(அனா)
மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016.08.06ஆந்திகதி (சனிக்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
நாவலடி, மஜ்மா நகரில் அமையப்பெற்று வரும் சிராஜிய்யா அரபுக் கல்லூரியின் புதிய கட்டுமான பணிகளுக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு கூறி இச்சந்திப்பு இடம்பெற்றதோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கல்லூரியின் கட்டுமாணப்பணிகளையும், வளாகத்தினையும் நேரில்சென்று பார்வையிட்டதோடு, தன்னலான உதவிகளை பெற்றுத்தர முயற்சிகளை முற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்…
மூன்று விடயங்கள் ஒரு மனிதன் மரணித்த பிற்பும்கூட அவனுடைய மண்ணறைக்குச்செல்லும் அதில் சாலிஹான பிள்ளைகள், நிலையான தர்மம், கற்றுக்கொடுத்த கல்வி என்பனவாகும்.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக விரல்விட்டு எண்ணக்கூடிய மத்ரஸாக்கள்தான் மார்க்கக்கல்வியினையும், உலகக்கல்வியினையும் போதிக்கின்ற குர்ஆன் மத்ரஸாக்களாக தற்பொழுது காணப்படுகின்றது.
சில குர்ஆன் மத்ரஸாக்களை எடுத்துக்கொண்டால் தனியே மார்க்கக்கல்வினை மாத்திரம் பயின்றுவிட்டு அவர்கள் எதிர்காலத்தில் வேறொறு அரச துறை சார்ந்த வேலைகளை தேடிக்கொள்ள இயலாத நிலை காணப்படுகின்றது. ஆனால் நான் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரியில் பயின்று இன்று இக்கல்லூரியை வழிநடாத்தி செல்லுகின்ற பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மார்க்கக்கல்வியினை முடித்தவர்களாக ஆசிரியர்கள், தபாலதிபர், சமூகசேவை உத்தியோகத்தர் என பலர் இதில் காணப்படுவதாக எனக்கு அறிமுகம் செய்து கொண்டீர்கள். இதனை பார்க்கும் போது மனதுக்கு சந்தோசமாவுள்ளது. காரணம் மார்க்கக்கல்வியினை பயின்ற உலமாக்களுக்கு ஒரு அரசு தொழிலினை பெறக்கூடிய தகுதியினை இக்கல்லூரி வழங்கியுள்ளது.
கல்குடாவை பொருத்தமட்டில் நான் அடிக்கடி பேசுகின்ற விடயம் முஸ்லிம் பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் காத்தான்குடி மற்றும் ஏறாவூரை விட மட்டக்களப்பு மாவட்டத்திலே ஷீஆக்களினுடைய தளமாக கல்குடா காணப்படுகின்றது. நாங்கள் ஷீஆக்கள்தான் என்று பகிரங்கமாக வெளியில் சொல்லுகின்ற அளவுக்கு அதனுடைய வளர்ச்சி கல்குடாவில் மேலோங்கியுள்ளது.
இவ்வாறு ஷீஆக்களுடைய மத்ரஸாக்களில் எமது பிள்ளைகளை மார்க்கக்கல்விக்காக சேர்க்காமல் இப்படியான மத்ரஸாக்களை உருவாக்கி எமது பிள்ளைகளை நல்வழிப்படுத்த நாம் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இக்கல்லூரிக்கு இதைத்தான் செய்து தருவேன் என்று நான் சொல்லமாட்டேன். மாகாண சபை நிதியினூடாகவும், எனது சொந்த நிதியினூடாகவும் இக்கல்லூரிக்கு என்னாலான முழு பங்களிப்பினையும், உதவிகளையும் இன்ஷாஅல்லாஹ் நான் வழங்குவேன் எனவும் எவ்விடயத்தினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமோ அவ்விடயத்தினை முன்னுரிமைப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் சிராஜிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் தாஹிர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் றியாஸ், மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் ஆசிரியர் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.