கட்டுரைகள்பிரதான செய்திகள்

மூனை முட்ட முடியாது முஸ்லிம் கட்சிகள் திரும்பியதா..?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

 

இலங்கை நாடு சர்வதேசத்தின் கோரப் பிடிக்குள் அகப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக இலங்கை நாட்டை நோக்கி சர்வதேச தலைவர்களின் படை எடுப்புகளும் அதிகரித்துள்ளன.சர்வதேச தலைவர்களின் இலங்கை விஜயத்தில் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைனின் வருகை,இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் வருகை,ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகை ஆகியவற்றை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்களாக கோடிட்டுக்காட்டலாம்.இலங்கை நாட்டில் தமிழ் அரசியல் தலைமைகள் தீர்வை நோக்கிய தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதால் சர்வதேசத் தலைவர்களின் பார்வைகள் அனைத்தும் இலங்கை தமிழ் மக்கள் மீதே உள்ளன.இது வரை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெயர் போன எந்த விதமான போராட்டங்களையும் முன்னெடுக்காமை,அவர்கள் கடைப்பிடிக்கும் அரசியல் கொள்கை ஆகியன சர்வதேச தலைவர்களின் பார்வைகள் முஸ்லிம்களின் மீது விழாமைக்கான பிரதான காரணமாக குறிப்பிடலாம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்திருந்த போது அமைச்சர் ஹக்கீம் அவரை சந்தித்திருக்கவில்லை.இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளிற்கமைய துருக்கி சென்றிருந்தார்.இருந்த போதும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலி தலைமையில் மு.கா சார்பாக ஒரு குழு சந்தித்திருந்தது.இந்திய அரசானது இலங்கை தமிழர்களின் தீர்வு விடயத்தில் தெளிவாக இருப்பதால் இலங்கை முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடனான தமிழர்களுக்கான தீர்வு மிக இலகுவானது என்பதை நன்கே அறியும்.குறிப்பாக இந்த சந்திப்பின் போது வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.முஸ்லிம் கட்சிகள் பல சர்வதேசத் தலைவர்களின் புறக்கணிப்பு உள்ளான நிலையில் இந்த தீர்விற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் தான் அவர்கள் இவர்களை சந்தித்ததற்கான காரணமாகவும் கூறலாம்.இவ்வாறான சந்திப்புக்களில் மு.காவின் தலைவர் பங்கு பற்றுவதே பொருத்தமானது.

சர்வதேச தலைவர்கள் இலங்கை அரசின் தீர்வு விடயத்தில் தமிழர்கள் பக்கம் மாத்திரமே தங்களது பார்வையை செலுத்துகின்றனர்.இலங்கை வருகை தந்திருந்த பான் கீ மூன் தெரிவித்துள்ள கருத்துக்களை எடுத்து நோக்கினால் இதனை மறுதலிக்காது அனைவரும் ஏற்றுக்கொள்வர்.1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரவோடு இரவாக வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து கிழக்கு முஸ்லிம்களின் மீது அடிமைச் சாசனம் எழுதப்பட்டமை வரலாறு.தமிழர்களின் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களை புறக்கணித்த தீர்வுக்கு பல தடவைகள் பலரும் முயன்ற வரலாறுகளுமுள்ளன.யுத்தத்தின் போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பலரை மீள் குடியேற்ற வேண்டிய தேவை உள்ளது.முஸ்லிம்களது பல்லாயிரக்கணக்கான காணிகளையும் விடுவிக்க வேண்டிய தேவையுமுள்ளது.இலங்கை அரசு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியை வில்பத்து வனமாக வர்தமானியிலும் பிரகடனம் செய்துள்ளது.யுத்த காலத்தில் பால்லாயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டும்,காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.யுத்தத்தினால் பாதிக்கப்பட முஸ்லிம் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கூட வழங்கப்படவில்லை.இப்படி இலங்கை முஸ்லிம்கள் பலவாறான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழர்களின் மீள் குடியேற்றம்,காணிகள் விடுவிப்பு ஆகியவற்றிற்கு பேரினவாத சிந்தனை தான் தடையாகவுள்ளது.முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்,காணிகள் விடுவிப்பிற்கு தமிழர்கள்,சிங்களவர்கள் என இன இனமும் சேர்ந்து தடையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.தமிழர்கள் சர்வதேசத்தின் உதவியுடன் இவ்விடயங்களுக்கான தீர்வுகளை நாடிச் செல்வதால் அதே சர்வதேசத்திடம் முஸ்லிம்களின் உண்மை நிலைகளை புரிய வைக்க வேண்டியது முஸ்லிம்கள் கட்சிகளின் தலையாய கடமையாகும்.சர்வதேசம் இலங்கை அரசுக்கு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் வழங்கும் போது அதில் முஸ்லிம்களும் நனைந்து கொண்டு மிக இலகுவாக பல விடயங்களை சாதித்துக்கொள்ளலாம்.தமிழர்களுக்கான தீர்வு விடயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிப்பிற்கு,பாதிப்பிற்குள்ளாகாமை உறுதி செய்யப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாது இலங்கையில் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலும் பான் கீ மூனிற்கு பல தரப்பிலிருந்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.தமிழ் அரசிய தலைவர்கள் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாகவே அதிகம் கரிசனை காட்டி வருகின்றனர்.தேர்தல் முறை மாற்றம் மூலம் த.தே.கூவிற்கு பெரிதான பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை.தொகுதி வாரித் தேர்தல் முறைமை காணப்பட்ட காலப்பகுதியில் கூட தமிழ் அரசியல் கட்சிகள் தங்களது உறுப்புருமைகளை தக்க வைத்துள்ளது.இது விடயத்தில் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை.இவற்றில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தான் கரிசனை கொள்ள வேண்டும்.

ஐ.நா சபையின் மனிதயுரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் 2016-02-06ம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த போது அமைச்சர் ஹக்கீம் சிரியாவிலே அகதிகளுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார்.அமைச்சர் றிஷாத் இலங்கையில் இருந்த போதும் எந்த விதமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.இவ்விடயமானது முஸ்லிம்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இதன் போது அமைச்சர் றிஷாத் தான் ஐ.நா சபையின் மனித உரிமையாணையாளரை சந்திக்க அனுமதி கோரியும் மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.அதே போன்று தனது ஆதரவாளர்களைக் கொண்டு ஐ.நா சபையின் முன்றலில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்.இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் றிஷாத் தனது காட்டமான எதிர்ப்பை வெளிப்படுத்திருக்க வேண்டும்.அதனை செய்யாமை கண்டிக்கத்தது.இருந்த போதிலும் அவரது செயற்பாடு அமைச்சர் ஹக்கீமுடன் ஒப்பிடுகையில் பாராட்டுக்குரியது.இதுவரை அமைச்சர் ஹக்கீம் அவரை  சந்திக்காதது பற்றி வாய் திறக்கவே இல்லை.

கடந்த 31.08.2016ம் திகதி புதன் கிழமை  ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார்.இச் சந்தர்ப்பத்தையாவது இரு கட்சிகளும் பயன்படுத்துமா என்ற ஆதங்கம் முஸ்லிம்களிடையே காணப்பட்டது.அமைச்சர் ஹக்கீம் நடமாடும் சேவை நடாத்திக்கொண்டு அம்பாறையில் இருந்தார்.அமைச்சர் றிஷாத்தும் பல்வேறு நிகழ்வுகளோடு அம்பாறையில் இருந்தார்.குறிப்பாக இருவரது நோக்கங்களும் சேவைகளை மையப்படுத்தியிருந்ததால் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை இருவரும் சந்திக்காது போனாலும் மக்களை வேறு திசை நோக்கி திருப்பக் கூடிய வாய்ப்புள்ளது,அம்பாறை மாவட்ட மக்களின் வாயை பூட்டினால் அது இலங்கை முஸ்லிம்களின் வாயையே கட்டியதற்கு ஈடாகும்.இருவரும் தங்களுக்கு கிடைத்த திடீர் அழைப்பை ஏற்று அம்பாறையில் இருந்து கொழும்புக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களது திடீர் பிரயாணம் பான் கீ மூனை சந்திப்பதில் முஸ்லிம் கட்சிகள் புறக்கணிப்பிற்கு உள்ளானமையை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அமைச்சர் ஹக்கீம் பான் கீ மூனை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர் என்ற அடிப்படையில் சந்தித்துள்ளார்.இது அமைச்சர் ஹக்கீமிற்கும்,மு.காவிற்கும் கிடைத்த வரலாற்று கௌரவம் என்பதை மறுப்பதற்கில்லை.அமைச்சர் ஹக்கீம்  சமூகம் அக்கறை கொண்டவராக இருந்தால் எதிர்காலத்தில் இந்த கௌரவம்,அறிமுகத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல விடயங்களை சர்வதேசம் கொண்டு சாதிக்க முடியும்.எனினும்,இதனை முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சந்திப்பாக ஒரு போதும் குறிப்பிட முடியாது.இதில் த.தே.கூவின் தலைவர் இரா சம்பந்தன் சார்பாகக் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கலந்து கொண்டிருந்தார்.இது முக்கிய ஒரு சந்திப்பாக இருந்திருந்தால் த.தே.கூவின் தலைவர் இரா சம்பந்தனே கலந்துகொண்டிருப்பார் என்பதை சிறு பிள்ளையும் அறிந்துகொள்ளும்.இதில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பியின் தலைவர் கலந்துகொள்ளவில்லை.அப்படியானால் ஜே.வி.பியிற்கு நாட்டின் நலன் மீது அக்கறையில்லையா என்ற வினாவை எழுப்பிப் பார்த்தால் இதில் கலந்து கொண்டு பெரிதான நன்மைகளை சுவைத்திட முடியாது என்பதை அறிந்துகொள்ளலாம்.இதில் கலந்து கொள்ளும் ஒரு கட்சித் தலைவரால் அரசுக்கு எதிரான ஒரு வார்த்தையை கூட பயன்படுத்த முடியாது.முஸ்லிம்களின் தேவைகளை சுட்டிக் காட்டும் போது பல இடங்களில் அரசை தாக்கிப் பேச வேண்டிய பல விடயங்களுமுள்ளன.இலங்கை அரசுக்கு சிறுபான்மையினங்களில் ஒன்றான முஸ்லிம்கள் தங்கள் பக்கமே உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்திற்கு தேவை.இதனை இன்னுமொரு வகையில் கூறுவதானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை அரசின் மீது சர்வதேசத்தினால் உந்தப்படும் தீர்வுப் பொறிமுறைகளை இலகுவாக்க தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாக முஸ்லிம்களை இவ்வரசு பயன்படுத்துகிறது.அதற்கு அமைச்சர் ஹக்கீம் துணை போகிறார்.அமைச்சர் ஹக்கீம் இதனைப் புறக்கணித்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பான் கீ மூன் முஸ்லிம்களையும் தனது நிகழ்ச்சி நிரலில் நேரமொதிக்கி சந்தித்திருக்கலாம்.

பான் கீ மூனை சந்திக்க முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கருத்து தெரிவிக்கும் போது இதனை ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரித்திருந்தார்.இதிலிருந்து பான் கீ மூனுடனான சந்திப்பின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.அமைச்சர் ஹக்கீமின் இச் சந்திப்பை வைத்து அவருக்கு ஏதோ சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது போன்று மு.காவின் ஆதரவாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.அமைச்சர் ஹக்கீம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு  சந்தர்ப்பத்தை தவறவிட்டதைக் கூட உணர முடியாதவர்களாக எமது சமூகமுள்ளது.எமது சமூகத்தின் இழி முகத்தைக் கூட இவ்விடயத்தில் விளங்கிக்கொள்ளலாம்.இவ்வாறான மு.காவின் ஆதரவாளர்கள் இருக்கும் வரை அமைச்சர் ஹக்கீமின் காட்டில் கனத்த மழைதான் பொழியும்.

மு.கா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து களமிறங்கியமையே இவ் அந்தஸ்தை பெற்றமைக்கான காரணமாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா தனித்து களமிறங்கியதன் நன்மைகளின் இதுவும் ஒன்றாகும்.கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காவானது  ந.தே.முவுடன் இணைந்தே போட்டியிட்டிருந்தது.இந்த கூட்டே மு.காவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியையும் பெற்றுக்கொடுத்திருந்தது.அமைச்சர் ஹக்கீமின் இவ் வரலாற்றுக் கௌரவத்தில் ஒரு பெரும் பங்கு ந.தே.முவின் தலைவர் அப்துர் ரஹ்மானிக்கு இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அமைச்சர் றிஷாத் 02.09.2016ம் திகதி ஹில்டன் ஹொட்டலில் வைத்து பான் கீ மூனை சந்தித்துள்ளார்.இது ஒரு திறந்த அறையில் அரசின் பிரதிநிதிகள் சிலர் உள்ள போதே நடைபெற்றுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.த.தே.கூ,வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரை பான் கீ மூன் யாழ்ப்பாணம் சென்று  சந்தித்திருந்தார்.இதன் போது குறித்த சந்தித்தவர்களது பிரதிநிதிகளே அங்கு கலந்து கொண்டிருந்தனர்.இப்படியான சந்திப்புக்களையே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் மேற்கொண்டிருக்க வேண்டும்.முஸ்லிம்களின் பிரச்சினைகள் திறந்த வெளியில் கதைக்கும் ஒன்றுமல்ல.இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் 01.09.2016ம் திகதி வியாழக் கிழமை கல்முனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது தான் பான் கீ மூனை சந்திக்க இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் பதில் தரவில்லை எனவும் அதன் பின்னர் மிகக் கடுமையான தொனியில் தான் பேசிய பிறகே தனக்கு பான் கீ மூனை சந்திக்க அழைப்பு வந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.அதாவது அமைச்சர் றிஷாத் பான் கீ மூனை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையிலேயே அழைக்கப்பட்டிருந்தார்.இதற்கு அவர் அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் ஹக்கீம் பான் கீ மூனை சந்திக்க அழைப்பு விடுத்ததாக அறிய முடியவில்லை.இது தொடர்பில் இவர் எங்கும் வாய் திறக்கவுமில்லை.மு.கா பான் கீ மூனுக்கு தங்களைச் சந்திக்க பிரத்தியேக அழைப்பு விடுத்திருந்தால் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தனி அழைப்பு விடுத்திருக்க மாட்டார்.

பான் கீ மூனின் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் கட்சிகள் பான் கீ மூனை சந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.இன்று இலங்கையில் உள்ள இரு முஸ்லிம் கட்சிகளை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அவ்வளவு பலம் பொருந்தியதாக குறிப்பிட முடியாது (மு.காவிடம் ஏழு உறுப்பினர்களும் அ.இ.ம.காவிடம் ஐந்து உறுப்பினர்களுமே உள்ளனர்).இவ்விரு கட்சிகளும் தவிர்ந்து வெளியில் 9 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இப்படி இருக்கையில் அவர் ஏன் முஸ்லிம் கட்சிகளை நோக்கி கோரிக்கை விடுக்க வேண்டும்.அதுமட்டுமல்ல அமைச்சர் கபீர் காசிம் ஐ.தே.வின் செயலாளராக உள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சராகவுமுள்ளார்.அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏன் இவர்களை நோக்கியெல்லாம் இக் கோரிக்கையை விடுக்கவில்லை.அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூட சு.கவில்  பலம் பொருந்திய ஒரு நபர்.கிழக்கு மாகாணத்தில் சு.காவை கட்டியெழுப்பும் பொறுப்புக் கூட அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்படியான ஒருவர் முஸ்லிம் கட்சிகளை நோக்கி சந்திக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளமை முஸ்லிம் கட்சியொன்றின் அவசியத்தை தெளிவாக  உணர்த்தி நிற்கின்றது.இப்படியானவர் இவ்விரு முஸ்லிம் கட்சிகளுடனும் இல்லாமை அவரது சுயநல அரசியல் போக்க அறிந்துகொள்ளச் செய்கிறது.

இன்று இலத்திரனியல் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒருவராக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் திகழ்கிறார்.கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பை கூறலாம்.இம் மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் சர்வதேசத்தின் பார்வையை இப் பிரதேசத்தின் மீது திருப்ப தன்னாலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.அந்த வகையில் யாருமே சிறிதேனும் கவனம் செலுத்தாத போதும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பான் கீ மூனின் கவனத்தை இப் பக்கம் திருப்ப 27.08.2016ம் திகதி சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதி ஐ.நா சபை அலுவலகம் உட்பட சில இடங்களுக்கும் அனுப்பி இருந்தார்.இக் கடிதமானது 29.08.2016ம் திகதி திங்கள்  அல்லது 30.08.2016ம் திகதி செவ்வாய் கிழமையே உரிய இடத்தை சென்றடைத்திருக்கும்.இவர் கடிதம் அனுப்பிய இடங்களுக்கு ஒரு நாளைக்கு பல நூறு கடிதங்கள் செல்லும்.இதன் காரணமாக இக் கடிதம் சில வேளை பான் கீ மூன் இலங்கையை விட்டு சென்ற பின்பு குறித்த நபார்களால் வாசிக்கப்பட்டாலும் வாசிக்கப்பட்டிருக்கலாம்.விரைவான செயற்பாட்டிற்கு கடிதம் அனுப்புவது ஒரு போதும் பொருத்தமுமல்ல.இவ்வாறான சர்வதேசத் தலைவர்களின் நிகழ்ச்சி நிரல்களை தயாரிக்கும் வெளிவிவகார அமைச்சுக்கு இவர் கடிதம் அனுப்பாமை இவரது இம் முயற்சியின் முதற் குறைபாடாகும்.அதுமாத்திரமல்ல இவர் அழைத்த மறு கணம் ஓடி வர பான் கீ மூன் ஒன்றும் சிறு பிள்ளையுமல்ல.குறிப்பாக இவ்வாறான சர்வதேச தலைவர்களின் நிகழ்ச்சி நிரல்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாகவாவது நிறைவுற்றுவிடும்.இப்படி இருக்கையில் ஒரு நாளுக்கு முன்பு அழைப்பு விடுக்கும் இச் செயலை என்னவென்று சொல்வது.ஒரு மாகாண சபை உறுப்பினரின் அழைப்பை ஏற்கும் அளவு பான் கீ மூன் சிறியவரல்ல.மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பான் கீ மூனின் கவனத்தை மட்டக்களப்பு பக்கம் ஈர்க்க உளச் சுத்தியுடன் செயற்பட எண்ணியிருந்தால் தனது கட்சியான மு.காவினூடாக முயன்றிருக்க வேண்டும்.இதற்கு முயற்சிக்காது ஷிப்லி பாறூக் கடிதம் அனுப்பியமை இது தொடர்பில் தான் கவனம் செலுத்தினேன் என்ற ஊடக மாயையை ஏற்படுத்துவதற்கு என்பதாகவே பொருள் எடுக்கலாம்.

ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை முஸ்லிம் கட்சிகள் மீள பாழாக்கிக் கொண்டன.முஸ்லிம் கட்சிகள் இலங்கை அரசுக்கு இயன்றவரை அழுத்தம் வழங்கி முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 07-09-2016ம் திகதி புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது அறுபதாவது கட்டுரையாகும்.

Related posts

அனர்த்த நிலைமை பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

wpengine

19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்-ராஜபக்‌ஷ

wpengine

பேஸ்புக் காதல் முறிவு! அதிரடிபடை வீரர் தற்கொலை

wpengine