வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இனவாத அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை எழுப்ப முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வட மாகாணத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் தமக்கு சமஷ்டி ஆட்சியே வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதை இங்கு சுட்டிக்காட்டிய, டில்வின் சில்வா, அதனை அடிப்படையாகக் கொண்டு தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இனவாதத்தை விதைக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.
இவ் இரு குழுக்களும் இவ்வாறு செய்வது நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தால் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற போதம் இன்றி அனைவரும் பாதிக்கப்பட்டதாகவும், பாரிய பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் பிற நாடுகளின் தலையீடுகளுக்கு வழி அமைக்கப்பட்டதாகவும், முக்கியமாக இந்தியா இலங்கை அரசியலில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய சூழலில், வடக்கு, தெற்கின் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றனர். வடக்கில் விக்னேஸ்வரனின் இனவாதம் தெற்கு இனவாதிகளுக்கு ஊட்டமளிப்பதாகவும், தெற்கின் மஹிந்த உள்ளிட்ட குழுவினரின் இனவாதம் வடக்கு இனவாதிகளுக்கு ஊட்டமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவை இரண்டும் நாட்டுக்கு தீங்கானது எனவும் டில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.