முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பும் பின்பும் காலாதி காலமாக முஸ்லிம்கள் அனுபவித்துவந்த உரிமைகள் ஒவ்வொன்றாக தடைசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
முஸ்லிம் பெண்கள் முழுமையாக தங்களது முகத்தினை மறைக்கின்ற புர்கா ஆடையை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கபட உள்ளது.
அதுபோல் பதினாறு வயதுக்கு கீழ்பட்டவர்கள் மத்ரசா கல்வியை கற்க முடியாதென்றும், பல இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்படுவதோடு, அதனோடு சம்பந்தப்பட்ட மத்ரசாக்கள் தடை செய்யப்படுமென்றும் அவ்வப்போது அரசாங்கம் அறிவித்து வருகின்றது.
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று கூறிக்கொண்டு மொத்தத்தில் எமது தனியார் சட்டத்தினை முற்றாக நீக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனை அறியக்கூடியதாக உள்ளது.
அடிப்படைவாதம், தீவிரவாதம் என்ற சொற்பதங்களை பாவித்து சீனா, மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் மீது நடாத்திய இன சுத்திகரிப்பு போன்று எதிர்காலங்களில் இலங்கையில் உள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீதும் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.
நாங்கள் இதுவரைகாலமும் பரம்பரை பரம்பரையாக அனுபவித்துவந்த உரிமைகளை தடைசெய்ய முற்படுகின்றபோது பாரிய எதிர்ப்புக்களும், போராட்டங்களும் முஸ்லிம் தரப்பிடமிருந்து உள்நாட்டில் மற்றும் சர்வதேசத்திலிருந்து வருகின்றதா என்று வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவே முன்கூட்டி அரசாங்கம் இந்த தகவல்களை வெளியிடுகின்றது.
ஆனால் சாதாரண முஸ்லிம் மக்களிடம் போர்க்குணம், முற்போக்கு சிந்தனைகள் காணப்பட்டாலும் மக்களை வழிநடாத்துகின்ற முஸ்லிம் தலைவர்களிடம் அவ்வாறான முற்போக்கு சிந்தனை எதுவும் இல்லை என்பதனை ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கின்றார்கள்.
விடுதலை புலிகளுடனான கடுமையான யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பு உற்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தற்கொலை தாக்குதல்களும், குண்டு தாக்குதல்களும், பிஸ்டல் குழுவினரின் தாக்குதல்களும் பரவலாக நடைபெற்றன.
இவ்வாறான தாக்குதல்களில் பல சந்தர்ப்பங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு வந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் உண்டு.
இவ்வாறான பயங்கரமான காலகட்டங்களில் இவ்வாறு முகத்தை மூடுவதனை தடை செய்திருந்தால் அதனை நியாயப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் நிராயுதபாணிகளாக வாழ்கின்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது தங்களது கோரமுகத்தினை காண்பிப்பதன் மூலம் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களின் ஆதரவு தளத்தினை அதிகரிக்கும் நோக்கில் வேண்டுமென்று முஸ்லிம்களின் கலாச்சாரங்களில் தடைகளை ஏற்படுத்துவதனை எமது தலைவர்கள் விளங்கிக்கொள்ளாமல் இல்லை.
ஆனாலும் எமது தலைவர்களினால் அறிக்கைகள் விடுவதனை தவிர வேறு எதுவும் செய்திட முடியாது.
அவ்வாறு “சாதாரண புர்கா தானே ! தடை செய்துவிட்டு போகட்டும், இதனால் எந்த பாதிப்புமில்லை” என்று நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதன் மூலம் எதிர்காலங்களில் இன்னும் பல தடைகள் எம்மீது வருவதற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும்.