Breaking
Sat. Apr 20th, 2024

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அவசியம் பற்றிய அறிக்கைகள் அண்மைக்காலமாக ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துகின்றது.

இவ்வாறு அறிக்கைகளை விடுகின்றவர்கள் முஸ்லிம் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா நிராகரிக்கப்பட்டவர்களா ? அல்லது மாற்று மதத்தவர்களின் தயவின் மூலம் அரசியல் செய்பவர்களா?  இதயசுத்தியுடன் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையை வலியுருத்துகின்றார்களா? அல்லது தங்களது எதிர்கால அரசியல் பிழைப்புக்காக காய்நகர்த்துகின்றார்களா?

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் பலயீனப்படுத்துவதற்காக எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்ததனால், அதன் எதிரிகலெல்லாம் ஒன்று சேர்ந்து முஸ்லிம் காங்கிரசை அழித்து அதன் தலைவர் ரவுப் ஹக்கீமை ஓரம் கட்டுவதற்கான புதிய முயற்சிதான் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பா ?

யதார்த்த நிலைக்கப்பால், ஆழமாக சிந்திக்காமல் மேலோட்டமாக பார்க்கின்றபோது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அவசியம் என்றே சிந்திக்க தோன்றும். ஆனால் கடந்த காலங்களில் புதிதாக முளைத்த முஸ்லிம் தலைவர்களது வரலாறுகளையும், கற்றுத்தந்த பாடங்களையும் நோக்குவது மட்டுமல்லாது, எம்மவர்களது அடிப்படை நோக்கம் என்ன என்று ஆழமாக அறிந்தவர்களால் இந்த கூட்டமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களின் பழம்பெரும் கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமையிலேயே ஏனைய தமிழ் கட்சிகளும், முன்னாள் போராளி இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ரீதியில் தமது இலக்கை நோக்கி பயணிக்கின்றார்கள். அதேபோல் முஸ்லிம் கூட்டமைப்பினை வலியுருத்துகின்றவர்களினால், முஸ்லிம் மக்களின் தனித்துவ கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும்படி ஏன் அழைப்பு விடுக்க முடியவில்லை ?

தமிழர்களது தியாக அரசியலை எமது வியாபார அரசியலுடன் எவ்வாறு ஒப்பிட்டு பார்க்க முடியும்? த.தே.கூட்டமைப்பை போன்று நாங்களும் உருவாக்குவதென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகின்ற கட்சிகளையும், முன்னாள் போராளிகளையும் யாரென்றும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் முதலில் நாம் அறிய வேண்டும்.

தமிழ் மக்களுக்கான உரிமையினை அடையும் பொருட்டு, அன்றைய  தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் அவர்களினால் 1949 ஆம் ஆண்டில் தமிழ் அரசு கட்சி உருவாக்கப்பட்டு சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டங்கள் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களினால் அடக்கப்பட்டது. இதனால் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல் போராட்டத்தின் மூலமாக பெற முடியாதென்றும், அது ஆயுதம் தரித்த வண்முறை போராட்டத்தின் மூலமே பெற முடியுமென்றும் உணர்ந்துகொண்ட அன்றைய தமிழ் இளைஞ்சர்கள், தங்களது உயிர்களை தியாகம் செய்து ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமது எதிர்கால சந்ததியினர்களுக்காக உரிமையினை பெற களத்தில் குதித்தனர்.

இதற்காக பல குழுக்கள் மூலமாக ஆயுத இயக்கங்கள் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற முன்னணி இயக்கங்களாகும். இந்த இயக்கங்களை உருவாக்கிய தலைவர்களோ, அல்லது அதன் ஏனைய அங்கத்தவர்களோ ஒருபோதும் தமிழ் அரசு கட்சியில் அங்கத்துவம் வகித்ததுமில்லை. பதவி நிலையில் இருந்ததுமில்லை.

அப்படியிருந்தும் அவ்வியக்கங்களின் பாசறையில் வளர்ந்த இன்றைய தமிழ் தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும், தாங்கள் பிரிந்து தனித்தனியாக செயற்படுகின்றபோது, தமிழர்களின் அரசியல் சக்தி வலுவிழந்து அது பேரினவாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்ற காரணத்துக்காகவும், தங்களுக்கிடையில் இருக்கின்ற அனைத்து கருத்து வேறுபாடுகளையும் களைந்துவிட்டு, தமிழர்களின் பழம்பெரும் கட்சியான தமிழரசு கட்சியில் ஒன்று சேர்ந்து அக்கட்சியிலேயே தேர்தல்களிலும் போட்டியிடுகின்றார்கள்.

மாறாக பெயரளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் கட்சியில் இயங்குகின்றார்களே தவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியல்ல.

அத்துடன் தமிழ் தலைவர்கள் மக்களிடம் ஒன்றும், சிங்கள அரச தலைவர்களுடன் இன்னொன்றும் என நயவஞ்சக அரசியல் ஒருபொழுதும் செய்யவில்லை. மாறாக தமது சமூகத்தின் விடுதலைக்காகவும், உரிமைகளினை பெற்றுக்கொள்வதற்காகவும் தங்களது பொருளாதாரங்களை இழந்து, உயிர்களை அர்ப்பணித்தத்துடன் சொல்லொண்ணா துயரங்களையும் எதிர்கொண்டார்கள்.

ஆனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அரசியல் கட்சிகளின் நிலைமைகள் வேறுபட்டது. தங்களது சுயலாபங்களுக்காக காலத்துக்குகாலம் காளான் முளைப்பது போன்று கட்சிகள் முளைப்பதும், பின்பு அது காணாமல் போவதும் முஸ்லிம் மக்களுக்கு பழக்கப்பட்டுப்போன விடயங்களாகும். இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடனோ, தலைவர்களுடனோ எந்தவகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.

இக்கட்சியில் உள்ளவர்களும், அதன் தலைவர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து முளைத்தவர்கள். தமிழர்களுக்கு எவ்வாறு தமிழரசு கட்சி இருக்கின்றதோ அதுபோல முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் எண்ணும் பழம்பெரும் தனித்துவ கட்சி இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் கற்றதுடன், தங்களுக்கு அரசியல் முகவரியினையும் பெற்றுவிட்டு, பின்பு தங்களது சுயநலங்களுக்காக பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஏதோ சில காரணங்களை கூறிக்கொண்டு அக்கட்சியை அழிப்பதற்கு முற்படுகின்றார்கள். இவர்கள் கூறுகின்ற எந்தவித காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா தலைமையிலான நல்லாட்சியினை கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அணியினர் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் ஒருகட்டமாக முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எண்ணும் மாயை ஒன்று மகிந்த ராஜபக்சவுக்கு இப்போது தேவைப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொழும்பு நட்சத்திர விடுதி ஒன்றில் பசில் ராஜபக்ஸ தலைமையில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதாஉல்லாஹ், ரிசாத் பதியுதீன், பசீர் சேகுதாவூத், சேகு இஸ்ஸதீன் போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த இரகசிய கலந்துரையாடலை கிழக்கு மாகான சபை உறுப்பினர் தவம் அவர்கள் பகிரங்க படுத்தியிருந்தார்.

இங்கே சில கேள்விகள் எழுகின்றது. கடந்த ஆட்சியில் முஸ்லிம்களின் தனிப்பெரும் கட்சியான முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு பசில் ராஜபக்ஸ எவ்வாரெல்லாம் சூழ்சிகள் மேற்கொண்டார் என்பது நாங்கள் அறியாத விடயமல்ல. அப்படியிருந்தும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அமைப்பதற்கு பசில் ராஜபக்ஸ ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?

பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு நான்காவது தடவையாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரவுப் ஹக்கீம் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தால் அவரது நிலைப்பாடு எவ்வாறு இருந்திருக்கும்? அதாஉல்லாஹ் தோல்வியடையாது இருந்திருந்தால் இந்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு பற்றி சிந்தித்து இருப்பாரா? தன்னை ஒரு சத்திய தேசிய தலைவராக சுயவிளம்பரம் செய்யும் ரிசாத் பதியுதீன் அவர்கள் தன்னை தவிர வேறு யாராவது இந்த முஸ்லிம் கூட்டமைப்புக்கு தலைமைதாங்க அனுப்பதிப்பாரா?

விடயம் இதுதான். அதாவது இவர்களுக்கு தேவைப்படுவது பதவி. அதாஉல்லாஹ், பசீர் சேகுதாவூத் போன்றோர்களுக்கு அரசியல் அதிகாரமில்லை. அத்துடன் மகிந்த ஆட்சியில் அதிகாரம் செலுத்தியது போன்று இந்த ஆட்சியில் முடியவில்லை என்ற மனவேக்காடு ரிசாத் பதியுதீனிடம் காணப்படுகின்றது. இதனை வெளிப்படையாக கூறிக்கொள்ள முடியாத நிலையில் அவர் காணப்படுகின்றார்.

எனவே எப்படியாவது இந்த நல்லாட்சியை கவிழ்த்து, மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பது இவர்களது விருப்பம். இதற்கு முஸ்லிம் மக்களை தங்களுக்கு சார்பாக திரட்ட வேண்டும் என்ற நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகின்றது.

மெரும்பாலான முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசினை ஆதரிக்கின்றார்கள். ரவுப் ஹக்கீம் இதற்கு தலைவராக இருக்கும் வரைக்கும் பேரினவாதிகளினால் தங்களுக்கு ஏற்ப முஸ்லிம் காங்கிரசை திசைதிருப்ப முடியாது. எனவே முஸ்லிம் மக்களின் ஒற்றுமை என்னும் போர்வையில், புதிய கட்சி ஒன்றினை உருவாக்கி அதன்மூலம் முஸ்லிம் காங்கிரசை செயலிழக்க செய்து, அதன் தலைவர் ரவுப் ஹக்கீமை ஓரம்கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் வாக்குகளை எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக திசைதிருப்பி அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும், தங்களை முஸ்லிம் மக்களின் ஏக தலைவர்களாக முடிசூடிக்கொள்ளவும் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் இந்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.

தற்காலிகமாக முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் எதிராக ஒன்று சேரும் இவர்களுக்கிடையில் எந்தவித ஒற்றுமையும் இல்லை. அதாஉல்லாஹ் தலைவராகுவதை ரிசாத் பதியுதீன் விரும்ப மாட்டார். அதுபோல் ரிசாத் பதியுதீன் தலைவராகுவதனை அதாஉல்லா விரும்பமாட்டார். இதுதான் களநிலவரம். இதற்கிடையில் எப்படியும் பதவிகளை சுருட்டிக்கொள்ள வேண்டும் என்பது இவர்களுக்கு எடுபிடியாக செயற்படுகின்ற ஏனைய உதிரிகளின் எண்ணம்.

மக்களை ஏமாற்றாமல் உண்மையில் இதய சுத்தியுடன் முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமை பட்டு எங்களது இலக்கினை அடையும் பொருட்டு ஒரே சக்தியாக செயற்படும் எண்ணம் இருந்தால், தங்களுக்கு அரசியல் முகவரி வழங்கி, தங்களை வளர்த்து ஆளாக்கி இந்த நிலைமைக்கு கொண்டுவந்த தனிப்பெரும் கட்சியான முஸ்லிம் காங்கிரசின் கீழ் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.

கடந்த காலங்களில் தங்களால் வாய்நிறைய தலைவர் தலைவர் என்று மேடை மேடையாக யாரை புகழ்ந்து திரிந்தார்களோ, அதே தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எங்களது பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்திக்கொள்வதுடன், எமது மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதுதான் உண்மையான ஒற்றுமையாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *