Breaking
Thu. May 2nd, 2024

ஊடகப்பிரிவு-

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இனவாதம் தலைவிரித்தாடும், சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தப்படுவர், மத உரிமைகள் பறிக்கப்படும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, மக்களிடம் வாக்குக் கோரிய முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் பின்கதவால் சென்று பேரம்பேசியதும், தங்களை மிக மோசமாக தூற்றிய இவர்களுக்கு, ஆட்சியாளர்கள் அமைச்சுப் பதவி வழங்கியதும் தரங்கெட்ட, வெட்கக்கேடான விடயம் எனத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது கட்சியை நம்பி, இவர்களுக்கு வாக்களித்த மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. இதனை வைத்து அரசியல் செய்யும் எவராக இருந்தாலும், அவர்களுக்கு இறைவன் ஒருபோதும் உதவி செய்யமாட்டான். அவர்கள் நிச்சயமாக தற்காலிக வெற்றிகளை அடைந்தாலும், அவர்களால் நிரந்தரமான எந்த வெற்றியையும் பெற முடியாது என்பது நிரூபணமாகி வருகின்றது. ஈஸ்டர் தாக்குதலின் பிறகு, அதிமேதகு கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் கத்தோலிக்க – முஸ்லிம் மக்கள் மத்தியிலே பிளவுகள் வந்துவிடக் கூடாது என்ற விடயத்தில் மிகவும் உறுதியாக இருந்து, நேர்மையாகவும் நடந்துகொண்டார் என்பதை இன்றும் நான் நன்றியுணர்வுடன் இந்த உயர்சபையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆனால், அன்று எதிர்க்கட்சியிலிருந்த அரசியல்வாதிகள் இன்று அமைச்சர்களாகவும், இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மூலதனமாகவும் ஈஸ்டர் குண்டு வெடிப்பையும், முஸ்லிம் தலைமைகளையும், முஸ்லிம் புத்திஜீவிகளையும், உலமாக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும், நாங்கள் வணங்குகின்ற எமது இறைவனையும், நாங்கள் இதயங்களில் மேலாக வைத்திருக்கும் நபி (ஸல்) அவர்களையும் கேவலப்படுத்தியதோடு, குண்டுத் தாக்குதலுடன் எம்மை தொடர்புபடுத்தி, பெரும்பான்மை மக்களையும் எம்மையும் பிரிக்க நடவடிக்கை எடுத்தீர்கள். பெரும்பான்மை மக்களை மடையர்களாக்கி ஆட்சிபீடம் ஏறினீர்கள் என்ற உண்மையை, உலகம் இன்று அறிந்து வைத்துள்ளது.

எனவே, இந்தக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் அநியாயமாக பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். அப்பாவி உயிர்களை இழந்த குடும்பங்கள் இன்னுமே வேதனையுடன் இருகின்றனர்.  இன்னும் பலர் சிறையில் வாடுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் இணைந்து, இரண்டே இரண்டு பேர் தான் நேரடியாக இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறினார்கள். அவ்வாறு கூறியபோதும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர்களை சிறையில் வைத்து கொடுமைப்படுத்துகின்றார்கள். அவர்களின் உறவுகள் சீரழிகின்றனர். இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், சிறையில் வாடும் அத்தனை பேரையும் சட்டமா அதிபர் பிணையில் விடுதலை செய்ய வேண்டும், அல்லது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்குகளை தொடர வேண்டும். இதைவிடுத்து, அவர்களை அநியாயமாக சிறையில் வைத்திருப்பது மிகப்பெரிய அநியாயம் என்பதையும் இந்த உயர் சபையில் தெரிவிக்கின்றேன்.அதேபோன்று, இந்தக் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட எவராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுகின்றேன்.

எனவே, இந்தச் சம்பவத்தை வைத்து, இன்னும் அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.. இவ்வாறானவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். குடும்பம் இருக்கின்றது. மிகவும் குறுகிய காலமே உங்கள் வாழ்க்கையும் இருக்கப் போகிறது. எனவே, அற்பசொற்ப அரசியலுக்காக இந்த சம்பவத்தை நீங்கள் இனியும் பயன்படுத்தாதீர்கள். அவ்வாறு நீங்கள் செயற்பாட்டால் உங்கள் அழிவுக்கு அதுவே காரணமாக அமைந்துவிடும் என்பதையும் நான் இங்கு தெரிவிக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் அழுத வண்ணமே வாழ்கின்றனர். தாக்குதலில் பாதிப்புக்குள்ளானவர்களும், அதன் பின்னர் குருநாகலிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அடாவடித்தனங்களால் பாதிக்கப்பட்டவர்களும் மிகவும் துயரமான சூழ்நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சுமார் முப்பதுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்கள் தாக்கப்பட்டன. பௌசுல் அமீர் என்ற அப்பாவி இளைஞர், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரின் கண்முன்னே பதைக்க பதைக்க கொல்லப்பட்டார். காடையர்களின் வெறித்தனம் அவரது குடும்பத்தை நாசமாக்கியது. அவ்வாறான காடையர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவுமில்லை, சிறைப்படுத்தப்படவுமில்லை. இதன் பின்னர் வைத்தியர் ஷாபி மீது வீண்பழி சுமத்தியதுடன், முஸ்லிம் சமூகத்தின் வைத்தியர்களை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலையை உருவாக்கினர். இந்த கேவலங்களை எல்லாம் எந்தவிதமான மனிதாபிமானமுமின்றி மேற்கொண்டனர்.இரண்டு வருடங்களாகியுள்ள இந்த ஆட்சியில், உங்களால் இவற்றை நிரூபிக்க முடிந்ததா எனக் கேட்கின்றேன்.

பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 22 மாதங்கள் சிறையில் வைத்திருந்து, ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் வாயிலாக சேறு பூசினீர்கள். தினமும் பொய் கதைகளையும் புனைகதைகளையும் புனைந்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலம் அபாண்டங்கள் சுமத்தினீர்கள். 22 மாதங்கள் வரை அவரை அநியாயமாக சிறைப்படுத்தி, அவரை பிணையில் விடுவித்திருந்த போதும், உங்களால் அவர் மீதான குற்றங்களை நிரூபிக்க முடிந்ததா என நான் கேட்கின்றேன்? அசாத் சாலியை சிறையில் அடைத்தீர்கள்.  ஆனால், அவர் மீது எந்தவிதமான குற்றங்களையும் நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறுதான் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை உங்கள் தேவைக்காக அரசியலாக்கி ஆதாயம் தேடினீர்கள். எனவே, தயவு செய்து இவ்வாறான பாவத்தை இனிமேலும் செய்யாதீர்கள்.

புனித ரமழான் மாதத்தில் நடுநிசியில் என்னை கைது செய்தீர்கள். குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும்பொழுது சி.ஐ.டி யினர் நுழைந்து என்னை அழைத்து சென்றார்கள்.எதற்காக என்னை அழைத்து செல்கின்றீர்கள்? நான் என்ன குற்றம் செய்தேன்? என்று கேட்ட போது அதனைக் கூற முடியாது என்று சொல்லி, என்னை அழைத்து சென்று, 06 மாதங்கள் சிறைப்படுத்தினார்கள். பாராளுமன்ற உறுப்பினரான என்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருந்தார்கள். தொழுவதற்கு இடம் தரவில்லை. வுழூ செய்வதற்கு வசதிகள் செய்து தரவில்லை. பல நாட்கள் படுப்பதற்கு பாய் தரவில்லை. தலையணை இல்லை. இரவிலே தொழ வேண்டுமென்று கூறியபோதும் மாலை 6 மணிக்கு என்னை தனி அறையில் அடைத்து, மறுநாள் 6 மணிக்கே என்னை விடுவித்தார்கள். மஹ்ரிப், இஷா, தஹஜ்ஜுத், சுபஹ்  ஆகிய தொழுகைகளைக் கூட தொழ முடியாத நிலை ஏற்பட்டது. “அறையைத் திறந்துவிடுங்கள்” என நான் கெஞ்சியபோது அதற்கும் இடம்தரவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், எனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், “கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு சரி இல்லாதவர். நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடுவார். அவர் இனவாத மூலதனத்தினால் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்” எனக் கூறி, அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்தனர். நான் உட்பட முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் மக்களிடத்தில் இதைக் கூறித்தான் வாக்குக் கேட்டோம். அவ்வாறான, எனது கட்சிக்காரர்களை எம்.பிக்களான பின்னர், நான் சிறையில் இருந்ததைப் பயன்படுத்தி, இருபதுக்கு வாக்களிக்க செய்தீர்கள். இப்போது வெட்கம் இல்லாமல் எனது கட்சிக்காரர்களை அழைத்து, அமைச்சுப் பதவியையும் வழங்கியிருக்கின்றீர்கள். அவர்களும் வெட்கம் இல்லாமல் அந்தப் பதவியைப் பெற்றுள்ளனர். எங்களது கட்சிக்கு வாக்களித்த மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கின்றேன்.எங்களையும் கட்சியையும் நம்பி, இவ்வாறன கயவர்களுக்கு எமது சமூகம் வாக்களித்தமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன். அவர்களை நான் இறைவனிடத்தில் ஒப்படைக்கின்றேன்.

நேற்று முன்தினம் ரம்புக்கணையில் நடந்த சம்பவத்தில் சமிந்த லக்ஷான் என்ற நபர், பொலிசாரால் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். இதனை நானும் எனது கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதோடு, எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சகல பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொட்டுள்ளது. மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிலே உணவு, பால்மா இல்லாத நிலையில் பெற்றோர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நாம் அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறன கஷ்டங்கள் ஏற்படவில்லை. இப்போது இளைஞர்கள் நியாயம் கேட்கின்றார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள். எனவே, பாதையிலே தமது உரிமைகளுக்காக, எதிர்காலத்துக்காக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நாமும் எமது முழு ஆதரவை வழங்குகின்றோம்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தொடர்ந்தும் ஆட்சிக் கதிரையில் அமராமல், உடனடியாக பதவி விலகி, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வழிவிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *