உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை இன்று போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை இன்று போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்தனர்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புல்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார். இதை கண்டித்து பிரிவினை வாத அமைப்புகள் காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வன்முறை கும்பல் போலீஸ் நிலையங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தின. போலீஸ் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 3 நாட்கள் வன்முறைச்சம்பவங்கள் நீடித்தன. இதையடுத்து மத்திய அரசு கூடுதலாக ராணுவத்தையும் பாதுகாப்பு படையினரையும் அனுப்பி வைத்தது. கலவரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் 3 நாட்கள் நடந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் துப்பாக்கி சூட்டில் 32 பேர் பலியானார்கள். 800 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் நிலையங்கள் தாக்கப்படுவதாலும், ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்படுவதாலும் போலீஸ் நிலையங்களுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார். தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பினாலும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

முன்னதாக, கடந்த மே மாதம் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ராணுவத்தினர் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்த ஹுரியத் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை அப்போது கைது செய்த போலீசார் அவரை வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கலவரம் வெடித்துள்ள நிலையில் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று வெளியே வந்த சையத் அலி ஷா கிலானியை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

கிலானியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டகாரர்களை விரட்டியடித்தனர்.

பின்னர், பட்காம் மாவட்டத்தில் உள்ள ஹும்ஹமா பகுதி போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் சையத் அலி ஷா கிலானியை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முஹம்மது யாசின் மாலிக், மிர்வாயிஸ் மவுலபி ஒமர் பரூக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டுக் காவலிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்

wpengine

பிரதேச செயலாளரின் அசமந்த போக்கு! அவசர அறிவுறுத்தல்களோ, வெள்ள நிவாரண ஏற்பாடுகளோ செய்யவில்லை

wpengine

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க போட்டிப்பரீட்சை

wpengine