உலக முஸ்லிம்கள் சகலரும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இத்தினத்தில், இலங்கை முஸ்லிம்கள் பெரும் சவால்களுக்கு மத்தியில் இப்பெருநாளை கொண்டாடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இறைதூதர்கள் எல்லோரும் சத்தியத்துக்காகவே தியாகங்கள் புரிந்தனர். ஏகத்துவ சிந்தனையில் ஒன்றுபட மறுத்த கூட்டத்தினர் அல்லது சத்தியத்தைப் புரிந்துகொள்ள தவறிய மக்களிடம் உண்மையை உணரச் செய்ய இறைதூதர்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் மானிடனுக்கான படிப்பினைகள்தான். இந்தப் படிப்பினைகளை உணர மறுக்கின்ற சக்திகள்தான் மானிடத்தின் எதிரி.
சுயநலத்துக்காக அல்லது நிலையான இருப்புக்காக சிலர் மேற்கொண்டவைகளின் விளைவுகளுக்கு முழு இலங்கையரும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. எமது உடன்பிறப்புக்கள் நாளாந்த உணவுக்காக அல்லல்படுகையில், பெருநாளை களியாட்டமாக மாற்ற எவரும் முயற்சிக்கக் கூடாது.
உழ்ஹிய்யா கடமைகளை பொறுப்புடனும் முறையுடனும் மேற்கொண்டு, அவற்றின் இறைச்சிகள் இல்லாதோரைச் சென்றடைய வழிகள் செய்யப்படல் அவசியம். இறைதூதர் இப்றாஹிமின் தியாகம் மார்க்கமாக்கப்பட்டிருப்பதும் இதற்காகத்தான். விலங்குகளை பலியிடுவதால் மாத்திரம் உள்ளச்சத்தை வளர்க்க முடியாது. இதிலுள்ள உன்னத கோட்பாடுகளை புரிவதுதான் உண்மையான இறையச்சமாகும்.
இந்த இறையச்சத்துடன் முஸ்லிம்கள் சகலரும், நமது நாட்டு நெருக்கடிகள் நீங்கப் பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.