நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களுக்கு உரித்தான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி தேவையில்லை என்று – சுமார் 20 அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு முறையாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவிக்குரிய எரிபொருள் கொடுப்பனவையும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உரித்தான எரிபொருள் கொடுப்பனவையும் பெற்ற வந்தனர்.
ஆயினும், மேற்கூறிய அமைச்சர்கள் – தங்கள் அமைச்சர் பதவிக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு போதுமானது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவர்களின் வசிப்பிடத்துக்கும் நாடாமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவைப் பெற உரித்துடையவர்களாவர்.
அதன்படி 250,000 ரூபாய் தொடக்கம் 450,000 ரூபாய் வரை எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகபட்ச கொடுப்பனவைப் பெறுகிறார்கள்.
இந்தப் பின்னணியில் அமைச்சர்கள் தானாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தமக்கு கிடைக்கும் எரிபொருள் கொடுப்பனவை நிராகரித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.