Breaking
Sun. Dec 10th, 2023

(அபூ செய்னப்)

இரண்டு கிராமங்களையும் பிறிப்பதற்காக நான் வரவில்லை,மாறாக இந்தப்பிரதேசத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த பேருந்து தரிப்பிட நிலையத்தை திறந்து வைத்து அதனை உங்களிடம் கையளிக்கவே நான் வந்துள்ளேன். ஒரு அரசியல் வாதியாக இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியை நான் மக்களுக்காக செய்கின்றேன். அது பட்டியிருப்பு பேருந்து தரிப்பிடம் என்று வரவேண்டுமா? அல்லது களுவாஞ்சிக்குடி பேருந்து  தரிப்பிடம் என்று வரவேண்டுமா என்ற விடயமெல்லாம் இரண்டு கிராமத்தின் தலைமைகள்,புத்தி ஜீவிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றுடன் பேசி செய்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் தெரிவித்தார்.

பிரதியமைச்சரின் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிக்குடியில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிட நிலையத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அமீர் அலி இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

உங்கள் பிரதேசத்தில் தேக்க நிலையில் இருக்கின்ற அபிவிருத்திப் பணிகளை பற்றி நீங்கள் சிந்தித்தீர்களா? உங்கள் பிரதேசத்து பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, இங்கிருக்கின்ற இளைஞர்,யுவதிகளின் வேலையில்லாப்பிரச்சினை,இன்னும் முடிவு காணப்படாத காணிப்பிரச்சினை, செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக இருக்கின்ற பாதைகளின் அபிவிருத்திப்பிரச்சினை,கணவர்மர்களை இழந்து வாழ்வாதாரத்திற்கான வழியின்றி தவிக்கின்ற விதவைப்பெண்களின் சுய தொழில் பிரச்சினை இப்படி தீர்க்கப்படாமலே பல பிரச்சினைகள் இந்தப்பிரதேசத்தில் இருக்கும்போது அதனை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் அதனை செய்ய நாங்கள் வருகின்ற போது இந்த மாவட்டத்தின் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகள் எம்மை இனவாதியாக காட்ட முனைகின்ற நிகழ்ச்சி நிரலை செய்து வருகின்றன.

இந்தப்பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பேருந்து தரிப்பிடத்தேவை இப்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திப்பணிகளை இந்த பட்டியிருப்பு,களுவாஞ்சிக்குடி மக்களை மையமாக வைத்தே செய்யப்பட்டுள்ளது இதனைக்கூட நல்லவிதமாக பார்க்கின்ற,பாராட்டுகின்ற மனோநிலையை அவர்களிடம் காணவில்லை.7b08da28-d7d4-4e49-8602-2cf75756acf4
எனக்கு வாக்களிக்க வேண்டாம், தமிழருக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று மேடைகள் தோறும் என்னைப்பற்றியே இந்த மாவட்டத்தின்  ஒரு அரசியல் வாதி பேசி வருகிறார். நானும் சொல்கிறேன் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம், முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி அவர்களுக்கு வாக்களியுங்கள்.அவரை உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யுங்கள் அவரின் மூலமாக இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியை கொண்டு செல்லுங்கள். முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி ஒரு நேர்மையான நல்ல அரசியல்வாதி கடந்த தேர்தலில் அவருக்கு நீங்கள் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்திருக்க வேண்டும். அவரை தோல்வியடையச் செய்து இந்தப்பிரதேசத்திற்காக வரப்பிரசாதங்களை இழந்துவிட்டீர்கள்.

இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்திப்பணிகளை முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஆலோசனைகளின் படியே நடைபெறும்,எனவே அவரைப் பலப்படுத்துங்கள். மாறாக மிகப்பெரிய அபிவிருத்திப்பணியொன்றை நாம் நிறைவு செய்து உங்கள் கரங்களுக்கு தருகின்ற போது அந்தப்பெயரை வையுங்கள்,இந்தப்பெயரை வையுங்கள் என்று ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரன் இந்த அணியிலும் இளைய சகோதரன் அந்த அணியிலும் இருந்து கொண்டு பிரிந்து கோசம் போடாதீர்கள். கோசம்  போடுவதனால் எதனையும் சாதித்து விட முடியாது.36b85228-c0d6-4793-a6ec-4d481413297c

ஆகக்குறைந்தது இரண்டு கிராமங்களை ஒற்றுமைப்படுத்தி,ஒரு நிகழ்ச்சியிநிரலுக்குள் அவர்களை கொண்டுவர முடியாத இந்தத் தமிழ்த்தலைமைகள் வடக்கையும்,கிழக்கையும் ஒன்றிணைத்து அதற்குள் ஒரு திருப்திகரமான ஆட்சியை எப்படி தரமுடியும். எனவே நீங்கள் உணர்வு பெருங்கள் எதிர்காலத்தில் நான் தேர்தல் கேட்பேனா இல்லையா என்பது முடிவு செய்யப்படாத விடயம். ஆனால் இப்போது எனக்கிருக்கும் அதிகாரங்கள் பற்றி எனது மரணத்திற்குப் பின் நான் கேட்கப்படுவேன். அங்கு நான் பதிலளிக்க இங்கு இவற்றை செய்தே ஆகவேண்டும்.எனது பணிகள் முஸ்லிம்,தமிழ், சிங்களம் என்று மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது மாறாக எல்லா இன மக்களையும் எனது சேவைகள் சென்றடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே எதிர்காலத்தில் உங்கள் பிரதேசங்களின் அபிவிருத்தியில் நான் கரிசனையுடன் செயற்படுவேன்,இந்தப்பிரதேசத்தில் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி உங்களது வாழ்வாதாரப்பிரச்சினையை மேம்படுத்தும் வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்.நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் உங்கள் ஒற்றுமை மூலம் சாதிக்க முடியும். என அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி பேருந்து நிலையம் என்று அமைக்கப்படிருப்பதை,பட்டிருப்பு என்று மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை முடிவில் பிரதியமைச்சர் பேசி சமரசம் செய்துவைத்தார். ஆர்ப்பாட்டக்கார்ர்கள் பிரதியமைச்சருக்கு கைலாகு கொடுத்து விலகிச்சென்றார்கள்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின் ஆலோசகர் சோ. கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் மட்டு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், பிரதேச செயலாளர் கோபால ரட்ணம், டாக்டர் சுகுணன், உள்ளூராட்சி ஆணையாளர் சித்திரவேல், போக்குவருத்து சபையின் பிராந்திய பிரதம முகாமையாளர் சித்தீக் பிரதி  அமைச்சரின் இணைப்பாளர்களான கலீல், கண்ணன் மற்றும் அரச அதிகாரிகள்,பிரதேசமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *