பொதுத்தேர்தலின் பின்னர் நீங்கள் எடுத்த பல அரசியல் நிலைப்பாட்டை நான் விமர்சிக்கத் தலைப்பட்டேன். ’பாவம் அந்த மனிதன் போதும் விட்டுவிடு’ என்று நான் மதிக்கும் சில நண்பர்கள் நேற்று வரைக்கும் என்னைத் தடுத்துவிட்டார்கள்.உங்கள் வாலில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஒட்டுண்ணிகளின் நடவடிக்கைகளால் என்னைத் தடுத்த நண்பர்களே என்னை ஆரம்பிக்குமாறு ஆசீர்வதித்திருக்கிறார்கள். இதை நான் பகிரங்கமாக எழுதியிருக்கமாட்டேன். ஆனால் உங்களைச் சூழ இருக்கும் அரசியல் ஞான சூனியங்கள் அநியாயத்திற்கு என்னை உசுப்பி விட்டிருக்கிறார்கள். அல்லாஹ் மீது ஆணையாக இதில் நான் இழக்கப்போவது எதுமே இல்லை.ஆனால் நீங்கள் இழக்கப்போவதோ ஒரு உலகம்.நீங்கள் மெதுமெதுவாக இதுவரைக்கும் கட்டிக்கொண்டுவரும் குருவிக்கூடு உங்களைச் சூழவுள்ளவர்களின் முட்டாள்தனத்தால் கீலங் கீலமாகச் இனிச் சிதறப்போகிறது.
எனது கூடையில் கற்கள் நிரம்பி வழிகின்றன. என்னோடு சேர்ந்து பலர் எறியக் காத்திருக்கிறார்கள். எனக்கு எப்படி எறிந்தால் மாங்காய் விழும் என்றும் தெரியும்.எப்போது எறிந்தால் மரம் சரியும் என்றும் தெரியும்.
நீங்கள் பொதுத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு நானும் ஒரு காரணம் என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. உங்கள் தோல்விக்கு நீங்கள்தான் காரணம்.இப்போது நீங்கள் மீண்டும் தலையெடுக்கிறீர்கள்.ஆனால் உங்கள் பழைய தவறுகளில் இருந்து நீங்கள் ஒற்றைப்பாடம் படித்ததாக இல்லை.உங்களிடம் பேசவேண்டியது அதிகம் இருக்கிறது.இனி ஒவ்வொன்றாகச் சொல்வேன்.
மஹிந்தவிற்கும் உங்களுக்கும் இடையில் அதிக ஒற்றுமைகள் இருக்கின்றன.மஹிந்த தோற்றது அவரைச் சூழ இருந்தவர்களால்.நீங்கள் தோற்றதும் உங்களைச் சூழ இருந்தவர்களால்தான்.
உலகில் அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும், அமெரிக்க ஜனாதிபதி உட்பட தன்னைச் சூழ நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொண்டிருப்பார்கள். தீர்க்கமான,தூர தரிசனம் கொண்ட ஆலோசகர்கள் அரசியல்வாதிகளுக்கு மிகவும் அவசியம்.ஒரு அரசியல்வாதி அழிவதும்,வாழ்வதும் அவனைச் சூழ உள்ளவர்களால்தான்.இது வரலாறு.
உங்களைச் சூழ உள்ளவர்களைச் சுற்றிப்பாருங்கள். உங்களுக்கு அரசியல் அறிவுரை சொல்பவர் யார்? நீங்கள் இப்போது எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லி உங்களுக்கு ஆலோசனை தந்த அந்த அறிவாளிகள் யார்?
நீங்கள் வைத்திருக்க வேண்டியது ஆக்கபூர்வமான விமர்சகர்களை.ஆனால் நீங்கள் கூட வைத்திருப்பதோ உங்களுக்கு கூஜா தூக்குபவர்களை.நீங்கள் ஒன்றைச் சொன்னால் ‘ஆகா தலைவன் சொன்னால் சரிதான்’ என்று சொல்லும் தலையாட்டி பொம்பைகளை.உங்கள் காலடியில் சுருண்டு கிடந்தால்தான் நீங்கள் சுவைத்துக் கடித்து, சப்பித்துப்பிவிட்டு, வீசும் அரசியல் எலும்புத்துண்டை அலாக்காகத் தூக்கிக்கொண்டு போகலாம் என்று அரசியல் கனாக் காணும் எச்சங்களை.உங்களை விட்டால் அவர்களுக்கு யாரும் இல்லை.உங்களினூடாகத்தான் அவர்களின் அரசியல் ஆசைகள் நிறைவேறும்.அதற்கு அவர்கள் உங்களைப் போற்றிப் புகழ வேண்டும்.அப்படிப் புகழ்ந்தால்தான் அவர்கள் உங்களுக்கு விசுவாசமானவர்கள் என்று காட்டமுடியும்.நீங்கள் கெட்டவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொண்டு நல்லவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்.
இவர்கள் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தவில்லை. பாரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களைச் சூழ உள்ள இந்த ஒட்டுண்ணிகளை விட்டுவிடுமாறு பலர் உங்களுக்குச் சொல்லியும் இருக்கிறார்கள்.நீங்கள் செவிமடுத்தபாடில்லை. இதனால் உங்களோடு சேர்ந்து வேலை செய்ய விரும்பும் பல உண்மையான இளைஞர்கள் தயங்குகிறார்கள்.
நீங்கள் ஒரு அழுக்கான ஆடை அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.அதைத் தூக்கி வீசி விட்டு ஒரு புத்தாடை அணியுங்கள்.உங்கள் காலிலிருக்கும் அந்த ஒட்டுண்ணிகளை அகற்றிவிடுங்கள் அது உங்கள் காலுக்கும் நல்லது,ஊருக்கும் நல்லது.
இல்லை.இதே அழுக்கோடுதான் நான் அரசியல் செய்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நீங்கள் கடலோரத்தில் கட்டிக்கொண்டிருக்கும் மண் குவியல் எப்போதும் ஒரு பேரலை வந்து சின்னாபின்னமாகலாம். நீங்கள் அழிந்ததும் உங்களைச் சூழ உள்ள சிறுவர்களால்தான். இனி அழியப்போவதும் அவர்களால்தான்.
எச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு உங்கள் குஞ்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் ஏதாவது பேசினால் நீங்கள் அமைச்சராக இருக்கும்போது உங்கள் அமைச்சுக்கு ஒதுக்கிய வரவு செலவு அறிக்கையோடு வெளியே வருவேன்.மீண்டும் சொல்கிறேன்.நீங்கள் இழப்பதற்கு அதிகம் இருக்கிறது,நான் இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.