Breaking
Wed. May 22nd, 2024

சுஐப் எம்.காசிம் –

பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கட்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்று. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பமான இக்கட்சியின் அதிகாரப் பந்தாட்டம் இன்னும் ஓயவில்லை.

“கோல் கம்பம்” எந்த அணியின் பந்தை உள்வாங்கும் என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை. ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பமான இந்த அணி மோதல்கள் இன்னும் முடியவில்லையே, எனச் சோர்ந்து போகும் ஆதரவாளர்களை, இக்கட்சி நிரந்தரமாக இழக்கும் நிலையே ஏற்பட்டு வருகிறது.

சஜித்தின் பந்தை ரணிலின் தந்திரம் வெல்லுமா?

ரணிலின் தந்திரத்தை சஜித்தின் பந்து வீழ்த்துமா? ஆதரவாளர்களுக்குத்தான் இந்த ஆதங்கமே தவிர, ஏனைய கட்சிகளுக்கு இது பொருட்டும் இல்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலையைக் கண்டுகொள்ளவும் இல்லை. “அரசாங்கம் அமைத்து ஆளப்போவது நாம், இதில் அயல் வீட்டு உட்பூசல்கள் எதற்கென்ற நிலையில்” ராஜபக்‌ஷக்கள் உள்ளனர். பல பிரதமர்களையும் இரண்டு ஜனாதிபதிகளையும் வென்றெடுத்த, சுமார் அறுபது வருட அனுபவங்களுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே, ‘எடுப்பார் கைப்பிள்ளையாக்கிய’ ராஜபக்‌ஷக்களுக்கு, இருபது தேர்தல்களில் தோல்வியுற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பொருட்டா? தன்னைத் தோற்கடித்த ஜனாதிபதியையே தெருவில் நிறுத்தியுள்ள குடும்பக்கூட்டுத்தான் பொதுஜன பெரமுனவுக்கும் பலம். அது தெரியாமலா? “நீர்க்காகம் மீனைப்பிடித்ததும் மீனைக் கழுகு பறித்த கதையும்” சொல்லுவது. ‘நுணலும் தன் வாயால் கெட்ட கதையாயிற்று’ இவரின் நிலை.

ஒருவாறு ஆட்சியைப் பிடித்தாலும் ஐந்து வருடங்களையாவது முழுமைப்படுத்தாது துவண்டு, திணறிய இவர்களின் ஆளுமைகளைத் தெரியாதா? இதற்குள் “இன்னுமா குடுமிச் சண்டை” எனப்பலரும் அலுத்துக்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகள் “கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல” பாராளுமன்றப் பலத்தையும் காலடியில் கொண்டு சேர்க்கவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்வதற்கு வியூகம் வகுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர், ரணிலின் மனவோட்டங்களைப் புரிந்ததாகத் தெரியவில்லை. “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விடாப்பிடியாக இருந்த சஜித், தேர்தலில் தோற்றவுடன் ஒதுங்கியிருக்க வேண்டும். விட்டுத்தருமாறு கோரிய ரணிலின் அத்தனை அறிவுரைகளையும் தட்டிக்கழித்து, தனிவழி செல்லத் துணிந்ததால், கட்சியைப் பிளவுபடுத்தும் சிந்தனைகளை முதலில் தூவியவர் சஜித்” என்பதுதான் ரணிலின் நிலைப்பாடு. அதிகாரத்தை மாத்திரம் சிந்தையில் கொண்டிருந்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியின் பெருமைகள், பிளவால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் கட்சிக்கான அவரது தந்தையின் தியாகங்களை நினைத்திருந்தால், விடாப்பிடிப்போக்கை கையிலெடுத்திருக்கமாட்டார். கடைசிச் சந்தர்ப்பத்தில் கழுத்தறுக்கும் வகையில் செயற்பட்டு, பதற்றத்தையும் ஏற்படுத்திய பொறுப்பையும் இவரே ஏற்கவேண்டும்.

‘சிறுபிள்ளையின் தீ விளையாட்டு, பெரிய அரண்மனைக்கே கொள்ளியாகும் நிலையையே’ சஜித்தின் செயற்பாடுகள் தோற்றுவித்துள்ளது என்பதுதான், ஸ்ரீகொத்தவாதிகளின் நிலைப்பாடு. இதனால்தான் கட்சி பிளவுபடும் ஆபத்தை உணர்ந்த ரணில் தரப்பு, விட்டுக்கொடுப்புக்கும் வந்தது. கடைசியில் என்ன? தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித்தின் தொந்தரவு தொடரவே செய்தது. “தலைமையைத் தா! எதிர்க்கட்சித் தலைவரைத் தா! பிரதமர் வேட்பாளரைத் தா!” என்ற இவரின் கோரிக்கைகள் நின்றபாடில்லையே. “ஐக்கிய மக்கள் சக்தி” என்ற கூட்டணியை அமைத்த சஜித், ‘யானைச் சின்னத்தையும் தா’ என்கிறார்.

இதையும் விடப் பெரிய பூதாகரம்தான், ரணில் தரப்பினரின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவுடன், பிரேமதாஸவின் சரித்திரம் முடிக்கப்பட வேண்டுமென்பதே இத்தரப்பின் எதிர்பார்ப்பு. பிரேமதாஸ யுகத்தை, பெருமைகளை, சாதனைகளை ஞாபகமூட்டி இனிப்பிழைக்க முடியாது. சஜித்தின் சிறுபிள்ளைப்போக்கு நீண்ட பெருமையுள்ள கட்சியை வழிநடத்தாது. புதிய தலைமுறைதான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அவசியமெனக் கருதும் ரணில், இத் தலைமையை அடையாளம் காணும்வரை அல்லது உரிய பக்குவம் சஜித்துக்கு வரும்வரை, ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்த விரும்புவதால், வௌிப்படும் வினைகள்தான் இந்தப் பந்தாட்டங்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தை சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வழங்கினால், ஐக்கிய தேசிய கட்சிக்கு எது சின்னம்? பங்காளிக் கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு அங்கமில்லாத நிலையில், யானைச் சின்னத்தை தாரை வார்க்க முடியாது. இவ்வாறு செய்யின் எதிர்வரும் சில வருடங்களுக்கு யானைச் சின்னத்தை பெறமுடியாது போகும். தான் தலைவரில்லாத ஒரு கட்சிக்கு யானைச் சின்னம் செல்வதை ரணில் விரும்பவில்லை. இதற்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஏற்பட்ட திரிசங்கு சோதனைகள் ரணிலுக்குத் தெரியாததா? கையாகி, பின்னர் கதிரையாகி, பின்னர் வெற்றிலையாகி இப்போது வெட்டிக் கதையாகியுள்ளதே இக்கட்சி. இந்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி சென்றுவிடக் கூடாது.

2015 இல் வெற்றியும் 2019 இல் தோல்வியும் பெற்றுத்தந்த அன்னத்தை அழகுபடுத்தினால் என்ன? அன்னக் கட்சியின் செயலாளர் ஷர்மிலா பெரேராவை உடன்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் உள்ள வழி. வழிகள் வந்தாலும் தந்திரங்கள் பலியாகுமோ தெரியாது. ரவியின் மன நிலைகள்தான் இவற்றில் ஆதிக்கம் செலுத்தும்.

ஒரு காலத்தில் எத்தனையோ கட்சிகளை பிரித்தாண்ட, உடைத்தெறிந்த, தடைவிதித்த கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைதானிது.

தேசபிதா டி.எஸ் உட்பட மூன்று ஜனாதிபதிகளை (ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாஸ, விஜயதுங்க) பெற்றெடுத்த இக்கட்சியின் சரித்திரம், சமாதியாகக் கூடாதெனப் பலரும் ஆதங்கப்படுவது உண்மைதான். இந்த ஆதங்கங்கள் அடுத்த கட்சிகளுக்கு ஆறுதலாகிவிடக் கூடாது. இதுதான் ரணிலையும் சஜித்தையும் மீளவும் இணங்கச் செய்யப்போகிறதோ…?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *