(ஊடக பிரிவு)
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில், தற்போது வெளியாகிய உயர்தர பெறுபேறுகளில் ஐந்து பிரிவிலும் பாடசாலை மட்டத்தில் முதலாவது இடத்தை பெற்ற மாணவிகளைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01-04-2016) அன்று பாடசாலையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.செபஸ்டியன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு மூலகாரணமாக 2014 ஆம் ஆண்டு கல்லூரியின் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்ட போது, அதிபர் அவர்களால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கான பல்லூடகத்தொகுதியை வழங்கி வைப்பதற்கு மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு பாடசாலைக்கு விஜயம் செய்தவேளை அங்கே மாணவர்களோடு கலந்துரையாடுகையில் உயர்தர மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கோடு அனைத்து பிரிவுகளிலும் மாவட்ட மட்டத்தில் முதல் இடங்களைப் பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் தான் ரூபா 50,000 தருவதாக வாக்களித்திருந்தார், அதே வேளை இதே போன்று மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக ஐந்து பாடசாலைகளுக்கு இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்க்கு அமைவாக நடந்த இவ் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதோடு அங்கு உரையாற்றுகையில், தாம் வழங்கிய வாக்குறுதியை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக நிறைவேற்றுவேன் என்றும், அதற்க்கான உத்தியோகப்பூர்வ செயற்ப்பாடுகள் நடைபெறுகின்றது என்றும் தெரிவித்ததோடு, கல்லூரியால் கௌரவிக்கப்பட்ட ஏனய நான்கு மாணவிகளுக்கும் அவர்களது கல்வி மேம்பாட்டிற்கும் புலம்பெயர் உறவுகளின் உதவியைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார், அத்தோடு மாணவர்கள் தமது எதிர்காலச் செல்வமான கல்விச் செல்வத்தை சரியான முறையிலே கற்று வளர்வதோடு ஒழுக்கத்திலும் உயர்ந்து விளங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.