பிரதான செய்திகள்

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிலாவத்துறை காணி மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை அமைச்சர் றிசாட்

(சுஐப் எம்.காசிம்)

சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவற்றை சொந்தக்காரரிடம் கையளிக்க உச்சளவிலான நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது எனவும், இது தொடர்பில் வேறு கட்சிகள் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை மட்டும் விட்டு மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சிலாவத்துறையில் கடந்த சனிக்கிழமை இரவு (07/05/2016) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

சிலாவத்துறை காணிப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டக் கூட்டங்களில் ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் மிகவும் இறுக்கமாக வலியுறுத்தியிருக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மக்களின் காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்தும் இருப்பது மனித நேயமல்ல.58dc6aa9-b044-48fd-9102-08bf39e05b16

பயங்கரவாதத்தை முறியடித்து, சமாதான சூழலை உருவாக்கி எமது பிரதேசத்தில் எம்மை மீளக்குடியேற உதவிய அரசுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், முஸ்லிம்களாகிய நாம் என்றும் நன்றியுணர்வு உள்ளவர்களாகவே இருக்கின்றோம். இருப்போம். அதற்காக தொடர்ந்தும் நாம் வாழ்ந்த பூமிகளில் நிலை கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. அந்தவகையில் பாதுகாப்புத் தரப்பினர் தமக்குத் தேவையான இடத்தை மட்டும் வைத்துவிட்டு, ஏனைய இடங்களை குறிப்பாக மக்கள் வாழ்ந்த இடங்களை கையளிப்பதே தார்மீகமாகும்.

சிலாவத்துறையை பொறுத்த வரையில் இந்தக் கிராமத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்தப் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எமது கட்சியின் மூலம் உருவாக்கி சாதனைப் படைத்தோம். முசலிப் பிரதேச சபையை எமது கட்சி கைப்பற்றியது. உங்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமே இவற்றைச் சாதிக்க முடிந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு சதிகள் இடம்பெற்றதால் எமது கட்சியில் போட்டியிட்ட யஹியா பாயை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. அவரை நாம் என்றுமே மறக்க முடியாது.1fe93c8c-e79a-4bfb-919f-ae99483502a0

சிலாவத்துறை மக்கள் ஒன்றுபடுவதன் மூலமே வீட்டுத்திட்ட பிரச்சினை, காணிப் பிரச்சினை ஆகியவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். கடந்த காலங்களில் காணிப் பங்கீடு தொடர்பில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் உடன்பாடு காணமுடியாத நிலையில் இருந்ததால், இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் போய்விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எவரையும் குறை கூறவில்லை. எனக்கு எவரிடமும் தனிப்பட்ட கோபதாபங்கள் கிடையாது. நான் உங்களை ஒருபோதும் மறக்கவுமில்லை, மறக்கவும் மாட்டேன்.

எனது அரசியல் வாழ்வில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டி நேரிட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் உங்களுக்குச்  சொந்தமான காணிகளில் உங்களை மீள்குடியேற்ற நான் முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருவதால் அதனைத் தடுப்பதற்காக இனவாதிகள் கூச்சலிடுகின்றனர். எனக்கெதிராக நீதிமன்றத்தில் “காடழிப்பு” என்ற போர்வையில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். வில்பத்துக் காட்டை நான் அழித்து வருவதாக இன்றும் இனவாதிகள் திட்டமிட்டு செய்திகளைப் பரப்பி வருகின்றனர். மாற்றுமொழிப் பத்திரிகைகளில் என்னைப் பற்றி அவதூறான செய்திகளை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிடுகின்றனர். எனினும், நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன். இறைவன் எனக்கு நிரம்பிய சக்தியை வழங்கியுள்ளான். இறைவனுக்குப் பொருத்தமாக நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என அமைச்சர் கூறினார்.

Related posts

பொதுபல சேன ஜனாதிபதி கவலை

wpengine

ராஜமெவுனம் களைந்த அதாவுல்லா மீண்டும் அம்பாரையில்

wpengine

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine