அரிசி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யாவிட்டாலும் இறக்குமதி செய்வதாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசி விநியோகி்ப்பதை வரையறை செய்வார்கள். அரிசி விலை அதிகரிக்கும் என அவர்களுக்கு தெரியும்.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி மற்றும் நெல்லை மறைத்து வைத்திருக்கிறார்கள். வரலாற்றில் இந்த முறைதான் அரிசி ஆலை உரிமையாளர்கள் பாரியளவில் இலாபமீட்டி இருக்கிறார்கள் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
ஏனெனில் 200 ரூபாவுக்கு மேல் அரிசி விலை அதிகரிக்க இடமில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவே 4 கேள்வி கோரல்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் குறைகாணவும் விமர்சிக்கவுமே இவர்கள் திறமையானவர்கள். ஆனால் வேலை செய்ய இவர்களிடம் திறமையானவர்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.