Breaking
Tue. Jul 2nd, 2024

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கூற்றை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் மௌலவி பி.ஏ.சுபியான் வெகுவாகக் கண்டித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் மூலம் அக்கட்சியினால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான அஸ்மின், தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காக முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போதே, இத்தகைய அரசியல் முதிர்ச்சியற்ற, சிறுபிள்ளைத்தனமான கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இனரீதியான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து, அதனை தமிழர்களின் அரசியல் ரீதியான விடுதலைக்கான போராட்டமாக மாற்றிய புலிகள் வடக்கு முஸ்லிம்களை, அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே பலவந்தமாக வெளியேற்றியமை வெட்டவெளிச்சம். வடக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான உத்தரவாதமும், தகுந்த பாதுகாப்பும் அப்போது கிடைத்திருந்தால், அவர்கள் இன்று தென்னிலங்கையில் நாடோடிகளாக அலையமாட்டார்கள்.

புலிகள் இவ்வாறான படுபாதகச்செயலை எப்போது மேற்கொண்டார்களோ, அன்றிலிருந்தே வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை, தேசிய இனப்பிரச்சினையின் அங்கமாகிவிட்டது. எனினும் தமிழ்த் தலைமைகளோ, தமிழர்களுக்காக பரிந்து பேசும் சர்வதேசமோ, தமிழர்களின் விடிவுக்காக உழைத்து வரும் புலம்பெயர் தமிழர்களோ, அகதி முஸ்லிம்களின் பிரச்சினையை இன்னும் கிள்ளுக்கீரையாகவே நினைத்து வருகின்றன.

இதனை விளங்கிக்கொள்ளாத அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று நடிக்கும், அஸ்மின் போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதிகளின் கருத்து வடக்கு முஸ்லிம்களை வேதனையடையச் செய்கின்றது.

இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் வடபுல முஸ்லிம்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவுமில்லை, அவர்களின் அபிலாசைகள் கருத்திற்கெடுக்கப்படவுமில்லை என்பது வேதனையான விடயம்.

நல்லிணக்க ஆணைக்குழு வடபுல முஸ்லிம்கள் தொடர்பில் கூறியிருக்கும் பரிந்துரைகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையாக சித்தரிப்பவர்களுக்கு, மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்கள் தீனி போடக்கூடாது. இவரது இந்தக் கருத்து வெந்துபோயிருக்கும் முஸ்லிம்களை மேலும் நோகச் செய்துள்ளது என்றும் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *