பிரதான செய்திகள்

கூட்டமைப்புக்குள் முரண்பாடு வலுக்கிறதா?

இலங்கையில் பெருமபான்மையான தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உரசல்கள் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.

கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டம் இதற்கு ஒரு உதாரணம் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

யாழ்ப்பாணம் மருதனாமடுப் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டம் முழுமையாக தமிழரசுக் கட்சியின் கூட்டமாக இருந்ததே தவிர, அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமாக இருக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வு எவ்வாறு இருக்கப் போகிறது, அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்த எந்த தகவலும் தமிழ் மக்களுக்கு தெரியாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலின்போது இனப்பிரச்சனைக்கானத் தீர்வு 2016ஆம் ஆண்டு எட்டப்படும் என அவர் கூறியதை வைத்தே மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும், தனியான கட்சிகள் சார்பில் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து விஷயங்களையும் கூட்டமைப்பின் தலைவர் இரகசியமாகவே கையாளுகிறார் எனக் கூறும் சுரேஷ், தமிழரசுக் கட்சி தனிவழியாகச் செயற்பட்டு தனிவழியில் செல்ல விரும்புகிறது எனவும் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசு கட்சியே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் எனவும் சாடியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பிலுள்ள இதர கட்சிகள் அவ்வாறு எவ்வகையிலும் செயல்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் சம்ப்ந்தர் பொய்யான ஒரு பிம்பத்தை கொண்டுவர முயற்சிக்கிறார் எனவும் ஈ பி ஆர் எல் ஃபின் தலைவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சியை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

Maash

அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு! வாகனம் தொடர்பாக

wpengine

சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்த விசேட நடவடிக்கை!

Editor