கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல! விக்னேஸ்வரனுக்கு சாட்டை அடி – YLS ஹமீட்

முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாககொண்டபோதும் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில்  நடைபெற்ற  நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளமை  முஸ்லிம்களின் தனித்துவத்தை அழிப்பதற்கான ஒரு சதி என அகில இலங்கை மக்கள காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இதுவிடயமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முதலாவது ஒரு சமூகத்தின் அடிப்படை அடையாளத்தை தீர்மானிக்கின்ற உரிமை அந்த சமூகத்திற்கே இருக்கின்றது. ஆனால் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே மறுத்து ஒரேமொழியைப் பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன்சமூகத்தின் அடையாளத்திற்குள் அந்த சமூகத்தை மறைக்கமுற்படுகின்ற ஒரு விடயத்தை முன்னாள் நீதியரசரான ஒருவர்செய்வது ஒரு தகுதியான விடயமா ? என்று கேட்கவிரும்புகின்றேன்.

முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தை மறுக்க  முற்பட்டநிகழ்வு இதுதான் முதல் தடவையல்ல. 80 களின் மத்தியகாலப்பகுதியில் இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையே இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது அன்றைய கிழக்கைச் சேர்ந்த 5 முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அப்போதைய இந்திய இணை அமைச்சர்களான சிதம்பரம் மற்றும் பண்டாரிஆகியோர் இலங்கையில் முஸ்லிம்கள் என்ற தனி சமூகம்இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களின் வணக்கஸ்தலங்கள் வேறே தவிர நீங்களும் தமிழர்களே என்று எமது அடையாளத்தை மறுத்தனர்.

முஸ்லிம்கள் தங்களை ஏன் தமிழர்களாக அடையாளம் காட்டாமல் முஸ்லிம்களாகவே அடையாளம் காட்டுகின்றார்கள் என்ற விடயத்திற்குள் வருவதற்கு முன் கௌரவ முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றேன். கடந்தகாலங்களிலும் சம காலங்களிலும் தமிழர் தரப்பினர் முஸ்லிம்களை தங்களில் ஓர் அங்கமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆகக் குறைந்தது முஸ்லிம்களோடு இணைந்தவாழுகின்ற ஒரு விருப்பத்தை அல்லது உணர்வை எப்பொழுதாவது வெளிப்படுத்தி இருக்கின்றார்களா ?  அல்லது அதற்கு மாறாக முஸ்லிம்களுடன் என்றுமே இணைந்து வாழத்தயாரில்லாத ஒரு விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கின்றார்களா ? என்ற கேள்விக்கு அவருடைய பதில் என்ன ?
முஸ்லிம்கள் ஒரு தனித்துவ சமூகமானபோதிலும் தமிழர்களுடன் இரண்டறக் கலந்து வாழ்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லையா ? அவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ நாங்கள் தயாரில்லை என்ற அவர்களின் நிலைப்பாட்டை  வக்கிரத்தனமான முறையில் அவர்கள் வெளிப்படுத்தவில்லையா?

வரலாற்றின் சில பக்கங்களை புரட்டிப்பாருங்கள் அந்தநாட்களில் முஸ்லிம்கள் தமிழ் அரசியலுடன் இணைந்து அரசியல் செய்ய முற்படவில்லையா ? எம்.சி. அஹமட், செனட்டர் மசூர் மௌலானா, டாக்டர் உதுமாலெப்பை போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் அரசியலுடன் கைகோர்க்கவில்லையா ?  மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் பெற்றுத்தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத்தருவான்” என்று முழங்கினாரே ! தமிழர்களுடன் இணைந்து வாழவேண்டுமென்ற விருப்பமில்லாமலா ?
80 களின் ஆரம்பத்தில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் பல இயக்கங்களின் பெயர்களில் முனைப்பெடுத்தபொழுது அந்த இயக்கங்களில் முஸ்லிம் வாலிபர்கள் இணையவில்லையா ? எதற்காக அவர்கள் இணைந்தார்கள். அவ்வாறு பேதமில்லாமல்இணைந்த முஸ்லிம் வாலிபர்களுக்கு என்ன நடந்தது. அவர்கள் எந்தெந்த இயக்கங்களில் இணைந்தார்களோ அந்த இயக்கங்களாலேயே அவர்கள் கொல்லப்பட்டார்களே என் ? ஒன்றுபட்டு வாழ வந்தவர்களை உதைத்துத் தள்ளுகின்ற செயலாக இந்தச் செயல் இல்லையா ? இதனைச் செய்தது யார் ? முஸ்லிம்களா ?

