Breaking
Sat. Jun 22nd, 2024

P.M. முஜிபுர் றஹ்மான்

அன்று 1990 ஒக்டோபர் மாதம் பெரும்போக விவசாயத்திற்கான மழை பெய்து கொண்டிருந்தது. விவசாயிகள் பெரும்போக விவசாயத்தை மேற்கொள்வதற்காக வேண்டி மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள். திடீரென பள்ளிவாசல் ஒலி பெருக்கிச் சத்தம் ஒலித்தது. (முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒலி பெருக்கி இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும். ஒன்று, மக்களை பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக அழைப்பதற்கு – பாங்கு சொல்வதற்காக – இரண்டாவது, ஏதாவது அறிவித்தல்களை வழங்குவதற்காக பயன்படுத்துவது) இரண்டாவது விடயத்தை மக்கள் மிகவும் அவதானமாக கேட்பார்கள். அன்றும் இரண்டாவது காரணத்திற்காக நேரம் தப்பிய நேரத்தில் பள்ளிவாசல் ஒலி பெருக்கிச் சத்தம் ஒலித்தது. மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக செமிமடுத்தனர்.
அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் பள்ளிவாசல் ஒலி பெருக்கிகள் மூலம் தங்களின் அறிவித்தலை அறிவித்தனர். ‘தமிழர் தாயகத்தைவிட்டு 24 மணித்தியாலத்திற்குள் வெளியேறுங்கள்’ அத்தோடு ‘அனைத்து வகையான இயந்திரங்கள், நகைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை பள்ளிவாசலில் உள்ள விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறும்’ கட்டளையிட்டனர்.

இக்கட்டளையால் கதிகலங்கி நின்ற இம்மக்கள் செய்வதியாது திண்டாடினர். அனைவரும் அல்லோல கல்லோலப்பட்டனர். உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு செல்வதா? பொருட்களை எடுத்துச் செல்வதா? நோயினால் படுக்கையில் கிடக்கின்ற தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளை எடுத்துச் செல்வதா? எடுத்துச் செல்வதாக இருந்தால் எவ்வாறு எடுத்துச் செல்வது? உணவுக்கு எதனை எடுப்பது? பிள்ளைகளின் படிப்புச் சாதனங்களின் நிலை என்ன? காலா காலமாக கவனமாக பாதுகாத்து வந்த வரலாற்று ஆதாரங்கள் கொண்ட புத்தகங்களை என்ன செய்வது? புத்தகங்களை எரிப்பதா? கொண்டு செல்வதா? புத்தகங்களைக் கொண்டு செல்வதாக இருந்தால், இந்த அடை மழையில் எப்படி கொண்டு செல்வது? இவைகளை எல்லாம் விட்டு விட்டுச் செல்கிறோமே, எத்தனை நாளை எங்களை வெளியேற்றுகிறார்கள்? நாம் வெளியேறி ஒரு சில நாட்களில் மீண்டும் திரும்பிவிடலாம், என்றால் ஏன் அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு தீர்க்கமாக பதிலில்லாமல், உயிர்களை மாத்திரம் பாதுகாத்துக் கொண்டு ஏனைய அனைத்து உடமைகளையும் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். (அவ்வாறு ஒப்படைத்த பொருட்களுக்கு இப்போது யார் பொறுப்புக் கூறுவார்கள்)

அவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடியும் வரை புத்தளம் மற்றும் நாட்டின் பல பாகங்களில் உள்ள அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அது ஒரு திறந்த சிறைக்கூடம் என்றே பலரும் கூறினர்.

திறந்த சிறை (அகதி) வாழ்வு

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் புத்தளம் மற்றும் நாட்டிலுள்ள பல இடங்களில் திறந்த சிறையில் (அகதி முகாமில்) அடைக்கப்பட்டனர். அது சிறையைவிடவும் பயங்கரமானது. அங்கு குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கவில்லை, மலசலகூட வசதி, இருப்பிட வசதி என எவ்வித வசதிகளும் இருக்கவில்லை.

அதைவிட கொடுமை உண்ண உணவிருக்கவில்லை. உடுத்த உடை இருக்கவில்லை. சிறுவர்கள், பெண்கள் சொல்லெனா துயரங்களை எதிர்நோக்கினார்கள்.
ஓலைகளால் அமைக்கப்பட்ட இருப்பிடங்களில், நச்சுப் பாம்புகளோடு ஒன்றாக வாழ்ந்தனர்.

வீட்டின் கூரையின் ஊடாக நச்சத்திரங்களை அழகாக அவதானிக்கலாம். அதேபோல், மழை பெய்தால் மழை நீர் வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்திச் செல்லும். புத்தகங்களை மழை நீரும் வாசித்து பக்கம் பக்கமாக நீராடிச் செல்லும்.

அத்திறந்த சிறையில் (அகதி முகாமில்) சிறுவர்களின் விளையாட்டுக்குக்கூட சுதந்திரம் இருக்கவில்லை. அவர்களின் சிறுபிராயம் மற்றும் இளமைப் பருவம் என அனைத்தும் இச்சிறையிலேயே சீரழிக்கப்பட்டது. இவ்வாறு சிறுபிராயத்தையும் இளமைப் பருவத்தையும் இழந்து தவிக்கும் இவர்களுக்கு என்ன தீர்வு வழங்குதல்.

அகதி முகாமில் வாழும் மாணவர்களுக்கு கல்வி என்பது பாரதியாரின் ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு தரும் பாட்டு, மாலையானவுடன் விளையாட்டு’ என்ற கூற்றுக்கு முழுக்க முழுக்க மாற்றமாகவே இருந்தது. அதாவது, காலை எழுந்தவுடன் விளையாட்டு, பின்பு தோட்டங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் பணத்துக்காக ஏக்கம், மாலையானவுடன் படிப்பு. இப்படித்தான். மாலையில்தான் பாடசாலைகள் நடக்கும்.

அகதி முகாம் வாழ்வு, 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுற்றதும் ஒரு மாற்றத்திற்கு வந்தது. வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தங்களது தாயக பூமிக்கு மீண்டும் மீள்குடியேற ஆரம்பித்தார்கள். இன்று 2022 ஆம் ஆண்டு வரை மீள்குடியேற்றம் பூரணமாக நிறைவேறவில்லை என்றே கூறலாம்.

நிலைமாறு காலமும் மீள்குடியேற்றமும்

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்கள் வடக்கு மக்களின் அகதி வாழ்வுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதாகக் கூறியது. அதன்படி, நிலைமாறு கால நீதியின் அடிப்படையில் மீள்குடியேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
அதாவது, நிலைமாறு காலம் என்பது நீண்டகாலமாக வெளியேற்றப்பட்ட அகதி மக்கள், வெளியேற்றப்பட்டு வாழும் இடங்களில் தங்களுக்கான சில திட்டங்களை வகுத்து ஓரளவு வசதியோடு வாழ்கிறார்கள். அவர்களும், அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களும், உடனடியாக மீள்குடியேற மாட்டார்கள். அவ்வாறு உடனடியாக மீள்குடியேறவும் இயலாது.
ஏனெனில், 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை 20 வருடங்களாக பாவனையற்று இருந்த வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த அனைத்து பிரதேசங்களும் காடுகளாக மாறியுள்ளன. இக்காடுகளை அழித்து, சில அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமை.
இவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட சில காலம் எடுக்கும் என்பதற்காகவே நிலைமாறு கால நீதி என்ற பொறிமுறையை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்தியது.

ஆனால், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் இப்பொறிமுறை பின்பற்றப்படவில்லை. வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறச் சென்றால் உடனடியாக குடும்பம் சகிதம் சொந்த இடத்திற்கு மீளவேண்டும். அங்கு குறிப்பிட்ட காலம் வாழ வழியில்லாமல், தற்காலிய கொட்டில்களிலும், கூடாரங்களிலும் வாழ வேண்டும். அதன் பின்னர்தான் பிராந்திய கிராம சேவகர் வந்து உத்தரவாதம் வழங்குவார்.

அதுவரை, மலசல கூட வசதி இன்றி, பெண் பிள்ளைகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். இது ஆரம்பகால அகதி முகாம் வாழ்வைவிட கொடுமையானதாக இருந்தது. வடமாகாண நிருவாகமும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய அசமந்தப் போக்கையே கடைபிடித்தது.

நிலைமாறு கால நீதி பொறிமுறை நடைமுறையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலேயே வடமாகாண நிருவாகம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் இரும்புப் பிடியைக் கடைபிடித்தது. அவ்வாறான கொடுமையிலும் இம்முஸ்லிம்களின் 53 வீதமானவர்கள் மீள்குடியேறியுள்ளார்கள்.

ஆனால், கல்வி வசதிகள் சீராக்கப்படவில்லை. சுகாதாரத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. போக்குவரத்து மற்றும் ஏனைய நிருவாக செயற்பாடுகளில் பாரிய பாகுபாடும், ஒதுக்குதலும் நடைபெறுகின்றன.

இவ்வாறான, பல்வேறு சிரமங்களுக்கும் பாகுபாட்டுக்கும் மத்தியில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு அரசாங்கமும், வடமாகாண சபையும் உரிய வசதிகளை முன்னேடுக்க வேண்டும்.

வடமாகாண முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றமும் தடைகளும்

1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதமுனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண (யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார்) முஸ்லிம்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் தங்களது தாயக பூமியான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற ஆரம்பித்தார்கள். இது அகதி முகாம் (திறந்த சிறைக் கூடம்) வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்ற ஆனந்தத்திலேயே மீளத்திரும்பினார்கள்.

ஆனால், அவர்களின் ஆசைகள் நிராசையானது. எதிர்பார்ப்புக்கள் தவிடுபொடியானது. தங்கள் தாயக பூமியிலேயே மீள்குடியேற பல்வேறு தடைகளும் முட்டுக்கட்டைகளும் தொடர்ச்சியாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக போடப்பட்டன. ஒரு பக்கம், மத்திய அரசாங்கத்தின் தடைகள். மறுபுறம் மாகாண அரசாங்கத்தின் ஒதுக்குதல். வடமாகாணத்திலுள்ள நிருவாகங்களின் ஒதுக்குதலும் அடக்குமுறைகளும் பாகுபாடும் மத்திய மற்றும் மாகாண அரசின் செயலை மிஞ்சியதாகவே இருக்கிறது. இங்குள்ள அடக்குமுறையை பார்க்கின்றபோது, அகதி முகாம் (திறந்த சிறை) வாழ்வு எவ்வளவே நல்லது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், அகதி முகாம் வாழ்வைவிட படு மோசமானதாக இங்குள்ள பாகுபாடுகள் காணப்படுகின்றன.
சொந்த மண்ணிலே சிறைவாழ்வு என்றால் எவ்வளவு பெரிய கொடுமை. சொந்த மண்ணிற்கு மீள்குடியேறுவதற்குப் பதிலாக நாட்டின் எங்கோ ஒரு மூலையில் அல்லது அகதி முகாமிலேயே எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போயிருந்தால் நல்லா இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கு முஸ்லிம்களின் கல்வியிலும், மாணவர்களின் செயற்பாட்டிலும் நடக்கும் பாகுபாட்டின் வடிவத்தை எப்படி சித்தரிப்பது என்று தெரியாது. அதைவிட இன்னுமொரு படி மேலே சென்று பார்த்தால் முஸ்லிம் பிரதேச சுகாதார துறையின் ஒடுக்குமுறையை நினைக்கவே மனசு கனக்கிறது. போக்குவரத்து, ஏனைய துறைகளான நீர்ப்பாசனம், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளின் வாடயைக்கூட முஸ்லிம்களால் நுகர முடியாத நிலை காணப்படுகிறது.

நில ஆக்கிரமிப்பும் மீள்குடியேற்றமும்

நாங்கள் மீள்குடியேறுவதற்கு முன்னரே எங்களது தாயக பூமியின் பெரும் பகுதியை மத்திய அரசு ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களது நிலங்களை கடற்படை முகாமுக்கும், இராணுவத்தினருக்கும் அரசாங்கம் தாரைவார்த்துள்ளது. மீள்குடியேறி ஒரு சில மாதங்களில் மேலும் சில நிலங்களை மீள்காடாக்கும் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி எங்களது நிலங்களை அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டது.

அதன்போது தங்களது சொந்த பூமியில் மீள்குடியேறச் செல்கின்றவர்களை வன இலாக்கா குழுவினர் மீள் காடாக்கும் திட்டத்தின் கீழ் ஆக்கிரமித்தனர். முல்லைத்தீவு, மன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் வாழ்விடங்களின் எல்லைகளோடு காடுகள் என்று பிரகடனப்படுத்தினர். காடுகள் என்ற எல்லைக் கல்லைப் போட்டு கட்டுப்படுத்தினார்கள். சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அதன் மூலம் எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால், மொத்த முஸ்லிம் அகதிகளில் 55 வீதமானவர்களே மீள்குடியேறி இருப்பார்கள். ஏனையவர்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள்.

மன்னார் முசலிப் பிரதேசத்தில் இதன் தாக்கம் பாரியளவில் இருக்கின்றது. இவர்களின் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பிரதேசங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

நிருவாக ஒடுக்குமுறையும் வாழ்வியலும்

1990 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சுமார் 20 வருடங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்த முஸ்லிம்களின் பிரதேசம். யுத்தம் முடிவுற்றதும் மீள்திரும்புகின்றபோது அது அடர்ந்த காடுகளாக காட்சியளித்தன. காடுகளாக மாறியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புப் பிரதேசங்களை அப்போதைய அரசாங்கம் காடுகளை சுத்தப்படுத்திக் கொடுத்தது. (குறிப்பு – இதுதான் இப்போது காடுகளை அழிக்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது)

மீள்குடியேற வசதியுள்ளவர்கள் உடனடியாக மீள்குடியேறுகிறார்கள். ஆனால், போதிய வசதியற்ற, தகுந்த உதவியில்லாத எத்தனையோ பேர் மீள்குடியேறுவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள, வறுமைக் கோட்டில் இருக்கின்ற மக்களுக்கு வடக்கு நிருவாகம் கொஞ்சமும் கரிசினை காட்டுவதில்லை.
இவ்வறிய மக்கள் அல்லது பெண் தலைமை தாங்கும் பெண்கள் மீள்குடியேறுவதாக இருந்தால் குடும்பம் சகிதம் வந்து குறைந்தது ஒரு வருடம் வாழுமாறு வடக்கு நிருவாகம் கூறுகிறது. ஆனால், இங்கு வீட்டு வசதிகள் இல்லை, மலசல கூட வசதிகள் இல்லை, மற்றும் ஏனைய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் வடக்கில் வந்து மீள்குடியேறி எப்படி வாழ்வது?

ஏற்கனவே அவர்கள் வறிய நிலையில் உள்ளவர்கள், பெண் தலைமை தாங்கும் பெண் இங்கு வந்து தற்காலிக கொட்டில்களை எப்படி அமைப்பது? அதற்கான நிதியை யார் வழங்குதல்? அதேநேரம் அவர்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு யார்? அதுவும் பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்களை எங்கு பாதுகாப்பாக வைப்பது?

பெண் தலைமை தாங்கும் தாயாக இருந்தால் தனது பெண் பிள்ளையை புத்தளத்தில் தனியாக வைத்துவிட்டு எப்படி மீள்குடியேறுகின்ற பகுதியில் இருந்து தனது வேலைகளை மேற்கொள்ள முடியும்? அவ்வாறில்லாமல் மீள்குடியேற்ற பகுதிக்கு அழைத்து வந்தால் எங்கு வைப்பது? அவர்களின் அத்தியாவசியத் தேவையை எப்படி நிறைவேற்றுதல்?

இப்போதுள்ள நிலையில் இங்கும் அங்கும் அலைவதற்கு போக்குவரத்துச் செலவுகளை யார் வழங்குவது? இவ்வாறான இக்கட்டான நிலையிலும் வடக்கு நிருவாகம் இரும்புப் பிடியையே கடைபிடிக்கின்றது. இதனால், அதிகமானவர்கள் மீள்டியேறாமல் அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள்.

வாக்குரிமையும் அகதி மக்களும்

வடக்கு நிருவாகத்தின் இவ்வாறான இறுக்கமான தன்மையால் பெரும்பாலான வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறாமல் சுமார் கடந்த 10 வருடங்களாக இங்கும் அங்குமாக அலைந்து திரிகிறார்கள். இதனால், கடந்த கொரோனா காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் சிலர் புத்தளத்தில் உள்ள உறவினர்கள் மற்றம் பிள்ளைகளின் வீடுகளுக்கு சென்றவர்களால் மீளத் திரும்ப முடியவில்லை.
அப்போது வடக்கு நிருவாகம் மிக நரித்தனமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. அதாவது, வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் புத்தளத்தில் இருந்தால் அவர்கள் உடனடியாக பதிவு செய்தால் அவர்களுக்கான சமுர்த்தி நிதியை புத்தளத்திலேயே வழங்க முடியும் என்று அறிவித்தது.

இதிலுள்ள நரித்தனத்தை அறியாத அப்பாவி மக்கள் 5000 சமுர்த்தி நிதிக்காக முண்டியடித்துக் கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்தார்கள். அப்பெயர்ப் பட்டியலைப் பயன்படுத்தி புத்தளத்தில் உள்ள அனைவரது பெயர்களையும் வடக்கில் எங்கெல்லாம் வாக்காளர் பதிவு இருக்கிறதோ அவைகளை உடனடியாக நீக்கியது.
இப்போது, பெரும்பாலானவர்களுக்கு புத்தளத்திலும் வாக்கில்லை. வடமாகாணத்திலும் வாக்கில்லாமல் இருக்கிறார்கள்.

ஏனைய துறைகளும் பாகுபாடும்

இப்படி, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் வடமாகாண முஸ்லிம்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். பல்வேறு அடக்கு முறைகளையும் பாகுபாட்டையும் அனுபவிக்கிறார்கள்.
இவைகள் தீர்க்கப்பட்டு, அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற அடிப்படையில் மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மனிதம் வாழ்வதற்கு உதவியாக அமையும்.

இம்மனித பண்பாட்டை அண்மையில் நடைபெற்ற யாழ் பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் கண்டோம். அவ்வாறான மனிதத்தை வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை இழந்துள்ளனர். எதிர்வரும் காலம் வடமாகாணத்தில் மனிதம் மேலோங்கி அனைவரும் சுபீட்சமான வாழ்வை பெற அனைவரும் வழிவகுக்க வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *