பிரதான செய்திகள்

றிஷாத் பதியுத்தீன் கைது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம்

இலங்கையை ஆளும் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாகச் செயல்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புப்படுத்தி ராஜபக்சே அரசு 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடைசெய்வதாக அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளில் பெரும்பாலானவை பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து மக்களிடையே பரப்புரை செய்த அமைப்புகளாகும். மேலும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மதங்களை கடந்து தொண்டாற்றி வரும் அமைப்புகளாகும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இலங்கை அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிககையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாகச் செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் பங்கு கொண்ட இலங்கை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் பேசுகையில்

“அன்று எமது சகோதரர்களைத் தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கை பொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர். தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம். மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரைத் துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம். அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏனையவர்களைக் கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்.” என்று குறிப்பிட்டது கவனத்திற்குரியது.

கார்டினல் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளது போல் அரசியல் ஆதாயத்திற்காக கைக்கூலிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளைத் தப்பவிட்டு எவ்வகையிலும் அத்தாக்குதலுடன் தொடர்பில்லாத முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்துள்ளது ராஜபக்சே அரசு சிங்கள இன வெறியில் மூழ்கியுள்ளதை எடுத்து காட்டுகின்றது.

முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்து தனது சிறுபான்மை விரோத போக்கை வெளிப்படுத்திய ராஜபக்சே அரசு இன்று அதிகாலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைஅவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு உதவியதாக அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நிலங்களையும் ராஜபக்சே அரச கைப்பற்றி வருகின்றது. அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது. இந்த இடங்களை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டப்படுகின்றார்கள்.

ராஜபக்சே அரசின் சிறுபான்மை விரோத போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடுத்து ஈழத் தமிழர்கள், இப்போது முஸ்லிம்கள் என அடுத்தடுத்து குறி வைத்து சிங்கள இனவாத அதிகார வர்க்கம் தாக்கி வருகின்றது. இந்த சம்பவங்கள் இலங்கை சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியுடன் செயல்படும் இலங்கை அரசை மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பதோடு, தனது சிறுபான்மை விரோத போக்கைக் கைவிட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

Related posts

நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கடிதம்

wpengine

முல்லைத்தீவில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை!

Editor

சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,187 முறைப்பாடுகள் பதிவு!

Editor