தமிழர் போரட்ட ஆரம்ப காலங்களில் அரச படைகள் திடீர்சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஆயுதம் தூக்கிய தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து முஸ்லிம்கள் பாதுகாக்கவில்லையா ? மட்டுமல்லாமல் தமிழ் இயக்கப் போராளிகளுக்கு முஸ்லிம் வீடுகளிலிருந்து முஸ்லிம் தாய்மார்கள் ஒவ்வொருவரும் ஐம்பது, நுறு என்று உணவுப்பார்சல்கள் தயார் செய்து அவர்களுக்கு வழங்கவில்லையா ? தமிழர்களை துருவமாக முஸ்லிம்கள்பார்த்திருந்தால் இவற்றினைச் செய்திருப்பார்களா ? அவ்வாறு தமிழர்களுடன் இணைந்து செல்ல முயற்சித்த முஸ்லிம் சமூகத்திற்கு தமிழ் போராளிகள் செய்த கைமாறு என்ன ? காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபொழுது ஈவிரக்கமின்றி புகுந்து சுட்டார்கள். ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்திற்குள் புகுந்து அறுத்தார்கள்.  அழிஞ்சப் பொத்தானையில் கொலைக்களத்தை அரங்கேற்றினார்கள். கல்முனையில், சாய்ந்தமருதில், மாளிகைக்காட்டில், அக்கரைப்பற்றில், சம்மாந்துறையில் என்று கிழக்கின் பட்டி தொட்டியெல்லாம் புகுந்து முஸ்லிம்களை சுட்டுத் துவம்சம் செய்தார்களே! முஸ்லிம்கள் செய்த குற்றமென்ன ? முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்றால் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள்ஏன் கொல்லப் பட்டார்கள். புனித ஹஜ்ஜூக்குச்சென்று வந்தவர்களையாவது விட்டுவைத்தார்களா? அவர்களையும் சுட்டுத் தள்ளினார்களே அது ஏன் ?
அது போதாதென்று இனச் சுத்திகரிப்பாக வடக்கிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஒரு சில மணி நேரத்திற்குள் வெளியேற்றினார்களே ஏன்?

முஸ்லிம்கள் யார் என்பதற்கு உங்களுடைய அகராதியில் தமிழைத் தாய் மொழியாக்க கொண்டதனால் அவர்களும்தமிழர்கள் தான் என்பது பொருளானால் தமிழர்களைத் தமிழர்களே இனச் சுத்திகரிப்புச் செய்தார்களா ?  அப்படியானால் வடக்கில் எவ்வாறு தமிழர்கள் மிஞ்சினார்கள்? இதற்கு உங்கள் பதிலென்ன ?

அரச படைகளுக்கு எதிராக இந்த இயக்கங்கள் யுத்தம் புரிந்தன. அரச படையில் இருக்கின்ற எல்லோரையும் இனவித்தியாசமின்றி அவர்கள் அரசபடையில் உள்ளவர்கள் என்பதற்காக சந்தர்ப்பம் கிடைக்கின்றபொழுது சுட்டுக்கொன்றால் அதை அரசுக்கு எதிரான  பயங்கரவாதமாகக் கொள்ளலாம். ஆனால் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த பொலிஸ்காரர்களில் தமிழ் பொலிஸ் காரர்களை வேறாகப் பிரித்துவிட்டு முஸ்லிம் மற்றும் சிங்கள பொலிஸ்காரர்களை மட்டும் சுட்டார்களே முஸ்லிம்களும் மொழியால் தனது இனம்தான் என நீங்கள் கருதியிருந்தால் முஸ்லிம்கள் என்பதற்காக எவ்வாறு வேறுபடுத்த முடியும்?

எனவே முஸ்லிம்கள் தங்களை ஒரு தனித்தவ சமூகமாகக்கருதுவது ஒரு புறமிருக்கட்டும். நீங்கள் முஸ்லிம்களை ஒருதனித்துவ சமூகமாகக் கருதாமல் இருந்திருந்தால் இந்த அநியாயங்களைச் செய்திருப்பீர்களா ?

இந்த நாட்டில் சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்கு எதிராக உருவான தமிழ் பயங்கரவாதம் முஸ்லிம்களுக்கு எதிரான இன்னும் ஒரு பரிமாணத்தையும் தனக்குள் எடுத்துக்கொண்டது ஏன் ? முஸ்லிம்கள் தமிழர்கள் என்றால் அவர்களுக்கு எதிராகவும் ஒரு பயங்கரவாதம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் பயங்கரவாதம் யுத்த காலத்தில் மாத்திரம்தான் அரசுக்கு எதிராகவும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகவும் பாய்ந்தது. அதே நேரம் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் பயங்கரவாதம் யுத்தகாலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் முஸ்லிம்கள் மீது பாய்ந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?  2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டுவரை யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. அரசுக்கு எதிராகவோ அல்லது சிங்களவர்களுக்கு எதிராகவோ அந்தக் காலப்பகுதியில் தமிழ் பயங்கரவாதம் எதுவும் செய்யவில்லை. ஆனால் முஸ்லிம்களை துவம்சம் செய்வதை அந்த தமிழ் பய்ஙகரவாதம் நிறுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் பயங்கரவாத்த்தின் வக்கிரம் எந்த அளவுக்கு இருந்ததென்றால் வாழைச் சேனையில் புலிகளால் கொல்லப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்க மறுத்து, அப்பெற்றோர்களின் கண் முன்னாலேயே தீயிட்டுக் கொழுத்திய வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

நான் இங்கு தமிழ் பயங்கரவாதம் என்ற பதத்தைப் பாவிக்கின்றபொழுது பயங்கரவாதம் வேறு தமிழர்கள் வேறு என்று நீங்கள் வியாக்கியானம் கூற வரலாம். உங்களுடைய அவ்வாறான வியாக்கியானம் உண்மை என்றால் அந்தப் பயங்கரவாதத்தைத்தானே உங்களுடைய விடுதலைப் போராட்டமாக ஏற்றுக் கொண்டீர்கள். அவ்வாறாக இருந்தால் சிங்கள பேரினவாதத்திடமிருந்து விடுதலை பெற முற்பட்ட அதேவேளை முஸ்லிம்களிடம் இருந்துமா விடுதலையை எதிர்பார்த்தீர்கள். முஸ்லிம்களிடம் எதை எதிர்பார்த்து முஸ்லிம்கள்மீது  தமிழ் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்றாவது கூற முடியுமா ? எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்பதுதானேஅதன் பொருள். எனவே முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்கின்ற உணர்வு உங்கள் இரத்தத்திலே ஓடுகின்றபோது உங்கள் அரசியலுக்கு தேவைப்படுகின்ற பொழுது முஸ்லிம்களையும் தமிழர்களாக அடையாளம் காட்ட நீங்கள் முற்பட்டுக் கொண்டு முஸ்லிம்கள் அரசியல் தேவைகளுக்காக தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டுவதற்குப் பதிலாக முஸ்லிம்கள் என்ற ஒரு வேறு சமூகமாக அடையாளம் காட்டமுற்படுவதாக குற்றம் சாட்டுகின்றீர்களே ! இதற்கு உங்கள் மனச்சாட்சி இடம் தந்ததா ? ( நான் இங்கு “தமிழர் ” என்ற பொதுப்பதத்தை சில யதார்த்தங்களைப் புரிய வைப்பதற்காக பாவித்த போதிலும் ஓட்டு மொத்த தமிழர்களையும் குறிப்பிடவில்லை : என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணி அவர்களுடன் சமத்துவமாக இணைந்து வாழ விரும்புகின்ற இனிய தமிழ் நெஞ்சங்களை நாம் மறந்து விடவில்லை, நானும் ஒரு தமிழ் பாடசாலையில் கல்வி கற்றவன் , தமழர்களை என் நண்பர்களாக வரித்துக் கொண்டவன்)

பயங்கரவாதிகள் முஸ்லிம்களை அழிக்க முற்பட்டது ஒருபுறமிருக்கட்டும், உங்களது அரசியல் தலைமைகளாவது முஸ்லிம்களை தங்களுடன் அரவணைத்துச் செல்ல முற்பட்டிருக்கின்றார்களா ? அவ்வாறாயின் அக்கரைப்பற்றிலிருந்து ஆலையடிவேம்பைப் பிரித்தார்களே ஏன் ? நிந்தவூரிலிருந்து காரைதீவைப் பிரித்தார்களே ஏன் ? இன்று கல்முனையையும் கூறுபோட முயற்சிக்கின்றார்களே ஏன் ? முஸ்லிம்களுடன் இணைந்து வாழ தமிழ் தரப்பினர் விரும்பியிருந்தால் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேசசெயலக எல்லைக்குள்ளேயே நீங்கள் இணைந்த வாழமறுப்பது ஏன் ?

உங்களுக்குத் தெரியுமா பட்டின சபை அமுலிலிருந்த காலத்திலிருந்து கல்முனையின்  எல்லை கல்முனை ஸாஹிறாக்கல்லுரி வீதியாகும். அந்தக் கல்முனையில் முஸ்லிம்களை அடர்த்தியாகக் கொண்டிருக்கின்ற ஒரு பகுதியை கல்முனைக்குடியிருப்பு என்றும் அது மருவி கல்முனைக்குடி என்றும்அழைக்கப்படுகின்றது. ஆனால் அன்றைய கல்முனைக்குரிய பட்டின சபை, வட்டாரங்கள் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. ஆனால் இன்று புதியஉள்ளுராட்சி சபை வட்டாரங்கள் பிரிக்கப்படுகின்றபொழுது கல்முனையின்  ஒரு அங்கமான மக்கள் குடியிருக்கின்ற குடியிருப்பு பகுதியை கல்முனை என்று அடையாளம் காட்டப்படக் கூடாது என்று உங்கள் தமிழ்தரப்பினர் வாதிடுகின்றார்களே ! இதனைவிடவும் துவேசம் இருக்கின்றதா ? அம்பாரை மாவட்டத்தின் உங்கள் கட்சியைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசுகின்றபொழுது தங்களது துவேச நிலைப்பாட்டை நிறுவுவதற்காக பச்சைப் பொய்யை துணைக்களைத்து கல்முனையில் 90 விகிதம் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களின் விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக கல்முனைக்குடி என்று இன்னுமொரு ஊரைஅதில் சேர்க்க முற்படுவதாகவும் கூறியிருந்தார்.

பட்டின சபைக் காலத்தில் கல்முனையில் 7 வட்டாரங்கள்இருந்து வருகின்றன. 1 தொடக்கம் 3 ஆம் வட்டாரம் வரையுள்ள பகுதிகளில் ஒரேயொரு வட்டாரத்தில் மாத்திரமே தமிழர்கள் முழுமையாகவும், ஏனைய இரண்டுவட்டாரங்களிலும் முஸ்லிம்களும், தமிழர்களும் கலந்து வாழுகின்றார்கள். மிஞ்சிய 4 வட்டாரங்களிலும் முஸ்லிம்கள்மட்டுமே வாழுகின்றார்கள். இந்நிலையில் தமிழர்கள் 90 வீதம் கல்முனையில் வாழுகின்றார்கள்; என்று கூறுவது எவ்வளவுபொய் என்று சிந்தித்தீர்களா ? அந்தப் பொய்யை கூறுவதற்கான காரணம், முஸ்லிம்களுடன் நாங்கள் ஒரு நகரத்தில் கூட இணைந்து வாழ ஆயத்தமில்லை என்பதுதானே ! நிலைமை இவ்வாறிருக்க வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் அதற்காக முஸ்லிம்களையும் தமிழர்களாக அடையாளம் காட்ட வேண்டும்என்று நினைக்கின்றீர்களே ! இது எந்த விதத்தில் நியாயம் ?அதுமட்டுமல்ல  முஸ்லிம்கள் 100 வீதம் வாழுகின்ற கல்முனையில் உள்ள ஒரு வீதிக்கு முஸ்லிம்கள் விரும்புகின்ற ஒரு பெயரைவைப்பதைக் கூட தமிழ் தரப்பினர் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றார்களே ! இந்தத் துவேசத்தை எங்கே போய்சொல்வது?

எனவே முஸ்லிம்கள் ஒரு தனித்துவ சமூகம் என்று முஸ்லிம்கள் கூறுவது ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் தமிழர்கள் அல்லாத வேறு ஒரு சமூகம் என்பதை வரலாறு நெடுகிலும்நிறுவி வந்தவர்கள் நீங்கள், இன்று வடகிழக்கை இணைப்பதற்காக முஸ்லிம்களுக்கு தமிழர்கள் என்ற முத்திரைகுத்த வேண்டாம்.

இந்த நாட்டில் முஸ்லிம்களும் தமிழைத்தான் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றார்கள்.தமிழை நேசிக்கின்றார்கள். தமிழை காதலிக்கின்றார்கள். முஸ்லிம்களும் தமிழ் வளர்க்க பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள். அதற்காக  அவர்கள் தமிழர்கள் அல்ல. ஒரு மனிதன் ஆகக் கூடுதலாக நேசிப்பது அவனது தாயை. ஆனால் முஸ்லிம்கள் தன் தாயை விடவும் நேசிப்பது தன்மார்க்கத்தை. ஒரு முஸ்லிம் எந்த மொழியை வேண்டுமானாலும்பேசலாம். எந்தப் பிரதேசத்திலும் வாழலாம். எந்த நிறத்திலும்இருக்கலாம். ஆனால் அவனை அடையாளம் காண்பது அவனது இறை நம்பிக்கையைக் கொண்டு, அந்த நம்பிக்கைதான் முஸ்லிம் என்ற அடையாளம். உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதனைக் கொச்சைப்படுத்த முற்படவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் த.சிவபாலன்

wpengine

நாவலடி இராணுவ முகாமை அகற்றக்கோரி முஸ்லிம்கள் போராட்டம்

wpengine

சமூர்த்தி கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை! பிரதேச செயலகத்திற்கு முன்பாக பயனாளிகள் பாரிய ஆர்ப்பாட்டம்! போக்குவரத்து பாதிப்பு

wpengine