இருப்பதைக்கொண்டு வாழவேண்டும், இருப்பவர்கள் இல்லாத மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களையும் வாழவைக்கவேண்டும். பொதுவாக மற்றவர்களை வாழவைத்து வாழவேண்டும் அதுவே எனது நோக்கம் – அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு.
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையிலே 29-07-2016 வெள்ளி மாலை 3.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சங்கங்களுக்கான ஏறத்தாழ 2 மில்லியன் பெறுமதிவாய்ந்த பொருட்களும், அதே வேளை திணைக்களத்தால் தையல் பயிற்றப்பட்ட 17 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் என்பன வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மணல்குடியிருப்பில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் முல்லைத்தீவு பங்குத்தந்தை, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் க.சிவநேசன் (பவான்), அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.வில்வராஜா, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன், முல்லை மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய கிராம அபிவிருத்தி அமைச்சர், தாம் ஏற்கனவே பல தடவைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த சந்தர்ப்பங்களில் சந்தித்த சங்கங்களுடன் அவர்களது தேவைகளை கேட்டு அறிந்துகொண்டதாகவும், அந்த வேளையிலேயே இவ்வாறான பலதரப்பட்ட தேவைகளையும் மக்கள் தெரிவித்திருந்த சந்தர்ப்பத்தில், அவற்றிலே உச்சகட்ட பயன்படக்கூடிய இவ்வகையான பொருட்களை சங்கங்களுக்கு வழங்கும் பட்சத்தில் அதனைக்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தையும், சங்கங்களது தரத்தையும் உயர்த்தமுடியும் என்ற எண்ணத்தோடு தாம் இதனை வழங்க திட்டமிட்டதாகவும், அத்தோடு நம்முடைய சமூகங்கள் மாற்றமடையவேண்டும் அதாவது இருப்பதைக்கொண்டு வாழவும், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்தும் வாழவிக்கவேண்டும், ஆகவே தான் என்னுடைய சகல திட்டங்களும் மற்றவர்களை வாழவைத்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அமுல்படுத்துவதாகவும் தெரிவித்ததோடு,
இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டி அதனை தமது பிள்ளைகளது எதிர்கால கல்விக்கு பயனுள்ளதாக பயன்படுத்தவேண்டும் அவ்வாறு வளர்ச்சியடையும் சங்கங்களுக்கு தொடர்ந்து அபிவிருத்திக்கான உதவித்திட்டங்களை தான் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.