யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகிலிருந்து பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு துறையினருக்கும், கடற்படையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பொன்று வத்திராயன் பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பில் 60.256 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா அடங்கிய 34 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மீட்கப்பட்டுள்ள போதைப்பொருடன் சந்தேகநபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
