Breaking
Sun. May 5th, 2024

 

-ஊடகப்பிரிவு-

பருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (08) “உணவுக்கான எதிர்காலம்” என்ற தலைப்பில் மூன்று நாள் அமர்வுக்கொண்ட மாநாட்டுத் தொடரை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த அமர்வின் முடிவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

40 நாடுகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட முன்னணி பருப்பு மற்றும் தானிய தொழிலில் உயர்ந்த பணிகளைக் கொண்டுள்ள பிரதிநிதிகள், பிரபலங்கள் இந்த மூன்று நாள் அமர்வில் கலந்துக்கொண்டனர்.

இங்கு அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

உலக தானியங்களுக்கான கூட்டமைப்பின் நிகழ்வினை நடத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. இது எங்களுக்கு ஒரு மரியாதையைத் தந்துள்ளது. உற்பத்தி, நுகர்வு, வர்த்தகக் கொள்கை மற்றும் உலகளாவிய பருப்பு வகைகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட, தொழில் வளர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கொழும்பு உடன்படிக்கை செயற்திட்டம் எதிர்பார்த்த படி முடிவடைந்தது.

இலங்கையை பொறுத்தவரையில், பருப்பு புரதத்தின் பிரதான ஆதாரமாக இருக்கிறது. இலங்கையில் பருப்பு ஒரு பெரிய நுகர்வாகும். பல ஆண்டுகளாக இலங்கையர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகளையே  பயன்படுத்தி வந்தனர்.

இலங்கையின் சிவப்பு பருப்பு நுகர்வு 150000 மெற்றிக் தொன் ஆகும். அத்துடன் 18000  மெற்றிக் தொன் சிக்பீஸ் (Chick Peas), 25000 மெற்றிக் தொன் யெல்லோ ஸ்பிலிட் பீஸ் (Yellow Split Peas) மற்றும் 16000 மெற்றிக் தொன் மங் பீன்ஸ் (Mung Beans) ஆகியவற்றை நாம் இறக்குமதி செய்கின்றோம்.

சிவப்பு பருப்பு நமது முக்கிய உணவு பொருட்களின் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2016 ஆம் ஆண்டில் 154000 மெட்ரிக் தொன் சிவப்பு பருப்புக்களை இறக்குமதி செய்தோம். இது கடந்தவருடம் மொத்த உணவுப் பொருட்களின் இறக்குமதி  தொகையில் 07% சதவீதமாகும். தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், பருப்பு வகைகள் வறுமையை ஒழிக்க உதவுவதில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்று நாங்கள் கருதுகின்றோம் என்று அமைச்சர் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *