Breaking
Sat. Nov 23rd, 2024

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்தும் கூறி வருகிறார்.  

அத்தோடு அவர், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் இன்றைய தினத்துக்கு முன்னர் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்நாட்டு கத்தோலிக்க மக்கள், வீதிக்கு இறங்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்த எச்சரிக்கையால், அரசாங்கம் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.   

தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வந்ததன் பின்னரும், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. அந்த நிலையில் விசாரணைகள் விடயத்தில், கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்தியைத் தெரிவித்திருந்தார்.   

பின்னர் அவர், அந்த விடயத்தில் அதிருப்தியைத் தெரிவிக்கலானார். உண்மையிலேயே, கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிக்கு வரும் போதும், தாக்குதலோடு சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பலரை, பொலிஸார் கைது செய்து இருந்தனர். அவ்வாறு சந்தேகப்படக் கூடியவர்கள் வேறு இருப்பதாகப் பொலிஸாருக்குத் தெரிய வந்ததும் இல்லை.   

எனவே, கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்தன. அதன்படி, சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் சிலரை விடுதலை செய்யவும், பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக, அதிருப்தியை மட்டுமல்லாது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார்.  

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர், ஐந்து மாதங்களாக இரகசியப் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட போது, “அது ஒரு டீல்’’ எனச் சந்தேகிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், எவர் எவருக்கிடையே இந்த ‘டீல்’ செய்து கொள்ளப்பட்டது என்பதை கார்தினால் கூறவில்லை. ஆனால், அதற்கு முகநூல் மூலம் பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய, ‘ரிஷாட் பதியூதீன் எம்.பியுடன் அரசாங்கம் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.  

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் திகதியை ‘கறுப்பு ஞாயிறு’ தினமாகப் பிரகடனப்படுத்திய கார்தினால், பயங்கரவாத தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர், தாக்குதலில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்துக்குக் காலக்கெடு விதித்தார்.   

இவ்வருடம், உயிர்த்த ஞாயிறு தினமாகிய ஏப்ரல் நான்காம் திகதி, மீண்டும் அந்த எச்சரிக்கையை விடுத்த அவர், உளவுத்துறையினர் எச்சரிக்கை செய்திருந்தும் தாக்குதலுக்கு இடமளித்தார் எனக் குற்றஞ்சாட்டி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.    

அதேவேளை, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரிகளையும் அம்பலப்படுத்த வேண்டும் என்று, அவர் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளார்.  
கார்தினாலின் எச்சரிக்கை காரணமாக, புதிதாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் இல்லாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. எனவேதான், அந்த எச்சரிக்கையால் அரசாங்கம் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.   

இந்த நிலையில், இந்தப் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போது, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக, பொலிஸார் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை பட்டியல் போட்டுக் காட்டினார்.   இதுவரை 676 பேர் கைது செய்யப்பட்டு, 408 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த 676 பேர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட 54 பேரில் 50 பேர், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மற்றையவர்களையும் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

இவ்வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில், கார்தினால் மீண்டும் தமது எச்சரிக்கையை விடுத்த நிலையில், அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவியே தாக்குதலின் சூத்திரதாரி என அமைச்சர் வீரசேகர தெரிவித்தார். ஆனால், அதைக் கார்தினால் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. “நாங்கள் வற்புறுத்துகிறோம் என்பதற்காக, யாரையாவது சூத்திரதாரி எனக் கூறுவதால் பிரச்சினை தீரப் போவதில்லை” என அவர் கூறியிருந்தார்.  

ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, இரண்டு வெளிநாட்டு அமைப்புகள் உள்ளிட்ட 11 முஸ்லிம் அமைப்புகளை அரசாங்கம் தடை செய்தது. 2019ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, தேசிய தௌஹீத் ஜமாஅத் உள்ளிட்ட மூன்று அமைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால தடை செய்திருந்தார். இதுவும் கார்தினாலை சமாதானப்படுத்த எடுத்த நடவடிக்கை எனப் பலர் நினைத்தனர். உண்மையிலேயே கார்தினால் மட்டுமன்றி, முழு உலகமே இந்தத் தாக்குதலின் பின்னணியை அறியக் காத்திருக்கிறது. ஆனால், இலங்கையின் அரசியல் கலாசாரம் அதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகமே.  

