Breaking
Sat. Apr 27th, 2024

மன்னார் நிருபர் லெம்பட்

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (12) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஒருங்கமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடற்றொழில் உதவி பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் சில பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடற்கரையில் மீனவர்களை சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொள்ள கடற்படையினர் நீண்ட நேரத்தை செலவிடுவதால் தாமதித்தே தாங்கள் தொழிலுக்குச் செல்வதாலும்,இதனால் தமது தொழில் நடவடிக்கை தாமதிப்பதாகவும்,எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தாமதம் இன்றி தொழிலுக்குச் செல்ல கடற்படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பாஸ் மற்றும் ஏனைய பதிவுகள் மற்றும் அனுமதியை பெற்றுக் கொள்ளச் செல்லும் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

சில அனுமதிகளை பெற்றுக் கொள்ள சென்றால் 5 முதல் 6 நாட்கள் வரை குறித்த அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளதாகவும்,எனவே குறித்த திணைக்களத்தில் மக்களுக்கான பணி மற்றும் தேவைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் மீனவர்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,குறிப்பாக வேறு மாவட்ட மீனவர்கள் மன்னாரில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *