மஹியங்கனை பிரதேசத்தில் வாழும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தேடிப்போய் புத்தாண்டு பரிசு வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
மஹியங்கனை, தெஹிகொல்ல, மீவாகல பகுதியில் வாழ்ந்து வருகின்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு குழந்தைகள் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரின் இரத்த உறவினால் ஏற்படும் (Harlequintype ichthyosis) எனப்படும் இவ் அரிய வகை நோயால் குறித்த இரு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயினால் பீடிக்கப்பட்டுள்ள ஐந்து வயதான பெண் குழந்தை மற்றும் 10 வயதான ஆண் குழந்தைக்கு உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு இக் குழந்தைகளின் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள் அண்மைக் காலங்களில் செய்தி இணையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி பலரின் அனுதாபத்தையும் உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் குறித்த குழந்தைகளை தேடி அவர்கள் வசிக்கும் குடிசை வீட்டுக்கு நேரடியாகச் சென்றிருந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, குழந்தைகள் இருவருக்கும் ஏராளமான புத்தாண்டுப் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
பாடசாலை செல்ல முடியாத நிலையில் குழந்தைகளின் கல்வித் தேவையைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு கம்பியூட்டர் வழிக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான கம்பியூட்டர் கருவி, குழந்தைகளின் கோரிக்கையான மிதிவண்டி, குடும்பத்தினருடன் கொழும்புக்கு இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான செலவு ஏற்பாடுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் கிராமத்தில் 15 வீடுகள் நிர்மாணம் என்பன அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வழங்கியுள்ள புத்தாண்டுப் பரிசுகளில் சிலவாகும்.
அத்துடன் குறித்த குழந்தைகள் இருவருக்கும் மேலதிக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் ஹரின் செய்து கொடுத்துள்ளார்.
அத்துடன் குழந்தையின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை திருத்தியமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாவும்,குழந்தைகளுக்கு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காக 25 ஆயிரம் ரூபாவும் அமைச்சர் ஹரின் தன் சொந்தப் பணத்தில் இருந்து வழங்கியுள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலத் தேவைகள் குறித்து தன்னைத் தொடர்பு கொள்வதற்காக அவர்களின் பெற்றோருக்கு பெறுமதியான மொபைல் போன் ஒன்றையும் அமைச்சர் அன்பளிப்புச் செய்துள்ளார்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் மனிதாபிமானம் கண்டு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு அமைச்சர் ஹரினுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிக்கின்றது.