அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையொன்றை நிறைவேற்றுமாறு ஆளுங்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
முதலில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கபீர் ஹாசீம்,
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என சில எம்.பிக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது தவறான நடவடிக்கையாகும். அப்படியென்றால் நானும் மௌலவி ஒருவரிடம் கலந்துரையாடிய பின்னரா முடிவெடுக்க வேண்டும்? கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் எவராக இருந்தாலும் விரட்டவேண்டும் என்று கடுந்தொனியில் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எனவே, விசாரணைகள் நிறைவடையும்வரை அவர் அமைச்சுப் பதவியை துறக்க வேண்டும்.
விசாரணைகள் மூலம் அவர் குற்றமிழைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுமானால், மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் அரசிலிருந்து வெளியேறுகின்றோம் என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
இதன்போது எழுந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,
நான் குற்றமிழைத்தவன் அல்லன். கூட்டு எதிரணியின் சூழ்ச்சிக்கு எம்மில் சிலரும் துணைபோகின்றனர். வெளியேறுவதாக இருந்தால் எனது கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வெளியேறுகின்றேன். அதன்பிறகு நடப்பவற்றை பார்ப்போம் என கூறினார்.
இவ்வாறு கடும் சொற்போர் மூண்டதால் ஆளுங்கட்சி கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
அனைவரையும் அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுத்தபடியே எழுந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க,
நமக்குள் மோதல் ஏற்பட வேண்டும். கூட்டணி உடைய வேண்டும் என்பதே கூட்டு எதிரணியின் நோக்கமாகும்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையிலேயே இங்கு சிலர் செயற்படுகின்றனர். எவரும் குழப்பமடைய வேண்டியதில்லை.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கைச்சாத்திடுவோம். அப்போது இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டலாம் என்று யோசனை முன்வைத்தார்.