Breaking
Fri. Apr 19th, 2024

சுஐப் எம். காசிம்-

சந்தர்ப்பம் சறுக்கியதற்காக உழைப்பை நிறுத்திவிட்டு பெருமூச்சு விடுமளவிற்கு, எம்மை, நமது நம்பிக்கைகள் விடுவதில்லை. நீதி, நிராகரித்தாலும் நிதானம், நம்மைச் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. சட்டம் வேறு, கருணை வேறு என்பார்களே! இதை, ஒட்டுமொத்த சமூகமே ஒன்றாகக் கண்டுகொண்ட சூழலிதுதான்.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் மத உரிமை, சட்டத்தின் பார்வைக்கு சங்கடமாகத் தென்பட்டுள்ளது. கொடிய கொரோனாச் சூழலில் சகல சமயத்தவரும் ஒவ்வொன்றை இழக்கையில், முஸ்லிம்களுக்கென்று வேறு நீதியா.? சட்டத்திற்கு முன்னால் சகலதும் சமம்தான்.

ஆனால், ஜனாஸா விடயத்தில், மூன்றையிழந்த முஸ்லிம்கள் ஒன்றுக்குத்தானே ஓடோடி உழைக்கின்றனர். “அடக்குவதற்கு மட்டுமாயினும் அனுமதியுங்கள்” என்ற, இறைஞ்சுதலுக்கு, சட்டம் கருணை காட்டவில்லை. எனவே, கருணையால், இதைச் சாத்தியமாக்குவதுதான் உள்ள வழி. சாத்வீக வழிகளிலான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்களை பரவலாக்கி, அரசாங்கத்தின் உச்ச மட்டத்தில் இது பற்றிப் பேசப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமளவுக்கு மூன்றாம் தேசியத்தின், சிந்தனைச் சக்தி பலப்படாதுள்ளது. ஆத்மீகம், அரசியல் , சமூகத்தொண்டு மற்றும் கல்விப் பணியென ஒவ்வொரு வட்டத்திற்குள் செயற்படும் சக்கரங்களாகத்தான், மூன்றாம் தேசியத்தின் சிந்தனை சக்திகள் (சிந்தனைப் பெருவெளி) உள்ளன. வருடமொன்றுக்காவது, இச்சக்திகள் சந்திப்பதாகவும் இல்லையே! இந்நிலையில், எப்படி மூன்றாம் சமூகத்தின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவது? ஏதாவது அதியவசர நெருக்கடிகளில், இச் சக்கரங்கள் ஒன்றுபட்டாலும், ஒரே கருத்தில் ஒன்றுபடாது, விமர்சிப்பவர்களாக விலகிச் செல்கின்றனர்.

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில், எத்தனை நாட்களுக்கு எரிக்கும் நிலைப்பாட்டில் நிலைத்து நிற்பது? மூன்றாம் தேசியம் நசுக்கப்படுவது பழிவாங்கல்களுக்கா? அல்லது இனவாதப் பிடி, அரசின் கழுத்தை அழுத்துகிறதா? அல்லது, சட்டத்தின் ஆட்சியில் சகலதும் சமமென அரசும் நினைக்கிறதா? நீதித் துறையின் மன நிலையில், நிர்வாகத் துறையும் சிந்தித்தால், கொரோனா ஜனாஸாக்களின் சாம்பலைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், நிர்வாகத்துறை இந்த இறுகிய மன நிலையில் இல்லை என்பது மட்டும்தான் இன்று, மூன்றாம் சமூகத்துக்குள்ள சின்ன ஆறுதலாகும். இந்த ஆறுதலில்தான், இச்சமூகத்தின் சிந்தனைச் சக்திகள், நல்லடக்கத்திற்கான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மறு உலக வாழ்க்கைக்கான தயார்படுத்தலின் விளைநிலம்தான் இவ்வுலகம். முஸ்லிம்களின் நம்பிக்கை, இவ்வுலகை இவ்வாறுதான் பார்க்கிறது. அவ்வாறானால் இச் சமூகத்திற்குள் இத்தனை பிளவுகள், எண்ணிலடங்கா அமைப்புக்கள் ஏன் வந்தன? இதுதான், ஏனையோரின் பார்வைகள். எனவே, மூன்றாம் சமூகம் முதலில் களைய வேண்டியது, மாற்று மதத்தாரின் இந்தப் பார்வையைத்தான். எடுத்ததெற்கெல்லாம் ஆத்மீகச் சாயம் பூசாமல், சிந்தனை மற்றும் செயற்பாடுகளிலும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதும் வெற்றிக்கு வழிவகுக்கவே செய்யும். கையேந்தும் (பிரார்த்தனை) மார்க்கமாக மட்டும் இஸ்லாத்தை காண்பிக்காது, களம் காணும் சமயமாகவும் இஸ்லாத்தைக் காட்ட வேண்டிய கடப்பாடு மூன்றாம் சமூகத்துக்கு உள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் எம்.பிக்களதும் வேதனைகள் மட்டுமல்ல, இச்சமூக முன்னோடிகள், உலமாக்கள் சகலரது வேதனைகளும் எரித்தல் விடயத்தில், ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. ஆனால், சந்திப்புக்கள்தான் நடக்கவில்லை. இங்குள்ள, அரசியல், ஆத்மீக மற்றும் சிவில் தலைமைகள், ஆளுமை இழந்துள்ளமையே இதற்கான அர்த்தம். விட்டுக்கொடுக்கவே முடியாத ஒரு மத நம்பிக்கைக்காக, விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, இச் சமூகத்தின் சிந்தனைச் சக்திகள் ஒன்றுபட்டதாகத் தெரியவில்லையே!ஒன்றுபட்டு எதைச் சாதிப்பதென்றா சிந்திக்கிறார்கள்.

அரசியல் தரப்பு என்றோ விட்ட தவறுக்கு, இன்று பழிவாங்க வேண்டாமெனக் கோருவதற்காக அல்லது மத நம்பிக்கைகளில், எங்களிடம் மாறுபட்ட கருத்துக்களே கிடையாதெனக் காட்டுவதற்காக, இல்லாவிடின் இனியாவது சமூகத்தின் சிந்தனைச் சக்திகளை இணைத்துப் பலப்படுவதைச் சாதிக்கவாவது ஒன்றுபடவே வேண்டும்.

இருப்பைத் தக்க வைக்கும் பிழைப்பு அரசியல் கலாசாரம், எங்கோ மாட்டிக்கொண்டதால், வந்த வினைகள் இவை. இதற்கு விடைகாணும் பரீட்சையில், தேற வேண்டிய நிலைக்குள் மூன்றாம் சமூகமும் மாட்டிக் கொண்டதுதான், பெருங் கவலை.

எனவே பணிந்து, குனிந்து, நெளிந்து, சமைந்து நடந்துதான், நல்லடக்கத்தை சாத்தியமாக்க வேண்டியுள்ளது. முதலாவதாக இதற்கு நாவடக்கமே தேவை. முகநூலாளர்கள் இதை, முதலில் புரிவதுதான் பொருத்தமானது. சந்தர்ப்பம் சறுக்கினாலும் சாத்தியச் சூழல் வருமென்ற நம்பிக்கையில், முஸ்லிம் எம்.பிக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகள் உழைப்பதாக இப்போது வரும் செய்திகளை உண்மையாக்க இறைவன் போதுமானவன். கருணை கண் திறக்கும். சட்டம் மனம் திறக்கும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *