பிரபாகரனைப் புகழ்ந்த சம்பந்தன்

வடகிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு 30 வருடங்களாக மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் நியாயமானது எனவும், அதன் நியாயத்தன்மையை புரிந்துகொண்டு அந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அரசின் பொறுப்பாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லையெனில் எதிர்பாராத நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு தான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட பின்னர் தமிழ் மக்களுடன் இணைந்து ஐக்கிய போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் வடகிழக்கு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் குறித்த போராட்டமானது நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஆயுத போராட்டம் இல்லாமல் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் நிலையான அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமை வடகிழக்கு தமிழ் மக்களுக்கு உள்ளதாகவும் அதுவிடயம் தொடர்பாக தான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்படவேண்டும் எனவும், இதில் முஸ்லிம்கள் சார்பாக அவர்களது பிரதிநிதிகளும் பங்குபற்ற வேண்டுமெனவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது தட்டிக்கழிக்கப்படுமானால் மீண்டும் எதிர்பாராத நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வொன்றை என்றும் ஏற்றுகொள்ளப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares