பிரதான செய்திகள்

மூவினங்களின் இன நல்லுறவுக்காக உழைத்தவர் அஸ்வர் அமைச்சர் றிஷாட்டின் அனுதாபம்

(ஊடகப்பிரிவு)

சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியல் வானிலே ஒரு தாரகையை இழந்து விட்டோம். இன, மத பிரதேச வாதங்களுக்கப்பால் நின்று மக்கள் பணி செய்த மாமனிதர் அஸ்வர்.
பாராளுமன்ற உறுப்பினராய், அமைச்சராய், ஆலோசகராய், ஒம்புட்ஸ்மனாய் இருந்து அரசியல் மற்றும் சமூகப் பணி செய்த பெரு மகன் அவர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் பணியாற்றி மக்கள் மனதை வென்றவர். முஸ்லிம் சமூகத் தலைவர்களான டாக்டர்.டீ.பீ. ஜாயா, டாக்டர் எம்.சி. எம். கலீல், கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் ஆகியோருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1989 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்தில் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரானார். 1994 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு ஆகியவற்றிலும் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். முஸ்லிம் சமய கலாச்சார இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இவர் ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. வாழ்வோரை வாழ்த்தினார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு தென்னிலங்கைக்கு வந்த முஸ்லிம் அகதிகளுக்கு இவர் செய்த உதவிகள் அளவிட முடியாதவை.

மும்மொழி ஆற்றல் படைத்த மர்ஹம் அஸ்வர் சிறந்த நாவன்மை மிக்கவர். நல்ல மொழிபெயர்ப்பாளர், அருமையான கிரிகெட் வர்ணனையாளர், சிறந்த எழுத்தாளர். கவிஞரும் கூட. இவ்வாறு பல்துறைகளிலும் பரிமாணத்தைக் கொண்ட மர்ஹூம் அஸ்வர் முஸ்லிம் சமூகத்தின் ஒரு வரலாற்று பொக்கிஷமாக விளங்கியவர்.
முன்னாள் சபா நாயகர் மர்ஹூம் பாக்கீர் மாக்காரின் அந்தரங்க செயலாளராக பணியாற்றியவர். அகில இலங்ககை முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகளின் சம்மேளனத்தை கட்டியெழுப்புவதில் பாக்கீர் மாக்காருடன் இணைந்து அரும்பணியாற்றியவர். மர்ஹ_ம் எஸ்.எல்.எம். சாபி மரைக்காரின் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் கல்வி பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் அளவிட முடியாதவை. முஸ்லிம் மீடியா போரத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்தவர்.

மர்ஹூம் அஸ்வர் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியலை தொடர்ந்தார். அரசியல் மட்டுமன்றி இலக்கிய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். முதன் முதலில் அரபா மைதானத்தில் இருந்து சிங்கள மொழி மூலம் நேர் முக வர்ணனை செய்த பெருமை இவரையே சாரும். தினகரனின் மகரகம செய்தியாளராகவே இவரது எழுத்துப்பணி ஆரம்பமாகியது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.

Related posts

காரணங்களைக் கூறி முறைப்பாடுகளை நிராகரிக்கும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை.!

Maash

கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் அமைச்சர் றிசாத் துரித ஏற்பாடு

wpengine

கட்சியொன்றினை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கிராமத்தின் அபிவிருத்தியை செயற்படுத்த முடியவில்லை

wpengine