பிரதான செய்திகள்

செல்வநகர் முஸ்லிம்களும் மகிந்த ஆட்சியில் விதைக்கப்பட்ட தீயினை இன்று அறுவடை செய்கின்றார்கள்.

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியில் அமைந்துள்ள செல்வநகர் கிராமமானது சுமார் 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேனைப்பயிர் செய்கையுடன் உருவான முஸ்லிம் கிராமமாகும். இங்கே நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த கிராமத்தில் பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளது. அந்த விகாரைக்கு சொந்தமான காணிகள் ஆறு ஏக்கர்கள் மட்டுமே. ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் விகாரையை அண்மித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான நாப்பத்தி ஒன்பது ஏக்கர் காணிகளை உள்ளடக்கி, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமானது என்று வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களை தொல்பொருள் திணைக்களம் என்ற போர்வையில் சிங்கள பேரினவாதம் சுவீகரித்துள்ளது.

சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான குறித்த காணிகளில் மாடுகள் மேய்வதனால் அதற்கு சுற்றுமதில் அமைக்கும் பொருட்டு, நேற்று கனரக இயந்திரங்களுடன் பேரினவாதிகள் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட போதுதான் பிரச்சினை உருவானது. அதாவது காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை பார்வையிட சென்றபோது விரட்டப்பட்டுள்ளதுடன், அவர்களது வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் மது அருந்திக்கொண்டு எங்களுடன் கலாட்டா செய்ய வந்துள்ளார்கள் என்று கூறி பேரினவாதிகள் முஸ்லிம்களை தாக்கியுள்ளதுடன், சேருவில பகுதியில் உள்ள ஏனைய சிங்கள இளைஞ்சர்களை மேலதிக உதவிக்காக வரவழைத்து இன்னும் பதற்றத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

இதனால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பாதுகாப்பு கருதி, தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ளும் முகமாக இரவோடு இரவாக அருகிலுள்ள முஸ்லிம் பிரதேசத்துக்குள் தஞ்சமடைந்துள்ளார்கள்.

பிரச்சினையினை கேள்வியுற்றதும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு விஜயம் செய்ததுடன், பாதுகாப்பு உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பாதுகாப்புக்காக அப்பிரதேசத்தில் படையினர்கள் குவிக்கப்பட்டதனால் பதட்டநிலை தணிக்கப்பட்டது.

செல்வநகர் மக்களின் காணிகள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமானதாக வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டது சம்பந்தாக கடந்த ஜனவரி மாதம் மு. கா தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் தொல்பொருள் திணைக்களத் தலைவரை சந்தித்து தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தார்கள்.

நேற்றைய பதற்றநிலை சம்பந்தமான உயர்மட்ட கூட்டம் இன்று கிழக்குமாகான ஆளுநர் தலைமையில் கூடியது. அதில் மாவட்ட செயலாளர் தலைமையில் பிரதேச செயலாளர் மற்றும் மாகான காணி ஆணையாளர் ஆகியோர் அடங்கலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு மாதத்துக்குள் தங்களது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மகிந்த ஆட்சியில் விதைக்கப்பட்ட இனவாத தீயினை இந்த நாட்டு முஸ்லிம்கள் இன்று அறுவடை செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்த இனவாத தீயினை அகற்றுவதென்பது சாதாரண விடயமல்ல. இதற்கு பௌத்த மேலாதிக்கவாதம் இடம் கொடுக்குமா என்பதுதான் புரியாத புதிராகும்.

Related posts

ஆட்டமிழக்கச் செய்யும் அரசியல் சிந்தனைகள்;சிறுபான்மை அணிகள் சாதிப்பது எவ்வாறு?

wpengine

சமூக வலைத்தளங்கள் தடை அவகாசம் எடுக்கும்! பலர் மனரீதியாக பாதிப்பு

wpengine

நல்லாட்சியில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம்.

wpengine