Breaking
Sun. Nov 24th, 2024

(மொஹமட் பாதுஷா)

காலம் நிகழ்த்துகின்ற மாற்றங்களின் அபூர்வங்களை நாம் அறிந்திருக்கின்றோம். யாரும் பெரிதாக அறிந்திராத ஒரு சுகாதார அமைச்சர், எவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆனார் என்பதும், வெள்ளை வேன்களை வாடகைக்கு அமர்த்தியிருந்த கூட்டம், சட்டத்தின் முன் எவ்வாறு மண்டியிட்டது என்பதும், நமது மிகக் கிட்டியகால அனுபவங்களாகும்.

ஆக, யாருடைய முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. ஆனால், பதவியும் அதிகாரமும் இதனை உணரவிடாமல் தடுக்கின்றன. இவை இரண்டும் மிகப் பெரிய போதைகளாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களே இதற்குப் பெரும்பாலும் அடிமைப்பட்டிருக்கின்றார்கள் என்று சொல்லலாம். அந்தப் போதையில் கொஞ்சத்தை, தமது சிஷ்ய கோடிக்களுக்கும் ஊற்றிக் கொடுத்துவிட்டு, மமதையில் ஆடத் தொடங்கி விடுகின்றன முஸ்லிம் தலைமைகள். இந்த அடிப்படையிலேயே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் மக்கள் காங்கிரஸுக்குள்ளும் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை நோக்க வேண்டியிருக்கின்றது.

இதில் மிகவும் முக்கியமானது, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுச் செயலாளர் ஹசன்அலிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற உள் முரண்பாடுகளாகும். இதனால், ஹக்கீமும் ஹசன் அலியும் இரு துருவங்களாகிக் கொண்டிருக்கின்றனர். அல்லது, மற்றவர்கள் துருவங்கள் ஆக்குகின்றனர். இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்குள், இரு முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. ‘மு.கா செயலாளருடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறு, தேர்தல்கள் ஆணையாளர், அக்கட்சியின் தலைவரைக் கோரியிருப்பதாக’ ஆரம்பத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ‘தேர்தல்கள் ஆணையாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டத்துக்;கு, சர்ச்சைக்குரிய உயர்பீட செயலாளருக்கு அழைப்பு வந்திருப்பதால், இனி இதில் எந்தத் தடையும் இல்லை’ என்று ஒரு தகவல் உலா வரத் தொடங்கியிருக்கின்றது. மு.கா என்பது முஸ்;லிம் மக்களின் சொத்தாகும். எனவே, மக்கள் இதன் உள்ளரங்கங்களை அறிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில், மு.கா பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் சிலவற்றை பிடுங்கியெடுத்து, உயர்பீட செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.

அப்போது தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் அதிருப்தியுற்றிருந்த ஹசன் அலி, இதன் உள்ளர்த்தங்களை அறிந்திருக்கவில்லை. ‘நமக்கு உதவியாக ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் போல’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், மு.கா தலைவரின் காய்நகர்த்தல்கள், ‘எதிர்த்து காய்வெட்டுதல்கள்’ எல்லாவற்றையும் மிக அருகிலிருந்து பார்த்தவரான செயலாளர், இப்புதிய நியமனத்தை குறை மதிப்பீடு செய்தமை ஆச்சரியத்துக்குரியது. இப்படியிருக்கையில், ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்கும் இடையிலான பனிப்போர் என்பது, தேசியப்பட்டியல் எம்.பியை மையமாகக் கொண்டதாக வலுவடைந்து கொண்டிருந்தது.

இருவரும் சந்திப்பது அரிதாக இருந்தது. ஒரு தடவை, ஹசன் அலியின் வீட்டுக்கு சென்ற ஹக்கீம், நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை கூறிவிட்டு, தனது 1 மணித்தியால சந்திப்பை நிறைவு செய்திருந்தார். சமகாலத்தில் கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற சில கூத்தாடிகள் தலைவரையும் செயலாளரையும் பகை மூட்டுவதில் தீவிரமாக இருந்தனர். ஹக்கீமிடம் சென்று ஹசன் அலியைப் பற்றியும் ஹசன் அலியிடம் சென்று ஹக்கீமைப் பற்றியும் போட்டுக் கொடுத்த உறுப்பினர்கள் நிறையப் பேர். மேலும், சிலர் பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிக் கொண்டு அரசியல் செய்தனர். இப்படியிருக்கையில், தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திப்பதற்கு எம்.ரி. ஹசன் அலி சென்ற சமயம். ‘நீங்கள் ஏன், எனது கடிதத்துக்குப் பதிலளிக்கவில்லை?’ என்று தேர்தல்கள் ஆணையாளர் ஹசன் அலியிடம் கேட்டுள்ளார்.

இந்தக் கேள்விக்கான காரணத்தை ஆணையாளர் விளக்கிய போதே, ஹக்கீம் மேற்கொண்ட சூட்சுமமான செயற்பாடுகள் எல்லாவற்றையும் ஹசன் அலியால் புரிந்து கொள்ள முடிந்ததாக அவர் தரப்பில் கூறப்படுகின்றது. அதாவது, உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட கல்வியியலாளர் மன்சூர் ஏ.காதரே கட்சியின் செயலாளர் என்று குறிப்பிட்டும், இது ஏகமனதான தீர்மானம் என்றும் ரவூப் ஹக்கீம், தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்னமே அறிவித்திருக்கின்றார். இதற்குத் தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்திய ஆணையாளர், அப்படியென்றால் தற்போதிருக்கும் செயலாளர் (ஹசன் அலியின்) சம்மதக்கடிதத்தை இணைத்து அனுப்பும்படி கோரி, மு.கா தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதன் பிரதி கட்சியின் தலைமையகமான ‘தாறுஸ்ஸலாம்’ முகவரியிடப்பட்டு, செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தாறுஸ்ஸலாம் முகவரிக்கு அனுப்பப்பட்ட, தேர்தல் ஆணையாளரால் கேட்கப்பட்ட அக்கடிதம் தனக்கு கொடுக்கப்படவில்லை என்கின்றார் ஹசன் அலி. இதன் பின்னரே ஹசன் அலி, காட்டமான அறிக்கைகளை விடத் தொடங்கினார். ஒருவேளை, ரவூப் ஹக்கீம் செயலாளராக இருந்து அவரை விட கனிஷ்டமான ஒருவர் தலைவராக இருந்து, இப்படி ஒரு காரியத்தைச் செய்திருந்தால் எப்படியாக கொந்தளிப்பாரோ, அப்படியான கொந்தளிப்புக்கு ஹசன் அலியும் ஆட்பட்டிருந்தமை அவ்வறிக்கைகளில் தெரிந்தது.  இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. தான் செய்த வேலைகள் தொடர்பாக செயலாளருக்கு தெரியவந்து விட்டதாலும் வேறு காரணங்களாலும் தற்போதிருக்கின்ற நிலைமைகளில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்த மு.கா தலைவர் ஹக்கீம், செயலாளரைச் சந்திப்பதற்கு முயற்சி எடுத்தார். எவ்வாறிருப்பினும் இது மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்பதில் மறுபேச்சில்லை. இதற்கு மத்தியஸ்தராக இருந்தவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி ஏ.எம். இஷாக் ஆவார்.

குறிப்பிட்ட தினம் மாலை 5 மணிக்கு ஹக்கீம், இஷாக்கின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், 2 மணிக்கே அங்குவந்த ஹசன் அலி, தனது நியாயங்கள் மற்றும் நிலைப்பாடுகளை இஷாக்கிடம் கூறி, அதற்கான பதிலை ஹக்கீமிடம் பெற்றுத் தருமாறு கோரிவிட்டுச் சென்றிருக்கின்றார். பின்னர், ஹக்கீம் வந்து வேந்தரை சந்தித்துச் சென்றார். அச்சந்திப்பில் நடந்ததை ஹசன் அலியிடம் கூறிய இஷாக், தலைவரை நேரில் சென்று சந்திப்பதற்கு வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய, தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்து, தலைவரின் வீட்டுக்குச் சென்றார் ஹசன் அலி. இருவரும் பேசினர். ‘ஏன் நீங்கள் இப்படிச் செய்தீர்கள், ஏன் கடிதத்தை ஒழித்தீர்;கள்?’ என்றெல்லாம் செயலாளர் கேட்டதாக அங்கிருந்த ஒருவர் சொன்னார்.

உண்மையில், ஹசன் அலிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான உறவு மிகவும் பலமானது. ஹக்கீமை நேருக்குநேர் கடிந்து பேசவோ, அதேபோன்று ஹசன் அலியை முகத்தில் ஏசவோ இருவராலும் முடியாது என்று சொல்லலாம். எனவே இருவரும் கௌரவமான முறையில் பேசியதாகக் கூறப்படுகின்றது. அதிகாரங்களைக் குறைத்ததை ஏற்றுக் கொண்ட தலைமை, தேசிய மாநாட்டுக்கு முன்னதாக அதிகாரங்களை மீளத் தருவதாக வாக்குறுதியளித்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதாலேயே, மாநாட்டுக்கு தான் சமுகமளிக்கவில்லை என்று, செயலாளர் பின்னர் விளக்கமளித்திருந்தார். இவ்வாறானதொரு சமரசப் பேச்சு இடம்பெற்ற போதும், பின்னர் அம்முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஏனென்றால், இது தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயமல்ல.

மு.கா தலைவர், ஏதோவோர் அடிப்படையில் நன்கு திட்டமிட்டு, ஹசன் அலியை ஓரங்கட்டுவதற்காகவே இதைச் செய்திருக்கின்றார். இது தவறுதலாக நடந்த ஒரு விடயம் அல்ல. எனவே, அதை திருத்திக் கொண்டு ஹசன் அலிக்கு மீளவும் அதிகாரங்களை ஒப்படைப்பதற்கு ஹக்கீம் முன்வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ‘சதித்திட்டக்காரர்கள்’; என்றும் ‘குள்ளநரிகள்’ என்றும் பகிரங்கமாக கூறியதன் மூலம், பகைமையால் ஒரு மேடைபோட்டு அதிலேறி உட்கார்ந்திருக்கின்றார்; ஹக்கீம். இவ்வாறிருக்கையில், மீண்டும் கீழிறங்கி வந்தால், நமது நிலைப்பாட்டை நாமே பிழைகண்டதுபோல் ஆகிவிடாதா என்று தலைவர் நினைக்கக் கூடும். ஹசன் அலிக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்குவது என்றால் கூட, உயர்பீடக் கூட்டம், பேராளர் மாநாடு என பல செயற்கிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உடனடியாக சாத்தியமில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில், மு.கா கட்சிக்கு உண்மையான சட்டவலுவுள்ள செயலாளர் ஹசன் அலி என்பதால், அவருடன் பேசி இணக்கத்துக்கு வருமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எது எவ்வாறிருப்பினும், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியில் அவரை விட சிரேஷ்டமானவரான ஹசன் அலியும் முரண்பாடுகளைப் பேச்சுக்கள் மூலம் தீர்ப்பதற்கான நல்லெண்ணத்தை வெளியிட்டுள்ளனர். இது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

தேர்தல்கள் ஆணையாளருக்கு, தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லாதவிடத்து, ஒன்றில், இணக்கப்பாடுகளை எட்டுமாறு, அல்லது, நீதிமன்றம் செல்லுமாறு சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் நோக்கும் போது, இணக்கப்பாடுகளை எட்டுவதே மிகச் சிறந்த தெரிவாக இருக்கும். ஏனெனில், கட்சியின் விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்லுமாக இருந்தால், தீர்ப்பு வரும் வரைக்கும் தேர்தலில் போட்டியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சட்டச் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இரு தரப்பும் பேச வேண்டியுள்ளது.

ஹக்கீமும் ஹசன் அலியும் பேசுவதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ள போதும், மூன்றாம் நபரின் மத்தியஸ்தத்துடன் அதை மேற்கொள்ள விரும்புவதாக தெரிகின்ற போதும், இன்னும் உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. தலைவருக்கும் செயலாளர் மற்றும் தவிசாளருக்கும் இடையில் விரிசல்களை உண்டுபண்ணி, அவர்களை துருவங்களாக்கிவிடும் வேலையை சில பிராந்திய அரசியல்வாதிகள் ஓர் அன்றாட பணிபோல இப்போதும் செய்து வருகின்றனர். ஹசன் அலி விடயத்தில் ஹக்கீமை இறங்கி வர விடாது சிலர் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மு.கா தலைவர் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவருக்கு ஒவ்வொரு உறுப்பினருடைய ரிஷி மூலமும் நதிமூலமும் நன்றாக தெரியும். குறைந்தபட்சம், கட்சியை நேசிப்பவர்கள்  யார், கட்சியை வைத்து பிழைப்பு நடாத்துகின்றவர்கள் யார் என்பதையேனும் அறியாத ஒருவராக ஹக்கீம் இருக்க முடியாது.

தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்ட மன்சூர் ஏ. காதருக்கு தற்போது கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், எந்த அடிப்படையில் இக்கடிதம் அனுப்பப்பட்டது என்பது தெரியாது. இதை வைத்துக் கொண்டு, தேர்தல்கள் ஆணையாளரால் அவர் செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற முடிவுக்கும் வந்து விடமுடியாது.

சரி அப்படித்தான், செயலாளராக அவர் அங்கிகரிக்கப்பட்டாலும், இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை அதனோடு முடிந்து போகப் போவதும் இல்லை. எனவே, மரத்தை அணைத்தவாறே மரணிப்பேன் எனக் கூறியுள்ள ஹசன் அலியும், அப்பேச்சினால் நெகிழ்ந்துபோன ஹக்கீமும் அதேபோன்று, தவிசாளர் பஷீரும் இன்னுமின்னும் துருவங்களாகிவிடாமல், சந்தித்துப் பேசி ஓர் இணக்கத்துக்கு வர வேண்டும். அவ்வாறு இணக்கத்துக்கு வரும் புள்ளி, வெறும் பதவிகளை மையமாகக் கொண்டதாக அல்லாமல், உட்கட்சி ஜனநாயகம் மற்றும் மக்களின் அபிலாஷைகளின் குவியமாக இருக்க வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *