Breaking
Sun. Nov 24th, 2024

-சுஐப் எம்.காசிம்-

உள்நாட்டு உற்பத்திகளில் நாட்டம் காட்டாத நிலைமைகளால் ஏற்பட்டுள்ள விபரீதங்களுக்கு கூட்டுப்பொறுப்பு அவசியம். எந்த அரசியல் கட்சிகளும் இதில் தனியே பிரிந்து நிற்க இயலாது. கடந்த காலங்களில் பெற்ற கடன்களால்தான் இன்றைய கையறுநிலை என யாரையும் விரல்நீட்ட முடியாத விபரீதமும் இதுதான். இதனால்தான், எல்லோரையும் கூட்டுப்பொறுப்புடன் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

இந்த ஒத்துழைப்பு அரசியல் ஆதாயம் சாராததாக இருப்பதும் அவசியம். தொழிற்சங்கங்களைத் தூண்டிவிடல், தருணம் பார்த்துக் கழுத்தறுக்க கைவிரித்தல், பதுக்கிவைத்தல் மற்றும் அரசியல் சாயம் பூசாது செயற்படல். இதுதான், ஜனாதிபதி கோரும் ஒத்துழைப்பு. ஆனால், இந்த உழைப்புக்கு இன்று ஒருவரும் தயாரில்லை.

யாரால் வந்த நெருக்கடி இது? இந்த நெருக்கடி யாரை நேரடியாகப் பாதிக்கிறது? என்ற பார்வைகள்தான் இப்போது அவசியம். இதைவிடுத்து வரவுள்ள வெளிநாட்டு உதவிகளைத் தடுப்பதும், சர்வதேசத்தில் அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பதும் தர்ம அரசியலாகுமா? ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு பொறுப்பானவர்களுக்குப் பதிலடிக்க தேர்தல் இருக்கிறதுதானே! அதற்காக, இப்போதிருந்தே இதற்கான வியூகங்களிலிறங்குவதுமக்களின் வயிற்றிலடிப்பது மாதிரித்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலின் நிலைப்பாடும் இதுதான். எல்லோரும் மூழ்கப்போகும் வெள்ளம் வருகையில்,இவரால்தான் வந்ததென்ற வீண்வம்பு பேசுவது, நுணலும் தன் வாயால் கெடும் என்பதுதானே!நாட்டின் கருவூலமான திறைசேரியை கூண்டோடே அள்ளிச்சென்ற கூட்டத்தினரின் சாயல்கள்தானே!அரசைப் புரட்ட சந்திக்கு வந்துள்ளன. அதைக் காப்பாற்றவோ அல்லது தண்டிக்கவோ திராணியிழந்த ஸ்ரீ.ல.சு.க.தானே, இப்போது சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்கிறது. அழைப்போடு மட்டும் நிற்கவில்லை இக்கட்சி. இன்னொரு புறம் கிளர்ச்சியையும் கிள்ளிவிடுகிறது. இதைத்தான் பிரதமர் பூடகமாகச் சொன்னார். ரணிலை அழைத்து தேசிய அரசாங்கம் அமைக்குமளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என்கிறார் அவர்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள், இந்திய உதவிகள் மற்றும் இதர திட்டங்கள் எல்லாம் மீண்டெழுகைக்கான மூலவழிகளல்ல. முதல்வழிகள் மாத்திரமே! இருந்தும், இதிலும் சிக்கல் இருக்கிறதுதான். இதற்காக, இவர்கள் விதிக்கப்போகும் விதிகள் அல்லது நிபந்தனைகள் நாட்டைப் பாதிக்குமா?தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் செல்வாக்குகளால், நாட்டின் இறைமைக்கு என்ன நேருமெனச் சிந்திப்பது நாட்டுப்பற்றாக இருந்தால் நல்லதுதான், அதற்காக இது ஆட்சிப்பற்றாக இருக்கக் கூடாது. எந்தப்பற்றாக இருந்தாலும் முதலில் மனிதப்பற்றாக அல்லது மானிடப்பாசமாக இருத்தலவசியம்.

இந்தியா இதைத்தான் செய்திருக்கிறது. ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கி, அயல் வீட்டு நண்பனின் அந்தரத்துக்கு உதவியிருக்கிறது. எரிபொருள், மருத்துவம், தொழினுட்பம் இன்னும் விவசாய நோக்குகளுக்குத்தான் இந்த நேசக்கரம். பின்னர்தான், இதற்கான பிரதிபலன்கள். இலங்கையின் இன்றைய நிலவரத்தில் இந்தப் பார்வைகளே அவசியம். இதைத்தான் நமது எதிர்க்கட்சிகளும் சிந்திக்க வேண்டும். இதைவிடுத்து, இன்றே தேர்தல் வேண்டும், உடனே அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதெல்லாம் எழுமாந்தமான உணர்ச்சிகளே!

தனக்கு உதவ முன்வந்த மூன்று அரபுநாடுகளின் உதவிகளையும் அரசுக்குப் பெற்றுக்கொடுக்க பணியாற்றியிருந்தால், சஜித் ஆசைப்படுவது, அடுத்த தேர்தலில் கிடைக்காமலா போகும்? மக்கள் இதை மறக்காமலா இருப்பர்? இந்த அரசுக்கு அரபுநாடுகளா உதவப் போகின்றன?என்ற கேள்விகள் எழாமல் இருக்காதுதான். உதவ வைப்பதை விடவும் சஜித்துக்கு என்ன பெயரும் புகழும் இருக்கிறது. இதில் இது மட்டுமா? ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளுக்குப் பின்னால், ஏகாதிபத்தியம் ஏதோ அடையக் காத்திருக்கிறது என்ற தென்னிலங்கை பிரச்சாரத்துக்காவது வாய்ப்பூட்டு போட்டிருக்கலாம் இல்லையா?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *