பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கருணா வரிசையில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பதிவு

காக்கை வன்னியன் கருணா வரிசையில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பதிவு செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறான ஒரு துரோகப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று நாம் தமிழர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம், ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழினமே சிதறுண்டு அடி நாதமே இல்லாமல் போய் விடும் என்பது எமக்கு நன்கு தெரியும்.
அப்படியாக இருந்தும் எம்மைப் பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் இன்று பல சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் பேரவை ஊடாக இன்னும் ஒரு கட்சி அமைக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்த வண்ணம் இருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவை என்று உருவாகும் போது அது அரசியல் சார்ந்தது அல்ல, பொது மக்களுக்கான ஒரு பொது அமைப்பு தான் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்று அதே மேடையில் அவர்கள் நா கூசாமல் அரசியல் பற்றியும் கட்சிகள் பற்றியும் பேசி தமிழர்களின் ஒற்றுமையை அழிப்பதற்காகத் திட்டமிட்டுள்ளார்கள். இது உண்மையில் கவலைக்குரிய ஒரு விடயம்.
இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகவே விக்னேஸ்வரன் இருக்கின்றார். அவர் அப்படியே இருக்க வேண்டும்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய புள்ளியாக ஒரு முக்கிய உறுப்பினராகவே இருக்கின்றார், அவரைச் சில கூட்டங்கள் ஊடுருவி தமிழர்களின் ஒற்றுமையை உருக்குலைக்கலாம் எனப் பரிசோதனை செய்ய முயற்சிக்கின்றன.

உண்மையில், நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எம்முடைய முதலமைச்சர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முதலமைச்சராக நாங்கள் விட்ட வழியில் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் உருக்குலைக்கப்பட்டு விட்டால் பண்டார வன்னியன் காலத்தில் காக்கை வன்னியன் எப்படி ஒரு காட்டிக்கொடுத்தவனாக மாறினானோ, எம்முடைய மேன்மை பொருந்திய தலைவர் வே.பிரபாகரன் காலத்தில் கருணா அம்மான் ஒரு காட்டிக்கொடுத்தவனாக உருவாகினானோ அதனைப் போல வடக்கு மாகாண சபையைக் காட்டிக்கொடுத்தவராக எமது விக்னேஸ்வரன் பதிவு செய்யப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்தவின் சந்திரன் 8ஆம் நிலையில் இருந்து 4க்கு மாற்றம்

wpengine

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சி.வி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு

wpengine