 இலங்கையில் அரசியல்வாதிகள், உண்மையை வெளிக் கொணர்வதை விட, தமது எதிரிகள், போட்டியாளர்கள் அனைவரையும் இந்தத் தாக்குதலிலும் ஏனைய கொலைகள் கொள்ளைகளிலும் சிக்கவைக்க முயல்கின்றனர். அவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவையும் அந்த விடயத்தில் விட்டு வைக்கவில்லை.   

‘வேட்டையில் பயனடைபவனே வேட்டையாடியவன்’ என்று சமூக வலைதளங்களில் சிலர் சூசகமாக ஜனாதிபதியின் மீது குற்றத்தைச் சுமத்த முயல்கிறார்கள். அதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பயன் பெற்றவர் ஜனாதிபதியே. எனவே, அவர் தான் இதன் சூத்திரதாரி என்பதே அவர்களின் வாதமாகும்.   

உண்மையிலேயே ஜனாதிபதியே தாக்குதலால் பயனடைந்தார். தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்துக்குள் அவர், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் எதிர்ப்பை வலுப்படுத்தி சிங்கள வாக்குகளை மூட்டைக் கட்ட நடவடிக்கை எடுத்தது.   

அவை அனைத்தும் உண்மை தான். ஆனால், இந்தப் பயங்கரவாதிகள் 2016ஆம் ஆண்டு முதல் சித்தாந்த ரீதியல் ஒரு கும்பலை, பயங்கரவாதத்தை நோக்கி இட்டுச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. அவர்களுடன் எவ்வித தொடர்பும் ஜனாதிபதிக்கோ, பொதுஜன பெரமுனவுக்கோ இருந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை.   

இதேபோல் சிலர், தாக்குதலுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூற முயல்கின்றனர். அதற்கு அவர்கள் மூன்று காரணங்களை கூறுகின்றனர். தாக்குதல்களை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தெமட்டகொடையைச் சேர்ந்த இப்ராஹீம் என்ற வியாபாரி, 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஓர் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். 

இவற்றுக்குப் பதிலளித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இப்ராஹீமைப் பற்றி இலங்கையில் உள்ள எட்டு உளவு நிறுவனங்களுக்கும் தெரியாத விடயத்தை, தமது கட்சிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதேவேளை, தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு எவ்வித தொடர்புகளும் இருந்ததாகப் பொலிஸ் மற்றும் ஆணைக்குழு விசாரணைகளின் போது ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.   

இதேபோல் சிலர், ஐ.தே.க மீதும் பழிசுமத்த முயல்கிறார்கள். அதாவது, கோட்டாபயவின் மீது குற்றத்தைச் சுமத்தி, ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றியைத் தடுப்பதற்காக ஐ.தே.க இத்தாக்குதலை வழிநடத்தியிருக்கலாம் என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.   

தாக்குதலின் பின்னால் இந்தியா இருந்ததாகச் சிலர் கூற முயல்கிறார்கள். இந்திய உளவுத்துறையினரே தாக்குதலைப் பற்றிய தகவல்களை முன்கூட்டியே இந்நாட்டு உளவுத் துறையினருக்கு வழங்கினர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். தாக்குதலோடு இஸ்‌ரேலிய உளவுப்பிரிவினருக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரித்துப் பார்க்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.  

இவ்வாறு, ஒவ்வொருவரும் தத்தமது அரசியலுக்குப் பொருத்தமான கருத்தை வெளியிடுகிறார்கள். இவை விசாரணையாளர்களையும் திசை திருப்பலாம். இந்த அரசியல் கலாசாரம் இருக்கும் வரை, உண்மையை அறிய முடியுமா என்பது சந்தேகமே.    

எம்.எஸ்.எம். ஐயூப்

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *