பிரதான செய்திகள்

வைத்தியசாலை பணியாளர்களால் பறிக்கப்பட்ட முஸ்லிம் ரில்வான்

கண்டி- அக்குறணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த நபர் ஒருவரை, வைத்தியசாலை பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தமை காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறணை- நிரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான மொஹமட் ரில்வான் என தெரியவந்துள்ளது.

அக்குறணை பிரதேசத்தில் ஹோட்டலொன்றை நடத்திச் செல்லும் குறித்த நபர், அக்குறணை நகரில் எரிபொருள் வரிசையில் இருப்பவர்களுக்கு தேநீர் வழங்குவதற்காக இஞ்சி கொள்வனவுக்காக அருகிலிருக்கும் கடைக்குச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவரது மகன் காரொன்றின் மூலம் தந்தையை கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போது, அங்கிருந்த பணியாளர் ஒருவர், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நோயாளர்களை பொறுப்பேற்பதில்லை என தெரிவித்து,  விபத்துக்குள்ளானவரை பொறுப்பற்க மறுத்துள்ளார்.

இதன்போது விபத்துக்குள்ளான நபருக்கு முதலுதவி அளிப்பதற்கு கூட வைத்தியசாலை பணியாளர்கள் முன்வராத நிலையில், பேராதனை வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டு செல்வதற்கும் அம்பியூலன்ஸ் வண்டியையும் தர மறுத்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மகன் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்த போது, ஒரு வைத்தியசாலையிலிருந்து மற்றுமொரு வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டு செல்லும் பணியை தாம் செய்வதில்லை என பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து கண்டி வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் 6,500 ரூபாய் செலுத்தி தனியார் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் விபத்துக்குள்ளானவர் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் நோயாளியைப் பொறுப்பேற்காமை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் முறையிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பேராதனை போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி அமல் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

பழிவாங்கல்களை தடுக்க நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க

wpengine

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine