பிரதான செய்திகள்

பொதுபல சேனாவை பாலூட்டி வளர்த்தவர்கள் அமைச்சுக்களை அலங்கரிக்கின்றனர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பொதுபலசேனாவை மஹிந்த அரசு உயிரோட்டமான அமைப்பாக மாற்ற முயற்சிக்கின்றது என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு முரணானதே என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற நிலையினைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றினை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

மஹிந்த ஆட்சி காலத்திலும் கூட பொதுபலசேனாவை அந்த ஆட்சி உருவகப்படுத்தவில்லை. அது பௌத்தர்களுக்காக வேண்டி தானாகவே ஏற்படுத்திய தொரு இயக்கம். அவர்கள் செய்த அட்டகாசங்களுக்கு அன்றிருந்த அரசாங்கத்தை நாலாபுறமும் சாடினார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு இழைத்த துன்புறுத்தல்களுக்கு பின்னணியில் இருந்து சர்வதேச கரங்கள் சூழ்ச்சி செய்திருக்கின்றன என்பது இப்பொழுது புலனாகின்றது.

சர்வதேச பல இயக்கங்கள் இதற்கு காலாக அமைந்தன. மஹிந்த அரசை வீழ்த்துவதற்கு முஸ்லிம்களை தயார்படுத்துவதன் மூலமாகவே இந்தத் துரோகம் இழைக்கப்பட்டது. அன்று பொதுபலசேனாவை பாலூட்டி வளர்த்தவர்கள் இன்று இந்த அரசில் அமைச்சுப்பதவிகளிலும் மற்றும் ஏனைய பதவிகளிலும் அமர்ந்திருக்கின்றார்கள் என்ற உண்மையை இன்று அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறுத்தாலும் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் இதனை நன்கு அறிந்துவிட்டார்கள். உண்மையை உணர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய சர்வதேச சதித்திட்ட வலைப்பின்னல் அன்று சாத்தியமாகியது. ஆனால் அதற்கு பின்னால் இருந்தவர்கள்தான் இன்று கூட பொதுபலசேனாவை பாலூட்டி வளர்க்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே பொதுபலசேனாவுடைய அட்டகாசங்களை இன்று எதிர்க்கட்சியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் ஏனையவர்களும் கடுமையாகச் சாடி வருகின்றனர். அவர்கள் ஏற்படுத்தியதொரு இயக்கம் என்றால்  அவர்கள் ஏற்பாடு செய்த உருவகம் என்றால் அப்படி அவர்களால் செய்ய முடியாது.

எனவே இன்று கூட இந்த அட்டகாசங்களைச் செய்தவர்களைக் கைது செய்ய முடியாது இந்த அரசாங்கம் சாக்கு போக்குளைக் கூறிக்கொண்டு போகின்ற மிகப் பரிதாபகரமான நிலையைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். எனினும் இந்தப் புனித மாதத்தில் குனூத் ஓதி துஆக் கேட்கும் அனைத்து முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகளும் நிச்சயமாக வெற்றி பெற்று, இந்த நாசகாரக் கும்பல் அடியோடு ஒழிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் பூரணமாக நம்பலாம்.

பொதுபலசேனாவுக்கு இன்று யார் பெருமை கொண்டாடுகின்றார்கள் என்று சொல்வதைவிட இன்று அவர்கள் புரிகின்ற  அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அல்லாஹ்வைத் தூற்றிய, அநியாயங்களைச் செய்தவர்களை உடன் கைது செய்வதற்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஏனையோர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து முஸ்லிம்களுடைய ஏகோபித்த வேண்டுகோளாகும் என்பதையும் நான் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன் – என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் பாவத்தை சுமக்கும் நல்லாட்சி; விஷ ஊசி விவகாரத்தால் மேலும் தலையிடி

wpengine

சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி

wpengine

பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

wpengine