ஆப்கானிஸ்தானியர்களே !! உங்களை உளமாற வாழ்த்துகிறேன்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை)

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையிலான போட்டி இடம்பெற்றிருந்தது.சில போட்டிகள் கிரிகட் ரசிகர்களால் மிகவும் சுவாரசியமான போட்டியாக எதிர்பார்க்கப்படும்.

ஆப்கானிஸ்தான் சற்று பலம் குறைந்த அணி என்பதாலும் மேற்கிந்திய தீவுகள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணி என்பதாலும் இப் போட்டி மீதான கிரிகட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.அதற்கு ஏற்றாப் போல் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் ஒரு அணியாகும்.இதற்கு இவ் இலக்கு மிகவும் சாதாரணமானதாகவே நம்பப்பட்டது.எனினும்,ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சின் முன் நிலை தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணியினரால் 20 ஓவர்களில் 117  ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்திருந்தது.

 

குழு ஒன்றில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதற் தோல்வி இது என்பதுடன் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் வெற்றியும் இதுவாகும்.எதிரியை பலம் குறைந்ததாக ஒரு போதும் மட்டிட்டுக் கொள்ளக் கூடாது.எதிரி பலம் குறைந்தவராக இருந்தாலும் பொடு போக்குடன் செயற்படக் கூடாது.இறைவன் ஒருவரிற்கு நலவை நாடினால் அதனை யாராலும் தடுத்து விட முடியாது.இறைவன் ஒருவருக்கு இழிவை நாடினால் அதனையும் யாராலும் தடுத்து விட முடியாது.இவைகள் இதில் பொதிந்துள்ள படிப்பினைகளாகும்.எது எவ்வாறு இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணியினரிடத்தில் வெற்றிகளின் போது இன்னுமொருவரை இழிவுபடுத்தும் விதமான செயற்பாடுகளை காண முடியாது.சிக்சரை சிம்பிளாக அடிக்கும் ஆட்டநாயகன் கிரிஸ் கெயில் இவ் ஆட்டத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுடன் சிறிதேனும் சஞ்ஞலமின்றி புகைப்படம் எடுத்தமை இதன் போது இடம்பெற்ற ஒரு நெகிழ்வான சம்பவமாகும்.

 

இவ் வெற்றி யுத்த வடுக்களை தங்களது தோள்கள் மீது சுமந்து திரியும் ஆப்கானிஸ்தானிய வீரர்களுக்கு அதிக அக மகிழ்வைக் கொடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.இதிலாவது அவர்கள் மகிழ்ந்து கொள்ளட்டும்.இக் கிரிக்கட் சமரில் மேற்கிந்திய தீவுகள்  அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியமை அவ் அணி உலக கிண்ணத்தை தூக்கியதற்கு சமனாகும்.மேற்கிந்திய தீவுகள் அணி இதற்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தூக்கினாலும் அதற்கு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே அமையும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares