Breaking
Wed. May 1st, 2024

இன்று, “உலக புகையிலை எதிர்ப்பு தினம்”. புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு ‘தீம்’-ஐ மையப் படுத்தியே இந்த தினம் குறிக்கப்படுகிறது. அந்த தீமில் கூறப்பட்டுள்ளது கடைபிடிக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டின் தீம் “புகையிலைப் பொருட்களின் சட்ட விரோத வர்த்தகத்தை தடை செய்வது” (Stop illicit trade of tobacco products) என்பதாகும். உலகளவில் உபயோகிக்கப்படும் பத்தில் ஒரு சிகரெட், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுவதாகும்.

இளைஞர்களை தன் வலைக்குள் விழ வைக்க, மிகக் குறைந்த விலையில் இப்புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், அரசை ஏமாற்றுவது, அதிக விலையில் விற்பது, போலியான பொருட்களை விற்பது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான தீம் “Plain packaging”. இப்படிச் செய்வதற்கான முக்கியமான காரணம், plain packaging புகையிலை பொருட்களின் கவர்ச்சியைக் குறைக்கிறது; புகையிலை விளம்பரங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது; மேலும், நமக்கான எச்சரிக்கை உணர்வை அது மேலும் அதிகரிக்கிறது.

இனி புகையிலைப் பொருட்களின் அட்டைகளில், நிலையான நிறம் மற்றும் நடையில் மட்டுமே எழுத்துக்கள் இருக்கும் (Standard styles and fonts). பிராண்டின் பெயர், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ தவிர பிற விளம்பர தகவல்கள் ஏதும் இனி அட்டையில் இடம்பெறாது.

புகையிலையைக் கட்டுப்படுத்த பல நிலைகளில் எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த plain packaging முறையை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா என்பதை நம் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்டு டிசம்பரில், முதன் முதலில் ஆஸ்திரேலியா முற்றிலுமாக அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் plain packaging முறையைக் கொண்டு வந்தது. இதேபோல், 2015-ல் அயர்லாந்து, இங்கிலாந்து, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இத்திட்டத்தைக் கொண்டு வர, இதை மையப்படுத்தி இந்த ஆண்டின் “உலக புகையிலை எதிர்ப்பு தினம்” அமையப் போகிறது.

2016 WNTD (World No Tobacco Day)க்கான இலக்குகள்…

புகையிலைக் கட்டுப்பாட்டின் விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக Plain packaging முன்னிலைப்படுத்தப்படப் போகிறது.

இன்று நம்மில் பலருக்கு தெரியாத புகையிலை பற்றிய குறுந்தகவல்கள்

புகையிலை உபயோகிப்பவர்களில் 50% பேருக்கும் மேலாக இறந்து போகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் பேர் புகையிலையால் மட்டும் மரணிக்கின்றனர். இதில் ஏறத்தாழ 6,00,000 பேர் புகையிலை உபயோகிப்பவர்களின் அருகாமையில் இருப்பவர்கள்.
புகையிலை உபயோகிப்பவர்களில் 80% பேர் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

நம் நாட்டின், நம் உலகின் நிலை இதுதான். எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், எத்தனை திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும், எவ்வளவு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் தனிமனித ஒழுக்கம் ஏற்படாவிடில் எதுவும் மாறாது!

“மகள்(ன்)களைப் பெற்ற
அப்பாக்களுக்கு
நிச்சயம்
தெரிய வேண்டும்
புகையிலை
உயிரைக் குடிக்கும் என்று”.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *