பிரதான செய்திகள்

ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தையும் சாய்ந்தமருது கல்முனை மக்களையும் 19 வருடமாக ஏமாற்றியது போதும்

சாய்ந்தமருது பள்ளிவாயல் மொட்டை ஆதரிப்பது முழு சமூகத்தையும் பாதிக்கும் என ரவூப் ஹக்கீம் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும்,

கல்முனை சாய்ந்தமருது பிரச்சினை என்பது இன்று நேற்றைய பிரச்சினை அல்ல. நீண்ட கால பிரச்சினை. இதனை அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் கல்முனை தொகுதியில் அதிக வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ்
நினைத்திருந்தால் மிக இலகுவாக பெற்றிருக்க முடியும்.ஆனால் தமிழ் கூட்டமைப்புக்கும், புலம்பெயர் அமைப்புக்களின் பணத்துக்கும் அடிமையான ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதை வைத்து முழு கல்முனை சமூகத்தையும் ஏமாற்றி வந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்கு அழைத்து வந்து தாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவோம் என அவரிடம் எழுதிக்கொடுத்து சமூகத்தை ஏமாற்றிய ஹக்கீம் சொல்கிறார் இன்றைய சாய்ந்தமருதின் முடிவு சமூகத்துக்கு பாதிப்பாம்.

சாய்ந்தமருது தனி ஊராக இருப்பினும் அதன் பிரச்சினை முழு முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததை மறுக்க முடியுமா?
ஹக்கீம் நினைத்திருந்தால் 1987 வர்த்தமாணியை இன்னொரு வர்த்தமானி மூலம் ரத்து செய்து கல்முனையை பழையபடி நான்காக அறிவித்து சாய்ந்தமருதுக்கும் சபை கொடுத்திருக்க முடியும்.

ஒரு திருமணம் நடந்து அதன் மூலம் பிள்ளைகளும் பெற்ற பின் பிரச்சினை ஏற்பட்டால் நீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பின் மூலம் திருமணம் பிரிக்கப்படுகிறது. அதே போல் 87ம் ஆண்டு வர்த்தமானி மூலம் இணைக்கப்பட்டதை அமைச்சரவை அமைச்சராக இருந்தும் ஒரு வர்த்தமானி மூலம் பிரிக்க முடியாமை என்பது ஹக்கீமினதும் ஐ.தே.க அரசினதும் கையாலாகாத தன்மையா அல்லது தமிழ் கூட்டமைப்புக்கு அடிமையானதன் எதிரொலியா?
ஹக்கீமாலும், ரணில், சஜித்தாலும் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட சாய்ந்தமருது மக்கள் கோத்தாவை ஆதரிக்க முன் வந்தமை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழ் கூட்டமைப்புக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் அடிபணியாத, சொன்னதை செய்யும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கட்சியை ஆதரிப்பதன் மூலம் சாய்ந்தமருது பிரச்சினையை தீர்த்து சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்பது சமூகம் சார்ந்த முடிவாகும்.

கல்முனை பிரச்சினை என்ன என்பதையும் அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதையும்பொதுஜன பெரமுனவுடன் இணைந்த முதல் முஸ்லிம் கட்சியான உலமா கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெளிவாக சொல்லியுள்ளது. அதனை பசில், மஹிந்த மிக தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதை மஹிந்தவின் சாய்ந்தமருது மேடைப் பேச்சு சொல்கிறது.

ஆகவே ஹக்கீம் இந்த முஸ்லிம் சமூகத்தையும் சாய்ந்தமருது கல்முனை மக்களையும் 19 வருடமாக ஏமாற்றியது போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர்’ – ​சரத் வீரசேகர!

Editor

துாதுவர் இப்ராகிம் சகீப் அன்சரியினை வெளியேற்ற வேண்டும்-வைகோ கோரிக்கை

wpengine

நெல்லுக்கான உரிய நிர்ணய விலை இல்லாமையினால் மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

Editor