Breaking
Fri. May 17th, 2024

(ஊடகப்பிரிவு)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் வேறு சில கட்சிகளுக்கும் காலாகாலமாக வாக்களித்து வந்தபோதும், அந்த மக்களின் வாழ்விலே எத்தகைய முன்னேற்றமும் எற்படவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக இந்த மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கியதற்கு காரணம் இந்த மக்களின் வாழ்விலே விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. கடந்த பொதுத்தேர்தலில் இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் செயற்பாடுகளை நாங்கள் தேர்தலின் மூலம் உரசிப்பார்க்க முனைந்த போதும், முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து பிரதிநிதிகளை இல்லாமலாக்க வேண்டுமென சிலர் கூறினர். நாங்கள் விட்டுக்கொடுத்த போதும், அந்த மக்களுக்கு இற்றைவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை.

பெரும்பான்மை அரசியல்வாதிகள், சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றார்களே ஒழிய இந்த மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் பெற்றுக்கொடுக்கவில்லை. வாழ்வை வளம்படுத்தவில்லை. எதுவுமே கிடைக்காத நிலையில் அவர்களின் வாழ்வை வளம்படுத்துவத்ற்காக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்த எண்ணியுள்ளோம்.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, தர்காநகர், அளுத்கமை மற்றும் அண்டிய பகுதிகளில் முஸ்லிம்கள் மீது இனவாதிகள் எந்தவிதமான காரணங்களுமின்றி வேண்டுமென்றே அடிக்கடி நாசகார செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் சொத்துக்களை சூறையாடுகின்றனர்.

வர்த்தக நிலையங்கள் மற்றும் உடமைகளை தீக்கிரையாக்கி அவர்களை நிர்க்கதியாக்கி வருகின்றனர். எந்த நேரமும் அச்சத்தில் வாழ வேண்டுமெனவே விரும்புகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஏதோ ஓர் இனிமை பெறுவதாகவே தெரிகின்றது.
கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களை தடுக்க நாங்கள் ஓடோடி வந்திருக்கிறோம். நீங்கள் சமத்துவமாக வாழ பல்வேறு பிரயத்தனங்களை நாம் மேற்கொண்டிருக்கிறோம். “தர்காநகர், அளுத்கமை கலவரங்களின் சூத்திரதாரிகளை கைது செய்து, சட்டத்தை நிலைநாட்டுங்கள்” என்று நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அப்போது கோரிய போதும், அவர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனால்தான் அந்த அரசாங்கத்தின் மீது எமக்கு வெறுப்பு ஏற்பட்டு பதவிகளையும், அதிகாரங்களையும் தூக்கியெறிந்து விட்டு ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. நமது சமூகம் அவரை வீட்டுக்கு அனுப்பியது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு தேர்தல்களில் உங்களுக்குக் கிடைத்த பிரதிநிதித்துவங்களை விட இம்முறை அதிகமான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொண்டு நீங்களே உங்களை ஆள்வதற்கான போதிய அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே எமது கட்சி தனித்துக் களமிறங்கியுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பெரும்பாலான இடங்களில் நாம் தனித்து போட்டியிடுகின்றோம். அந்தவகையில் களுத்துறை, கண்டி, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், கம்பஹா ஆகிய இடங்களில் நாம் தனித்துக் களமிறங்கியுள்ளோம்.

பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் ஆதரவு இருப்பதனால், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எமக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் நாம் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். யானை சின்னத்தில் நாம் போட்டியிடாது தனித்து எமது கட்சியின் சின்னமான மயில் சின்னத்தில் போட்டியிடும் இடங்களில் நாம் பிரசாரங்களை மேற்கொள்ளும் போது, வேறு சின்னங்களுக்கு புள்ளடியிட வேண்டாமென கூறுவதை சிலர் திரிபுபடுத்தி வேண்டுமென்றே பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். எமது செல்வாக்கை எப்படியாவது குறைத்து விட வேண்டுமென்று திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.

மக்கள் காங்கிரஸ் சிறிய கட்சியாக இருப்பினும் நாளுக்கு நாள் அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனாலும், மக்களின் ஆதரவு பெருகி வருவதாக நாங்கள் உணர்வதாலும், உள்ளூராட்சித் தேர்தலில் எமது கட்சியின் மக்கள் பலத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கின்றது. அதேபோன்று, அரசாங்கத்தின் புதிய அரசியல் முறை மாற்றங்களில் நமது சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான முன்முயற்சிகளை எடுக்கவும், அழுத்தங்களை பிரயோகித்து அந்தப் பாதிப்புக்களிலிருந்து சீர் பெறவும் இந்தத் தேர்தல் முடிவுகள் வழிவகுக்குமென நம்புகின்றோம். இதனை ஒரு மக்கள் ஆணையாகவே நாங்கள் கருதுகின்றோம். இறைவன் நாடினால் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது, அந்தச் சபைகளில் எமது கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியை தொடர முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம்.

நமது ஒற்றுமையான வாக்குப்பலம் ஆட்சிப்பலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய சூழ்நிலை தற்போது கனிந்து வருகின்றது.
அதன்மூலம் அந்தந்த சபைகளில் உள்ளூராட்சி நிருவாகம் சிறுபான்மை சமூகத்தை ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலையை உருவாக்க இறைவன் நாடுவான்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்தில் கால் வைத்ததனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அடிபட்டுப் போகும் என்று பெரும்பான்மைக் கட்சிகளின் கூஜாத் தூக்கிகள் தற்போது பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எமது கட்சி வேட்பாளர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்றும் சிலர் நப்பாசை கொண்டுள்ளனர்.

இவர்களின் வெற்று வேட்டுக்களுக்கெல்லாம் நாம் அஞ்சமாட்டோம். இறைவனைத் தவிர எவருக்குமே நாங்கள் பயப்படுபவர்கள் அல்லர். இனவாத மதகுருமார் தொடர்ச்சியாக எம்மீது அபாண்டங்களை பரப்பி எம்மை அடிபணிய வைக்கப் பார்க்கின்றனர்.
என்னதான் இவர்கள் குத்துக்கரணம் போட்டாலும் நாம் நேர்மையான பணியை மேற்கொண்டு வருவதால் இவர்கள் தோல்வியையே தழுவுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *