(அகத்தி அஸீம்)
மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் கூறாத ஒரு விடயத்தைக் கூறியதாக கற்பனையில் புனைந்து, கதைகளைச் சோடித்து அதற்கு மெருகூட்டி பகிரங்க மடலொன்றை வரைந்திருக்கும் மீள்பார்வை முஜீப்பை முசலி சமூகம் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை.
பத்திரிகையாளனுக்குரிய பண்புகளுக்கு மாற்றமாகவும் ஊடக தர்மத்தை மீறியும் எதையுமே ஆராயாமல் தனது ஊத்தை எழுத்துக்களை பகிரங்க மடலாக அவர் வரைந்து அவர் தனது வைற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
மீள்பார்வை முஜீப்பைப் பொறுத்த வரையில் அவர் அமைச்சர் ரிஷாட்டுக்கு விரோதமான கொள்கையுடையவர். ரிஷாட்டின் அரசியல் எதிரிகளான சில கட்சிகளுடனும், சக்திகளுடனும் நீண்ட காலமாக கைகோர்த்துத் திரிபவர். அவர்களுடன் இணைந்து அமைச்ச்ருக்கு குழி பறித்து வருபவர்.
கொழும்பிலே அமைச்சர் ரிஷாட்டின் ஊடகவியலாளர் மாநாடுகளில் இடைக்கிடை கலந்து கொண்டு அவரிடம் தானொரு நல்ல நண்பராக நடித்து விட்டுச் செல்வார். ஆனால் அவர் ஒற்றர் வேலைக்காக வருகிறார் என்ற விடயம் அவரது சகபாடிகள் சிலருக்குத் தெரியும்.
இலங்கை முஸ்லிம்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருக்கும் ‘மீள்பார்வையில்’ நிருபராக இருக்கும் முஜீப் என்பவர் மன்னார் முசலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனினும் அந்த இதழின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு மாற்றமாக முசலி முஜீப்பின் கேவலங்கெட்ட எழுத்துக்கள் அமைந்து விடுவதுதான் வேதனையானது.
முஸ்லிம்கள் மாத்திரமல்ல தமிழ்ச் சகோதரர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் மீள்பார்வையின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முசலி முஜீப்பின் எழுத்துக்கள் தடையாக இருக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்துவதற்காக தரமான கருத்துக்களையும் யதார்த்த பூர்வமான கட்டுரைகளையும் சமூகம் சார்ந்த ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் தாங்கி வரும் “மீள்பார்வை” பத்திரிகை நடு நிலையான, ஊடக தர்மத்தைப் பேணும் சிறந்த ஆசிரியர் குழாமை தன்னகத்தே கொண்டது.
இந்தப் பத்திரிகை மாதமிருமுறை கொழும்பைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்றது.
மீள்பார்வை போன்ற சமூகத்தை வழி நடாத்தும் நல்ல பத்திரிகை ஒன்றில் இட்டுக்கட்டப்பட்ட பொய்களை எழுதும் சமூகத்தைப் பிழையாக வழி நடாத்தும் சொந்தக் காழ்ப்புணர்வை நச்சு எழுத்துக்களாக கக்கும் முஜீப் போன்ற நிருபர்கள் கடமையாற்றுவது மீள்பார்வையின் நோக்கத்தையும், இலக்கையும் திசை திருப்புகின்றது.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல முஜீப் போன்ற இழிவான பத்திரிகையாளர்களின் நடவடிக்கைகள் மீள்பார்வையின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடலாம்.
பத்திரிகையின் நன்மதிப்பையும் மக்கள் மீதான அதன் விருப்பையும் அதிகரிக்க வேண்டுமானால் நிருபர்களை செம்மைப்படுத்தும் பாரிய பொறுப்பு பத்திரிகையின் ஆசிரியர் குழாத்துக்கு உண்டு.
ஊடகவியலாளன் சமூகத்தின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும். அதை விடுத்து சமூகத்தை இருட்டு வழியினிலே குருட்டுக் குழந்தைகளாக இட்டுச் செல்லக்கூடாது.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகளை வழி நடாத்தும் பாரிய பொறுப்பு ஊடகவியலாளருக்கு இருந்த போதும் அதை விடுத்து அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடுவது ஊடக நெறிமுறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் மாற்றமானது.
“பகிரங்கக் கடிதம்” எழுதுவதற்கும் ஓர் இலட்சணம் வேண்டும். முஜீப்புக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா? உண்மையான முஃமினாக இருந்தால், படைத்த இறைவனுக்கு பயமிருந்தால் செவி வழியால் கிடைத்த ஒன்றை உண்மை போல் சோடித்து இவர் எழுதுவாரா?
மீள்பார்வை முஜீப் தனது வம்பு வக்கிரபுத்தி எழுத்துக்களின் மூலம் முசலி சமூகத்தையும் முஸ்லிம் புத்திஜீவிகளையும் பிழையாக வழி நடத்துவது இறைவனுக்குக் கூட பொருத்தமற்றது.
இவ்வாறான புல்லுருவிகளை இனங்காண வேண்டிய பொறுப்பு மீள்பார்வை ஆசிரிய பீடத்திற்கு உண்டல்லவா?