இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

(கரீம் ஏ. மிஸ்காத்)

மாதம் ஆறாயிரம் ரூபாகொடுப்பனவிற்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள், வாழ்க்கைச் செலவுமற்றும் குடும்பச் சுமைகாரணமாக ஆசிரிய உதவியாளர் பணியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாழ்க்கைச் சுமையைப் போக்க ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்றவர்கள், நியமனமே வாழ்க்கைக்குச் சுமையானதால் இடைவிலகிச் செல்கின்றனர். இந்நிலைமை தொடருமானால், இவர்கள் முழுமையான அரசசேவையாளராகும் போது, நியமிக்கப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் பணியில் இருக்கமாட்டார்கள்.

அண்மைய அரசகணக்கீட்டின்படி 5பேர் கொண்டகுடும்பமொன்றுக்கு 50 முதல் 60ஆயிரம் வரை மாதச் செலவுக்குத் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் விடயத்தில் அரசும், அமைச்சர்களும் தீவிரகவனம் செலுத்தவேண்டும் என்பதே சங்கத்தின் வினயமான கோரிக்கையாகும்.

அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலமே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறே மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்தின் அனுமதியின் மூலம் இந்த ஆசிரியஉதவியாளர்களின் வாழ்க்கைச் சுமைப் பிரச்சினைக்கும் தீர்வுகாணமுடியும்.

அதாவது, கொடுப்பனவுபெறும் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள இவர்களை நிரந்தரசம்பளம் பெறும் ஆசிரியர்களாக நியமனமாற்றம் செய்வதன் மூலம் இதனைச் சாதிக்கமுடியும். இதற்கு தற்போது அமுலில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவைபிரமாணக் குறிப்பில் இடமுண்டு.

பிரமாணக் குறிப்பின் விதிமுறைகளில், க.பொ.த. உயர்தரக் கல்வித் தகைமைபெற்றவர்களில் இருந்து, எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை மற்றும் பாடசாலை வெற்றிடத்திற்கேற்ப புதியநியமனங்களும். ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடைமுறைகள் அனைத்தும் இந்த ஆசிரியஉதவியாளர் நியமனத்தின் போது கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆசிரியஉதவியாளர்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆசிரியர்சேவைக்குள் உள்ளீர்ப்பதில் சட்டச்சிக்கல் எதுவுமில்லை.

அவ்வாறு இவர்கள் உள்ளீர்க்கப்படும்போது, அவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் வகுப்பு 3 தரம்- ii க்கு நியமிக்கப்படுவார்கள். இதன்போது அவர்கள் நியமனம் பெற்ற திகதியில் 13,410 ரூபா அடிப்படைச் சம்பளம் பெறத்தகுதி பெறுவார்கள். ஏனைய கொடுப்பனவுகளும் கிடைக்கும்.

2016.01.01இல் 16,276 ரூபா அடிப்படைச் சம்பளத்திற்கும், 9,896 ரூபா சீராக்கல் படிக்கும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 7,800 ரூபாவுக்கும் உரித்துடையவர்கள் ஆவர்கள். 176 ரூபாவிலான வருடாந்த சம்பளஏற்றமும் கிடைக்கும்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ’10ஆயிரம் ரூபாசம்பள அதிகரிப்பு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விரைவில் இவர்களுக்கு சம்பள அதிகரிப்புவழங்கப்படும்’. என்றும், கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ‘நாங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றோம். இவர்களின் சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு;ள்ளது. இதற்கான முடிவை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவை எடுக்குமென நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, 6ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 10ஆயிரம் ரூபாவாக மாற்றும் முயற்சியைக்  கைவிட்டு, ஆசிரிய உதவியாளர் நியமனத்தை நிரந்தர ஆசிரியர் நியமனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுமாறு சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares