(Balamurukan)
கடந்த வெள்ளிக்கிழமை (20/10/2016)இரண்டு யாழ்- பல்கலைக்கழக மாணவர்கள் பொலீசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. குடும்பத்தினதும் சமூகத்தினதும் ஒளிமயமான எதிர்கால கனவுகளுடன் பல்கலைக்கழகம் வந்த அந்த இரண்டு உயிர்களினதும் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தினரதும் பல்கலைக்கழக சமூகத்தினதும் துயரங்களை தமிழ் மக்கள் பேரவையும் பகிர்ந்து கொள்கிறது.
சட்டத்தை காப்பாற்றுவதாக கூறிக்கொள்பவர்களே இக்கொடூர கொலைகளை புரிந்தது மட்டுமல்லாது , சம்பவம் வெளிப்படையாக அப்பகுதி மக்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அதனை மூடிமறைத்து வெறும் விபத்தினால் ஏற்பட்ட மரணம் என சம்பவங்களை சோடிக்க முற்பட்டமை மிகப்பாரதூரமான குற்றச்செயல் என்பதோடு, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்குப்பொறிமுறையானது, எந்த மாற்றமுமின்றி மேலாதிக்க மனோநிலையிலேயே இப்போதும் தொடர்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது.
வெளிப்படையான ஒரு சம்பவத்தையே மூடிமறைக்கமுற்பட்ட பொலிஸாரின் இச்செயற்பாடு , அவர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.