அவுஸ்திரேலியாவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையரான கசாண்ட்ரா பெர்னாண்டோ மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சிறுவயதில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த கசாண்ட்ரா வடக்கு விக்டோரியாவில் உள்ள மெல்போர்னின் தெற்கே உள்ள டான்டினாங்கில் வசித்து வருகின்றார். அங்குள்ள பாக்ஸ் ஹில் பாடசாலை மற்றும் வில்லியம் ஆங்கிலிஸ் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.
டான்டினாங் பிளாசா ஷாப்பிங் மாலில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு பல்பொருள் அங்காடியில் பேஸ்ட்ரி செஃப் ஆக 15 ஆண்டுகளாக அவர் பணியாற்றியுள்ளார்.மேலும், நாட்டின் சில்லறை மற்றும் துரித உணவுத்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலில் இணைந்துகொண்டார்.
அரசியலில் நுழைவதற்கு முன், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற முடியாத பின்னணியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு அறிவையும் புரிதலையும் வழங்க முன்வந்தார்.
கொவிட் தொற்றுநோய் முழுவதும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த குரல் எழுப்பியிருந்தார்.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நன்றியுணர்வை தனது வாழ்வில் இலட்சியமாகக் கொண்டுள்ள கசாண்ட்ரா, சவால்களை வென்று அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.