அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்க தூதகரத்தை டிரம்ப் உடனடியாக ஜெருசலேமிற்கு மாற்றமாட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) ஜெருசலேம் விவகாரம் குறித்து டிரம்ப் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.
முன்னர், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று டிரம்ப்பை அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்களில் ஒருவர், இது முஸ்லிம்களை வெளிப்படையாக ஆத்திரமூட்டும் செயலாக அமையும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜெருசலேமை எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதிவந்தது. ஆனால், பலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமை எதிர்கால பலத்தீனிய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று முன்னர் துருக்கி அதிபர் எச்சரித்திருந்தார்.
இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசெஃப் தாயிப் எர்துவான் கூறியிருந்தார்.
ஜெருசலேமின் தகுதி நிலை இஸ்ரேல் பலத்தீனருடன் கொண்டிருக்கும் மோதலின் முக்கிய பகுதியாக உள்ளது.
பலத்தீனர்கள் அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகத்தின் ஆதரவை பெற்றுள்ளனர்.
இந்த நகரில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேமில்தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய புனித இடங்கள் உள்ளன.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இவ்விடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் முழுவதையும் அதனுடைய தலைநகரமாக இஸ்ரேல் கூறி வருகிறது.
எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல் – பலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.
1967 ஆம் ஆண்டு தொடங்கி கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ஒரு டஜன் குடியிருப்புக்களை கட்டி சுமார் 2 லட்சம் யூதர்கனை குடியேற்றியுள்ளது. சர்வதேச சட்டப்படி இது சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படுகிறது. இதை இஸ்ரேல் மறுக்கிறது.
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும். கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்.