்கு இடமாற்றம் போது வாடகை செலவீனத்தை கட்டுப்படுத்த முடியும்.இதனை மையப்படுத்தியும் அரசாங்கம் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.இவ் அலுவலகம் அதிக இலாபத்தை ஈட்டிக்கொடுப்பதால் வாடகையை ஒரு பொருட்டாக கவனத்திற்கொள்ள வேண்டியதில்லை எனக் கூறவும் வாய்ப்புள்ளது.அரச அலுவலகங்கள் ஒரு இலாபத்தில் இயங்கும் அலுவலக இலாபத்தை நஷ்டத்தில் இயங்கும் அலுவலகத்தில் போட்டு சமப்படுத்தியே இயங்குகின்றன.இந்த வகையில் சிந்திக்கும் இத்தகைய நகர்வுகளில் பிழை இருப்பதாக குறிப்பிடவும் முடியாது.

 

மர்ஹூம் அஷ்ரபினால் கொண்டுவரப்பட்ட இவ் அலுவலகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் கட்சிகளுக்குள்ளன.அதிலும் குறிப்பாக மு.காவிற்குண்டு.மர்ஹூம் அஷ்ரப் இவ் அலுவலகத்தை கொண்டு வந்து சேர்த்துவிட்டு மறைந்துவிட்டார்.இதில் எழத்தக்க பிரச்சனைகளை இனங்கண்டு அதனை சரி செய்யும் வேலையை தற்போதைய தலைமை செய்திருக்க வேண்டும்.அதனைச் செய்யத் தவறியமை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதனை படிப்பினையாகக் கொண்டு முஸ்லிம் பகுதிகளிலுள்ள ஏனைய வாடகைகளில் இயங்கும் அரச அலுவலகங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்ற முயற்சிப்பதோடு ஏனைய இடர்பாடுகளையும் ஆராய்ந்து தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும்.இவ் அலுவலகத்தைக் கூட தக்கவைக்க முடியாதவர்களால் அம்பாறை கரையோர மாவட்டத்தை,இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கு பொருத்தமான தீர்வை பெற்றுத் தர முடியும் என நம்பி முஸ்லிம்கள் நிம்மதிப் பெரு மூச்சு விடுவார்களாக இருந்தால் அது மடமையைச் சாரும்.

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *