பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

திபெத்திய அகதிகளை ஏற்றது போல மியான்மரிலிருந்து அடைக்கலம் புகும் ரோஹிங்கியா முஸ்லீம்களையும் இந்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரில் தாக்குதலுக்கு ஆளாகும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட மேடையில் சீமான் பேசியதாவது :

ரோஹிங்கிய முஸ்லீம்களுக்காக சென்னையில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் எனக் கேட்கிறார்கள்.
தமிழன் தான் இந்த போராட்டத்தை நடத்த தகுதியுள்ளவன். உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆரத்தழுவி வாழ்ந்த ஒரே இனம் தமிழ் இனம் தான்.

உடலில் எங்கு காயம் பட்டாலும் கண் அழுவது போல, உலகில் எங்கு மனித இனம் காயம்பட்டால் தமிழ் இனம் அழும், அது தான் இந்த மண்ணின் பெருமை.
மியான்மரைத் தாயகமாகக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசானது மூன்றாம்தரக் குடிமக்கள் போல நடத்தி, அவர்களுக்கு உரிய உரிமைகள் யாவற்றையும் மறுத்து வருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

அத்தோடு, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது ரோஹிங்கியா முஸ்லீம்கள் யாவரையும் கொடூரமாகக் கொலை செய்து இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டிருக்கிற படங்களை இணையவெளியில் பார்க்கிறபோது நம் உள்ளத்தில் உதிரத்தை வரவழைத்து, கண்முன்னே சக மனிதன் சாகிற போதும் அதனைத் தடுத்து நிறுத்த வழியற்ற கையறு நிலையில் நிற்கிறோமே என்ற ஆற்றாமையை ஏற்படுத்துகிறது.
தனது தாய்நிலத்தை விட்டு பிரிந்து இன்னொரு இடத்திற்காக அகதியாக இடம்பெயர்வது தான் பிரிவுகளிலேயே கொடுமையானது.
அத்தகைய கொடுமையை ரோஹிங்கியா முஸ்லீம்கள் இன்றைக்கு அனுபவித்து வருவது பெருந்துயரமாகும்.

ஆகவே, ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டியதும் அம்மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டியதும் மானுடச்சமூகத்தின் தலையாய கடமையாகும்.
அகிம்சாமூர்த்திக் காந்தியைத் தேசத் தந்தையாக ஏற்றிருக்கிற இந்தியப் பெருநாடு இந்த இனபடுகொலைக்கு எதிரான தனது கணடனத்தை உலக அரங்கில் வலிமையாகப் பதிவு செய்திட வேண்டுமென நாமெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் இந்த நேரத்தில் அந்த மக்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தி அகதிகளாக வந்தவர்களையும் திருப்பி அனுப்புவோம் என்று கூறுவது மிகக்கொடுமையான செயலாகும்.

திபெத்திய அகதிகளை ஏற்றது போல மியான்மரிலிருந்து அடைக்கலம் புகும் ரோஹிங்கியா முஸ்லீம்களையும் இந்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

Related posts

யுத்த காலத்தில் செயலிழந்து போன வட பகுதி தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை! அமைச்சர் ரிஷாட்

wpengine

கூட்டணியின் பொது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக தகவல்கள்

wpengine

வவுனியா வ/தாருல் உலூம் பாடசாலை பாராட்டு விழா! பிரதம அதிதியாக மஸ்தான்

wpengine